அழகு குறிப்புகள்

நாள் முழுவதும் சுறுசுறுப்பும் ஆனந்தமும் வந்து சேர முயன்று பாருங்கள்….

சிரிப்பு… நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்; நம் உடல்நலத்தையும் பாதுகாக்கும். குழந்தைகள் ஆறு வயதுவரை ஒரு நாளைக்கு 300 தடவை சிரிப்பார்கள்; 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிப்பார்கள். ஆனால், இன்றைக்கு வாய்விட்டுச் சிரிப்பதை பெரும்பாலானோர் மறந்துவிட்டார்கள். சிரிப்பு ஒரு நல்ல மருந்து.

மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மாற்றத்தை ஏற்படுத்த சிரிப்பு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்; வலியைக் குறைக்கும்; தளர்ச்சியைப் போக்கும்; மனஅழுத்தத்தில் இருந்து விடுவித்து, நம்மைப் பாதுகாக்க உதவும்; மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இன்றைய அவசர உலகில் பல்வேறு சூழல்களில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. அது வேறு பல நோய்களை உண்டாக்குகிறது. குறிப்பாக, ரத்த அழுத்தம், இதய நோய்கள், நரம்புக் கோளாறுகள், வயிற்றுப்புண் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மனிதர்களை வதைக்கின்றன.

`இத்தகைய நோய்களுக்கு மூல காரணம் மனஅழுத்தம் என்பதால், அதைச் சரிசெய்வதன் மூலம் மற்ற நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்’ என்கிறது இயற்கை மருத்துவம்.

smile

மனஅழுத்தத்தை விரட்ட இறுக்கமான சூழலிலிருந்து விலகி, வாய்விட்டுச் சிரித்தாலே போதும். சிரிப்பு எப்படி சிகிச்சையாகும், அந்த சிகிச்சை எங்கே அளிக்கப்படுகிறது என்பன போன்ற கேள்விகள் எல்லோருக்கும் எழலாம்.

சிரிப்பு சிகிச்சை மிகவும் எளிமையானது மட்டுமல்ல, அதைச் செய்யப்போவதும் நீங்கள்தான் என்கிறபோதே உங்களுக்குச் சிரிப்பு வந்துவிடும். சிரிப்பு சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன் லேசான சுவாசப்பயிற்சி செய்ய வேண்டும்.

மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும்போது கைகளை மேலே தூக்கி, மெதுவாகக் கீழே இறக்க வேண்டும். இப்படி, பத்து தடவை செய்த பிறகு சிரிப்பு சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

சிரிப்பு சிகிச்சையை தனி ஆளாகச் செய்வதைவிட, கூட்டமாகச் சேர்ந்து செய்வது மிகவும் சிறப்பு. கூட்டமாக நின்றுகொண்டு வாயை முழுவதுமாகத் திறந்தபடி சிரிக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் சிரிக்க வேண்டும். இப்படி, சில நிமிடங்கள் தொடர்ந்து சிரிப்பதால் கொழுப்புகள் கரையும்; இன்சுலின் சுரப்பு சீராகும்.

அடுத்ததாக வாயை அகலமாகத் திறந்து மெதுவாகச் சிரிப்பது ஒருமுறை. அதிகச் சத்தமில்லாமல் ஒருவரையொருவர் பார்த்தபடி சிரிக்க வேண்டும். இதன் மூலம் முகத்தசைகள் தளர்ச்சியடையும்; இதயத்துடிப்பு மற்றும் மூச்சு அதிகரிப்பதால் உடல், மனம் சார்ந்த நோய்களிலிருந்து விடுபடலாம்.

உதடுகளை மூடிக்கொண்டு சிரிப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல் லேசாக முணுமுணுத்தபடி சிரிப்பது ஒருமுறை. இந்தப் பயிற்சி நுரையீரலுக்கு மிகவும் நல்லது. வயிற்றுத் தசைகளுக்கும் அதைச் சார்ந்த உறுப்புகளுக்கும்கூட நல்லதொரு பயிற்சி.

அடுத்தது அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் நடுத்தரமாகச் சிரிக்க வேண்டும். இப்படிச் சிரிப்பதால், மனம் அமைதிப்படும். இந்தச் சிகிச்சையை கூட்டமாக இருந்து சிரிக்க வேண்டும். இவை அல்லாமல் நடனமாடியபடி சிரிக்கும் ஒரு வகைச் சிரிப்பு இருக்கிறது. குழந்தை சிரிப்பதுபோல் துள்ளிக் குதித்துச் சிரிக்க வேண்டும்.

ஆக்ரோஷமாக இல்லாமல் மென்மையாகச் சிரிக்க வேண்டும். சிரிப்பு சிகிச்சையை காலை ஆறு மணி முதல் ஏழு மணிவரை செய்யலாம். அதிகாலையிலேயே செய்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பும் ஆனந்தமும் நம்மை வந்து சேரும்.

வாய் விட்டுச் சிரிப்போம், நோய்களை வெல்வோம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button