அழகு குறிப்புகள்

வளர்ச்சியைத் தீர்மானிப்பது இதுதான்…..

பெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக ஊட்டச்சத்து பானங்கள் முதல் உடற்பயிற்சிவரை கவனம் எடுத்து பிள்ளைகளுக்குச் செய்கிறார்கள் பலர்.

குழந்தைகளின் உயரம் குறித்த மருத்துவ விளக்கங்களையும் ஆலோசனைகளையும் தருகிறார், குழந்தைகள் சிறப்பு ஹோமியோபதி மருத்துவர் சரவணகுமார்.

Tall Men

வளர்ச்சியைத் தீர்மானிப்பது ஹார்மோன்!

ஒருவரின் வளர்ச்சி, அவர் கருவாக தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது ஆரம்பிப்பது. பொதுவாகக் கருவில் வளரும் குழந்தை 17 – 20 இன்ச்வரை வளரலாம்.

மரபு தவிர, ஒருவரின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது, அவரது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone). இந்தச் சுரப்பி, மூளையின் மத்தியில் மூக்குக்குப் பின்புறமாக இருக்கும்.

நிலக்கடலை அளவிலிருக்கும் இது, மிக முக்கியமான ஒரு சுரப்பி. உடலின் பல்வேறு சுரப்பிகளின் செயல்பாட்டை இது கட்டுப்படுத்துகிறது.

இது சுரக்கும் ஹார்மோன்தான் ஒருவரை வளரச் செய்கிறது; உடலில் உள்ள திசுக்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. இந்த வளர்ச்சி ஹார்மோனின் சுரப்பு குறைவதற்கும் கூடுவதற்கும் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் கட்டிகள், கிருமித் தாக்குதல், வளர்சிதை மாற்றங்கள் ஆகியவை காரணங்களாகலாம்.

வளர்ச்சி நிலைகள் இரண்டு!

  • முதற்கட்ட வளர்ச்சி, குழந்தை பிறந்ததிலிருந்து 12 வயதுவரை நிகழும். இந்தப் பருவத்தில் பல் விழுந்து முளைப்பது, எலும்புகள் கூடுவது என சீரான வளர்ச்சி நடைபெறும்.
  • இரண்டாம்கட்ட வளர்ச்சி, ஆணுக்கும் பெண்ணுக்கும் 13 வயதில் ஆரம்பித்து 18 வயதுவரை இருக்கும் (சிலருக்கு அதிகபட்சமாக 23 வயதுவரை வளர்ச்சி இருக்கலாம்). இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சி ஹார்மோன்கள் அபரிமிதமாக இருக்கும். இந்த இளம் வயதில்தான் உறுப்புகளின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சியை ஊக்குவிக்க புரதம் அதிகமுள்ள முட்டை, சோயா, பருப்புகள், பயறு உள்ளிட்ட உணவுகளை அதிகமாக கொடுக்கலாம்.

ஊட்டச்சத்து பானங்கள் உயரத்தை அதிகரிக்குமா?

ஊட்டச்சத்து பானங்கள் ஒருவரின் உயர நிர்ணயத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உயரத்தை இது போன்ற புறக்காரணிகளால் கூட்டவோ, குறைக்கவோ முடியாது.

மரபும், 12 வயதிலிருந்து 18 வயதுவரை கொடுக்கக்கூடிய புரதம் அதிகம் உள்ள உணவுகளுமே குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காரணமாக அமையும்.

வளர்ச்சி ஹார்மோன்களில் எந்த பாதிப்பும் இல்லாதபட்சத்தில், அவர்களின் வளர்ச்சி முழுமையடையும்.

ட்வார்ஃபிசம்… குணப்படுத்த முடியாது!

சில குழந்தைகளுக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் பிரச்னையால் ட்வார்ஃபிசம் (Dwarfism) ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ட்வார்ஃபிசம் என்பது குள்ளமாக இருப்பது.

மூன்று அடிக்கு மேல் அந்தக் குழந்தையால் வளர முடியாது; அதை குணப்படுத்தவும் முடியாது என்பதே உண்மை. அரசு, ட்வார்ஃபிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாக அறிவித்து, சலுகைகள் வழங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம், வளர்ச்சி ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது வெகு அரிதாக நடக்கும். அவர்கள் 7-8 அடி வளர்ந்து அதீத உயரத்துடன் இருப்பார்கள்.

உலகின் மிக உயரமான மனிதன் ராபர்ட் வாட்ளோ (Robert Wadlow). இவருடைய உயரம் 8.11 அடி.

பெற்றோர்கள் கவனத்துக்கு!

  • உயரம் குறைந்த குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். அவர்களுக்குப் பெற்றோரின் அரவணைப்பும் நம்பிக்கை தரும் வார்த்தைகளும் அவசியம். தேவைப்படும் சூழலில் அவர்களை கவுன்சலிங் அழைத்துச் செல்லலாம்.
  • பெற்றோர்கள், குழந்தைகளிடம் உயரத்தால் சமூக வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதைச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.உயரம் குறித்து கவலைப்படாமல் சாதித்த தன்னம்பிக்கை மனிதர்களின் கதைகளைச் சொல்லி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டலாம்.
  • குழந்தைகளிடம், அவர்கள் தங்களைப் பிறரோடு ஒப்பீடு செய்து பார்ப்பதைத் தவிர்க்கச் சொல்லி தம்மைத் தாமே உயர்வாக நினைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

குரோத் ஹார்மோன் சிகிச்சை!

பிட்யூட்டரி சுரப்பியில் பிரச்னை இல்லாத குழந்தைகளுக்கு, வளர்ச்சியை அதிகரிக்க ஹார்மோன் வளர்ச்சிக்கான மருந்து, ஊசி மூலம் கொடுக்கப்படுகிறது.

இதன் பலனாக அதிகபட்சம் மூன்று இன்ச் வளர வாய்ப்பிருக்கிறது. ஆனால், அது பயங்கரமான பக்கவிளைவுளை ஏற்படுத்திவிடும்.

ஹார்மோன் ஊசிகள் எலும்புகளின் அடர்த்தியைக் கூட்டும். அதனால் சிறு வயதிலேயே குழந்தைகளின் எலும்புகள் அளவில் பெரிதாகிவிடும். இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.

வழக்கமாக குழந்தைகளுக்கு ஸ்ப்ரிங் போன்ற இயல்பில் இருக்கும் பிஞ்சு எலும்புகள், விளையாட்டு, கீழே விழ நேர்வது போன்ற நேரங்களில் அவர்களுக்கு அடிபடாமல் காக்கும்.

ஆனால், இந்த ஹார்மோன் ஊசிகள் எலும்பின் வளையும் தன்மையைக் குறைத்து, கடினப்படுத்துவதால் அடிபட வாய்ப்பு அதிகமாகும்.

அது மட்டுமல்லாமல் குழந்தைகள் மூன்று இன்ச் வளர்வதற்கே அதிகச் செலவாகும் சிகிச்சை இது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button