ஆரோக்கியம் குறிப்புகள்ஆரோக்கியம்

இயற்கையாக குறட்டைக்குத் தீர்வுகாண எளிய வழிகள்…

குறட்டை, சாதாரணப் பிரச்னை அல்ல. அது, தனிநபருக்கு மட்டுமின்றி, சுற்றியுள்ளவர்களுக்கும் பெரும் தொந்தரவு தருவது. இயற்கையாக குறட்டைக்குத் தீர்வுகாண எளிய வழிகள்…

தூங்கும் நிலையை மாற்றுங்கள்!

மல்லாந்து படுத்துத் தூங்கும்போது நாக்கின் அடிப்பகுதியும், மிருதுவான அண்ணப் பகுதியும் தொண்டையின் சுவரை உரசியபடி இருப்பதால்தான், அதிர்வுடன்கூடிய குறட்டைச் சத்தம் ஏற்படுகிறது. ஒருக்களித்துப் படுத்துத் தூங்கினால் குறட்டை வராது. ஒருக்களித்த நிலையில் படுத்துத் தூங்குபவர்கள் இரவில் தூக்கக் கலக்கத்தில் மல்லாந்து படுக்காமலிருக்க, முதுகுக்குப் பின்னால் தலையணை வைத்துக்கொள்ளலாம்.

kuraddai

எடைக் குறைப்பு!

கழுத்துப் பகுதியில் சதை போடுவது, குரல்வளையின் உட்புற விட்டத்தைக் குறுக்கிவிடும். அதனால், தூங்கும்போது தொண்டைப் பகுதி தூண்டப்பட்டு குறட்டை வரும். குறட்டைவிடும் பழக்கம் இல்லாதவர்களுக்கு, உடல் எடை அதிகரித்ததும் குறட்டை வந்தால், உடல் எடையைக் குறைப்பதே தீர்வு.

மது வேண்டாம்!

குறட்டை விடாதவர்கள்கூட மது அருந்தினால் குறட்டைவிடுவார்கள். அதேபோல் குறட்டைவிடும் பழக்கம் உள்ளவர்கள் உறங்குவதற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்னர் மது அருந்தினால்கூட, அதிகச் சத்தத்தோடு குறட்டைவிடுவார்களாம். மது, தொண்டையிலிருக்கும் தசைகளை பாதித்து, குறட்டைச் சத்தத்தை உண்டாக்குகிறதாம். எனவே, மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

சுவாசப்பாதை திறப்பு!

குறட்டைச் சத்தம் மூக்கிலிருந்து வந்தால், சுவாசப்பாதையைச் சற்று விரிவுபடுத்தலாம். அதன் மூலம் காற்று மெதுவாகச் செல்லும் என்பதால், குறட்டையைத் தடுக்க முடியும். சளி, மூக்கடைப்பு ஏற்பட்டிருந்தால், மூக்கினுள்ளே காற்று வேகமாகச் செல்லும்போது அது தடைப்பட்டு, குறட்டைச் சத்தத்தை எழுப்பும். அது போன்ற நேரங்களில் இரவு தூங்குவதற்கு முன்னர் வெந்நீர்க் குளியலுடன், உப்பு கலந்த நீரில் மூக்குப் பகுதியைக் கழுவினால் மூக்கடைப்பு நீங்கும்.

நீர்ச்சத்து அவசியம்

உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டால், மூக்கிலிருக்கும் கொழகொழப்பான ஈரப்பதம், மிருதுவான அண்ணப் பகுதி ஆகியவை உலர்ந்துவிடும். இதுவும் அதிகக் குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே, நீர்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான பெண்கள் ஒரு நாளைக்கு 11 டம்ளரும், ஆண்கள் 16 டம்ளரும் தண்ணீர் பருக வேண்டும்.

நல்ல தூக்கத்தைப் பழக்கப்படுத்துங்கள்!

சரியான தூக்கமில்லாமல் அதிக நேரம் வேலை பார்த்துவிட்டு, கடைசியில் `இதற்கு மேல் முடியாது’ என்று சோர்வான நிலையில் உறங்கச் சென்றால், தொண்டையில் உள்ள தசைகள் தளர்ந்து, குறட்டைச் சத்தம் வெளிப்படும்.

தலையணையை மாற்றுங்கள்!

படுக்கையறை, தலையணையில் காணப்படும் சில அழுக்குகள் ஒவ்வாமையை ஏற்படுத்தி, குறட்டைவிட காரணமாக அமையும். சுத்தப்படுத்தாத சீலிங் ஃபேன், நைந்துபோன பழைய தலையணை மற்றும் அதிலிருக்கும் தூசு, செல்லப்பிராணிகளுடன் உறங்கினால் அவற்றின் உடலில் காணப்படும் உண்ணிகள் ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்தி, குறட்டையை உண்டாக்கும். எனவே, வாரம் ஒரு முறையாவது தலையணையை வெயிலில் உலரவைப்பது, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தலையணையை மாற்றுவது, செல்லப்பிராணிகளைப் படுக்கையிலிருந்து தூரமாகவைப்பது, சீலிங் ஃபேனை சுத்தப்படுத்துவது போன்றவை குறட்டையை ஏற்படுத்தாமல் பாதுகாக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button