​பொதுவானவை

காதலுக்காக வாழ்க்கையை தொலைத்தவர்கள்

காதலுக்காக வாழ்க்கையை தொலைத்தவர்கள்
பார்த்ததும் காதல், பழகிய பின் காதல், நட்பின் அடிப்படையில் காதல், திருமணத்திற்கு முன் காதல், திருமணத்திற்கு பின் காதல், கள்ளக்காதல் என பல வகை காதல் உண்டு. மற்ற காதல்களை காட்டிலும் கண்டதும் காதல் சற்று வித்தியாசமானது.இப்போதெல்லாம் இந்த கண்டதும் காதல் அதிகமாக நடக்கிறது. திருமண வீடு, திருவிழாக்கள், பேருந்து நிலையம் என போன்ற இடங்களில் ஒரு பெண்ணை பார்த்துவிட்டால், ஆண் சட்டென காதலில் வீழ்ந்து விடுகிறான். காதலும், காமமும் வாழ்க்கையில் எல்லோருக்கும் இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.ஆனால் அவை சரியான நேரத்தில் வர வேண்டும். நம் இலட்சியங்களையும், கனவுகளையும் தகர்த்தெறியும் டைனமைட்களாக காதலும் காமமும் மாறி விடக் கூடாது. காதலும் காமமும் அதற்கான சரியான நேரத்தில் சரியான நபருடன் வர வேண்டும். ஆனால், மாறாக பல கோடி மக்கள் காதலுக்காக தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள் என்பது தான் வேதனையான விஷயம் ஆகும்.பருவ வயதில் காமம் எட்டிப் பார்க்க ஆரம்பிக்கிறது. பெரும்பாலும் அதை ஆண்களும் பெண்களும் காதல் என்று நினைக்கின்றார்கள். அல்லது கற்பனை செய்துக் கொள்கிறார்கள். ஹார்மோன்கள் அந்த வயதில் சற்று ஓவர் டைம் போட்டு வேலை செய்வதால் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். அப்பொழுது தான் மனக்கட்டுப் பாடு மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது.

படிக்கும் மாணவர்கள் படிப்பைக் கோட்டை விடுகிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கையே திசை திரும்பி போய் விடுகிறது. சில பெண்கள் காதல் என்று நம்பி காமுகர்களிடம் சிக்கி வாழ்க்கையை தொலைத்து நிற்பதும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. சிலர் காதலுக்காக வாழ்க்கையில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டு விட்டு பின்னால் பெரிதும் வேதனையும் விரக்தியும் அடைகின்றனர் என்பது நிஜம்.

காதலுக்காக அரசை இழந்தவர்களும் உண்டு. குடும்பங்களை இழந்தவர்கள் பல பேர். சொத்தை இழந்தவர்களும் உண்டு. கெட்ட பெயர் வாங்கியவர்கள் ஏராளம். உண்மையான காதல் உயர்வானது. ஒப்பற்றது. அதற்காக எந்த தியாகத்தையும் செய்யலாம் என்பது உண்மையே. ஆனால் காமத்தை காதல் என்று தவறாக எண்ணிக் கொண்டு வாழ்க்கையை தொலைப்பது நிச்சயம் தவறு தான்.

படிக்கும் வயதில் ஒழுங்காகப் படிக்க வேண்டும். நல்ல தொழிலை நிச்சயப்படுத்திக் கொண்டு பின் சரியான ஜோடியைத் தேர்தெடுத்தால் அது போற்றக் கூடியதாக இருக்கும். சில பெண்கள் தங்கள் பொறுப்பில்லாத காதலன்களை வாழ்க்கையில் ஜெயிக்க வைத்து விடுகிறார்கள்.

காதல் ஒருவரை உயர்த்த வேண்டும். அழிக்கக் கூடாது. காதலுக்காக வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் இவ்வுலகில் எத்தனையோ கோடி. காதல் உங்களை உயர்த்துமானால் அது நிச்சயம் வரவேற்கத் தக்கதே.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button