பெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் போது செய்யக்கூடாதவை!…

பெண்கள் தனியாக டிராவல் செய்யும்போது, எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் போது செய்யக்கூடாதவை
ஒருசில பெண்கள் துணிந்து தனியே வாழ முனைகிறார்கள்.

தனியாகப் பயணிக்கிறார்கள். அந்தப் பயணத்தின் வழியே வாழ்க்கையை அழகாக, ஆழமாகக் கற்றுக்கொள்கிறார்கள்.

பெண்கள் சோலோ டிராவல் செய்யும்போது, எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன?

உலகம் முழுக்க தனியாகப் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாகச் சொல்கிறது ஆய்வு.

ஆனால், ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் குறைந்த அளவிலேயே பயணம் செய்கிறார்களாம். இதற்குச் சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு எனப் பல்வேறு காரணங்கள் தடைகளாக உள்ளன.

குழுவாகப் பயணிப்பதில் இருக்கும் சுகத்தையும் தாண்டி, சோலோவாகப் பயணிப்பதில் அலாதி சுகம் கிடைப்பதாக பெரும்பாலான பெண்கள் உணர்கிறார்கள்.

தனியாக டிராவல் செய்ய நினைக்கும் பெண்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அப்படி ஃபிட்டாக வைத்துக்கொள்ளாமல் தயவுசெய்து தனியாக பயணம் செய்யாதீர்கள் என்பதே அவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

முன்பெல்லாம் பயணம் செய்வது, காசு செலவு வைக்கும் வேலையாக இருந்தது. ஆனால், இப்போது, பயணம் செய்யும் முறை முற்றிலும் வேறு ஒரு கோணத்துக்கு வந்துவிட்டதால், மிகக் குறைந்த செலவிலேயே பல ஊர்களைச் சுற்றிப்பார்க்க முடிகிறது.

அதற்குத் திட்டமிடல் ரொம்பவே முக்கியம். அதாவது, நீங்கள் போக விரும்பும் இடத்தை எவ்வாறு குறைந்த கட்டணத்தில் அடைய முடியும், தங்கும் வசதி என அனைத்தையும் திட்டமிட வேண்டும்.

நீங்கள் சைக்ளிஸ்ட்டாக இருந்தால் சைக்கிளையும் உடன் எடுத்துச் செல்லுங்கள். சைக்கிளில் ஊர் சுற்றிப் பார்க்கும் சுகமே அலாதியானதுதான்.

பெண்களைப் பொறுத்தவரை குறைந்த விலை ஹோட்டல்கள் என்பதைவிட, பாதுகாப்பான ஹோட்டலா என்றுதான் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.

அதனால் பணம் என்ற மதிப்புள்ள காகிதத்தை நம்பாமல், பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு பயணத்தை அனுபவியுங்கள்.

தனியாகப் பயணிக்கும்போது, நீங்கள் பயணம் செய்யும் ரயிலிலோ, பேருந்திலோ உங்கள் அருகில் இருக்கும் பெண்களுடனோ, குடும்பத்துடனோ பேசி நட்புவைத்துக்கொள்ளுங்கள்.

அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முயலுங்கள். அது ஒருவித பாதுகாப்பு உணர்வையும் உங்களுக்குள் ஏற்படுத்தும்.

`பயணத்துக்காகத் திட்டமிடும்போதே, ஆபத்து என்று அழைத்தால் உடனே வரும் நட்பையும் தேர்வுசெய்து, அவர்களிடம் பயண விவரங்களைத் தெரியப்படுத்திவிட்டு, அதன் பிறகு பயணிப்பது நல்லது.

இது புலிகளின் காடல்ல, அன்பான இதயங்களும் அன்றாடம் பயணிக்கும் நாடு’ என்பதை மனதில் நிறுத்துங்கள். அப்போதுதான் உங்களுக்குள் இருக்கும் தைரியம் தானாக ஊற்றெடுக்கும்.

செல்லும் இடங்களிலும் நல்ல நல்ல மனிதர்கள் நம் கண்களுக்கு அகப்படுவார்கள். அவர்களின் உதவியையும் கேட்டுப் பெறுவதில் தவறில்லை. சுற்றுலா செல்லும் இடத்தில் இருக்கும் நண்பர்களின் நண்பர்களையும் தொடர்புகொள்ளும் வகையில் திட்டமிட்டு வைத்திருங்கள். அவசர காலத்தில் அது பயனுள்ளதாக இருக்கும்.

யாரிடம் எது கேட்பதாக இருந்தாலும் தயக்கமின்றி தைரியமாகக் கேளுங்கள். யாரும் உங்களை எளிதில் அணுக முடியாதபடி கொஞ்சம் முரட்டுத்தனமாகவே இருங்கள் தப்பில்லை. பயணத்தில் பார்க்கும் மனிதர்களை முழுமையாக நம்பவேண்டும் என்கிற அவசியமில்லை. அவர்களின் மீது சந்தேகம் இருந்தால்தான், உங்கள் பாதுகாப்பின் மீது உங்களுக்குக் கவனம் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் பெப்பர் ஸ்ப்ரே, விசில், பாதுகாப்பு உபகரணங்களை உடன் எடுத்துச்செல்வது நல்லது. இவை தவிர எங்குச் செல்கிறீர்களோ அந்த இடத்தின் வரைபடத்தை (மேப்) வைத்துக்கொள்வது, இடம் தெரியாமல் திண்டாடுவது உள்ளிட்ட பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

Leave a Reply