இயற்கை பருத்தி சேலைகள்

பெண்கள் விரும்பி அணியும் சேலைகள் என்பதும் தற்போது இயற்கை சார்ந்த வகையில் உருவாக்கம் பெறுகின்றன. அதாவது ஆர்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வருகின்றன.

வண்ணமயமான இயற்கை பருத்தி சேலைகள்
இயற்கையை விரும்பும் மக்கள் இயற்கையான பொருட்களால் தயாராகும் பொருட்களின் மீதும் அதிக ஆர்வம் கொள்கின்றனர். பெண்கள் விரும்பி அணியும் சேலைகள் என்பதும் தற்போது இயற்கை சார்ந்த வகையில் உருவாக்கம் பெறுகின்றன. அதாவது ஆர்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வருகின்றன. இவற்றின் அருமை, பெருமை அறிந்து பல பெண்களும் இதனை விரும்பி வாங்கி உடுத்தி கொள்கின்றனர். ஆர்கானிக் பருத்தி சேலைகள் என்பது பருத்தி விளைவது முதல் நெய்தல் வரை அனைத்தும் இயற்கையான முறையில், இயற்கையான பொருட்கள் கொண்டும் தயார் செய்யப்படுகிறது.

ஆர்கானிக் பருத்தி சேலைகள் என்பது தமிழகத்தில் கோயம்புத்தூர், திண்டுக்கல், திருச்சி மாவட்டம் மணமேடு, சேலம் மற்றும் பரமக்குடி போன்ற பகுதியில் உள்ள நெசவாளர்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு பின் விற்பனைக்கு வருகின்றன. ஆண்டுக்கு ஆண்டு மவுசு அதிகரித்து கொண்டே வரும் இயற்கை பருத்தி சேலையின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. இயற்கையோடு இயைந்த வாசமிகு சேலை என்பதால் இதனை நேசத்தோடு பெண்டீர் வாங்கி மகிழ்கின்றனர்.

இயற்கை பருத்தியால் உருவாகும் சேலைகள்

இயற்கை பருத்தி எனும்போது முழுக்க முழுக்க ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் ஆர்கானிக் பருத்தி தான் இச்சேலை தயாரிக்கப்பயன்படுத்தப்படுகிறது. இதற்கென இயற்கை ஆர்வலர்கள் மூலம் பயிர் பருத்தி ஆய்வு செய்யப்பட்டு வாங்கப்படுகிறது. பின் அந்த பருத்தியின் மூலமே நூல் நெய்யப்படுகிறது. இதன் காரணமாகவே இதனை இயற்கை (அ) ஆர்கானிக் பருத்தி சேலை என்கின்றனர். மேலும் நூலில் ஏற்றப்படும் சாயம் மற்றும் வண்ணம் சேர்க்கை என்பது இயற்கை முறையிலேயே அரங்கேற்றப்படுகின்றன.

இயற்கை முறையில் சாயமேற்றுதல்

இயற்கை பருத்தி என்பது நூலாக நூற்பாலைகளில் திரிக்கப்படும். பின் இந்த நூலில் இயற்கை முறை சாய ஆலைகளில் தயார் செய்யப்பட்ட காய கரைசல்கள் கொண்டு மூழ்க வைக்கப்பட்டு சாயம் ஏற்றப்படுகிறது. அதாவது சரிசலாங்கன்னி, அரளிப்பூ, சங்குப்பூ, புளியமரச் சுள்ளி, புளியம்பழம், செவ்வாழை, கடுக்காய், செண்டுமல்லி, பலாசம்பூ, அவரை இலை அவுரி, மாதுளம் தோல், அவுரி போன்றவை உலர வைத்து பொடியாக்கப்பட்டு, அதனை நீரில் ஊற வைத்து காய்ச்சியும், காய்ச்சாமலும் இயற்கை சாயம் உருவாக்கப்படுகிறது. இந்த இயற்கை சாற்றின் கரைசலில் நூல்கள் சாயமேற்றப்பட்டு விதவிதமான வண்ணங்கள் பெறப்படுகிறது. இவ்வாறு உருவாகும் நூலின் வண்ணம் மங்காமல் இருக்க இதனை மறுபடியும் வெற்றிலை சாற்றில் ஊற வைத்த பின் தேங்காய் எண்ணெய் (அ) வேப்ப எண்ணெயில் நனைத்து உலர வைக்கப்படும். இந்த சாயமேற்ற நூல்களில் தான் பருத்தி சேலை நெய்யப்படும்.

கைத்தறி நெசவாளர்கள் மூலமாக இயற்கை சாயம் ஏற்றப்பட்ட பருத்தி நூல்கள் மூலமாக அழகிய வண்ணமிகு சேலைகள் விதவிதமாக நெய்யப்படுகின்றன. இவ்வாறு நெய்யப்பட்ட சேலையே இயற்கை பருத்தி சேலைகள் எனப்படுகிறது. இயற்கை பருத்தி சேலைகள் என்பது மற்ற பருத்தி சேலையை போன்று ரசாயன நாற்றமோ, பசை நாற்றமோ இன்றி முழுக்க முழுக்க மணமணக்கும் வாசத்துடன் வெளி வருகின்றன. இயற்கை பருத்தி, இயற்கை வண்ணம், இயற்கையான வாசம் என்பதில் தனித்து விளங்கும் இச்சேலைகள் மங்கையர் விரும்பும் வண்ண கலவையுடன் விதவிதமான டிசைன்களில் வடிவமைத்து நெய்து தரப்படுகின்றன.

கோடை காலம், மழை காலம் என இரண்ட பருவ காலத்திலும் அணிய ஏற்ற சேலையாக திகழ்கிறது. மேலும் இதன் ரசாயன கலப்பில்லாத நூலும், சாயமும் பெண்களின் உடலோடு ஒட்டி உறவாடும் போது சருமத்திற்கு எந்த பாதிப்ை-யும் எற்படுத்துவதில்லை. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத இயற்கை விவசாய முறையில் பயிர் செய்யப்பட்ட இயற்கை வண்ணம் பூசப்பட்ட இச்சேலைகள் அழகிய தோற்ற பொலிவை தருவதுடன், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இயற்கை பருத்தி சேலைகள் இளநங்கையர்களின் விருப்பமான சேலையாகவும் திகழ்கிறது.

Leave a Reply