பெண்கள் மருத்துவம்ஆரோக்கியம்கர்ப்பிணி பெண்களுக்கு

கைக்குழந்தைகளின் இரவு உறக்கத்துக்கு ஆலோசனைகள்!…

சில குழந்தைகள் இரவில் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அழுதுகொண்டே இருப்பார்கள். தாயின் தூக்கம் கெடுவது மட்டுமே பிரச்னை அல்ல. தூக்கமின்மை காரணமாக உடல்நல, மனநலப் பிரச்னைகளும் பிரசவித்த தாய்க்க ஏற்படக்கூடும். இவற்றைத் தவிர்க்க, கைக்குழந்தைகளின் இரவு உறக்கத்துக்கு ஆலோசனைகள்.

“சில குழந்தைகள், பிறந்து முதல் நான்கு மாதங்கள் வரையில் தூங்குவதற்குச் சிரமப்படுவார்கள். காரணம், பிரசவம்வரை தாயின் கருவறைச் சூழலிலிருந்த குழந்தை அதன் பின்னர் புறஉலகுச் சூழலுக்குப் பழகிக்கொள்வதில் எதிர்நோக்கும் சிரமங்கள். தாயின் வயிற்றுக்குள் பனிக்குடத்தில் இருக்கும் குழந்தை, தன் அம்மா நடக்கும்போது, குனிந்து நிமிரும்போதெல்லாம், பனிக்குடத்தில் தூளி ஆடுவதுபோல, ஆடிக்கொண்டே உறக்கத்தில் இருக்கும்.

இரவு அம்மா தூங்கும்போது அதற்குத் தூளி அசைவு கிடைக்காது என்பதால், தூக்கம் வராமல் விழித்துக்கொள்ளும். இதனால்தான் கர்ப்பிணிகள் பகலைவிட இரவு நேரத்தில் தங்கள் சிசுவின் அசைவுகளை அதிகமாக உணர்வார்கள். இந்த ஸ்லீப்பிங் பேட்டர்னை, சில குழந்தைகள் பிறந்து நான்கு மாதங்கள் வரையிலும் தொடர்வார்கள். இரவில் குழந்தைகள் தூக்கம் விழிக்க இதுவும் காரணம்.

babysleep

இந்தப் பேட்டர்னை மாற்றுவதற்கு, குழந்தையின் பகல் தூக்கத்தின் அளவைக் குறைப்பதிலிருந்து ஆரம்பித்து சில விஷயங்களை மேற்கொள்ளலாம்.

* பகல் நேரத்தில் குழந்தையைக் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் சாத்தப்பட்ட கும்மிருட்டு சூழலில் தூங்க வைக்காமல், நார்மலான வெளிச்சம் உள்ள சூழலில் உறங்க வைக்கலாம். இது அவர்களை நீடித்த உறக்கத்தைத் தவிர்க்கச் செய்யும். இரவில் குழந்தை உறங்கும் அறை வெளிச்சம், ஓசைகள், ஒளிர்திரைகள் இன்றி இருக்க வேண்டும்.

* குழந்தைக்கு வீட்டுப் பெரியவர் களின் பேச்சு, கிரைண்டர், மிக்ஸி, தொலைக்காட்சி போன்ற சத்தங்களைப் பழக்க வேண்டும். அப்போதுதான் புற ஒலிகளுக்கும் புறச்சூழலுக்கும் அடாப்ட் ஆவார்கள்.

* கடைகளில் ‘நேப் பெட்’ (Nap Bed) என்பது கிடைக்கும். அது கருவறை போன்றதோர் உணர்வைக் கொடுக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தி குழந்தைகளை உறங்கவைக்கலாம்.

தாய்மார்களின் கவனத்துக்கு!

குழந்தை விழித்திருக்கும்போது பாலூட்டுவது, குளிக்கவைப்பது, சிறுநீர், மலம் சுத்தம்செய்வது என அம்மாவுக்குத் தொடர்ச்சியாக ‘பேபி டியூட்டீஸ்’ இருந்துகொண்டே இருக்கும். அதனால், பகலோ இரவோ, குழந்தை உறங்கும் நேரமெல்லாம் தாயும் உறங்கி ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும்.

தூக்கமின்மைப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிற தாய்மார்கள், இரவு வேளைகளில் தூக்கம் தொலைக்காமல் இருக்க, `பிரஸ்ட் பம்ப்’ மூலம் பாலை எடுத்துச் சேமித்து வைத்து, குழந்தைக்கு வேறு யார் மூலமாகவாவது அதைப் புகட்டச் சொல்லலாம்.

பசி, அழுத்தும் உடைகள், மூச்சு விடுவதில் சிரமம், உடல்நலக் குறைவு எனக் குழந்தைகள் இரவில் தூங்காமல் அழுவதற்குக் காரணங்கள் பல என்பதால், அவற்றையும் கண்காணிக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button