ஆரோக்கியம்

வெப்பத்தின் காரணமாக தோலில் அதிக பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி?

வெப்பத்தின் காரணமாக தோலில் அதிக பாதிப்புகள் உருவாகும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி? என பார்ப்போம்.

கோடை கால தோல் நோய்களும், தற்காப்பு வழிமுறைகளும்…
கோடை காலம் தொடங்கி விட்டது. கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் உக்கிரம் அடைவதற்கு முன்பே வெயில் நம்மை வறுத்தெடுக்கிறது.

பொதுவாக கோடையில் இந்தியாவில் வெயிலின் அதிகமாக இருக்கும். குறிப்பாக தென் இந்தியாவில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும்.

வெப்பத்தின் காரணமாக உடலில் சோர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக தோலில் அதிக பாதிப்புகள் உருவாகும். அரிப்பு, வியர்வை, கொப்பளங்கள் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி? என பார்ப்போம்.

vejarkuru

வியர்க்குரு

கோடை காலத்தில் வெப்ப நிலை சாதாரணமாக 40-ல் இருந்து 45 டிகிரியை தொடுகிறது. ஆனால் மனித உடலில் இயல்பான வெப்ப நிலை 37 டிகிரி செல்சியல். எனவே உடலை குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. எனவே உடலை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

அவ்வாறு பராமரிக்காவிட்டால் தோலில் உள்ள வியர்வை சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொள்ளும். இதனால் வியர்க்குரு வரும். எனவே வெயில் காலத்தில் தினமும் 2 தடவை குளிர்ந்த நீரில் குளித்தால் வியர்க்குரு வராது.

வியர்வையை உடம்பில் தங்க விடாமல் முகத்தை வெறும் நீரால் கழுவுவது, உடம்பை ஈரமான துணியால் துடைத்துக் கொள்வது நல்லது. காலமின் லோஷனை பூசினால் அரிப்பு குறையும். அதன் விலை குறைவு.

வேனல் கட்டிகள்

தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் அழுக்கு போல் தங்கி விடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக் கொள்ள அந்த இடம் வீங்கி புண்ணாகி விடும். இது வேனல் கட்டி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சு களிம்புகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும். கட்டிகள் சீழ்பிடிக்கும் அளவுக்கு பெரியதாக இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். இந்த கட்டிகளை கையால் தொடவோ, கிள்ளவோ கூடாது. இதன் சீர் மற்ற இடங்களில் பட்டால் அங்கேயும் கட்டிகள் தோன்ற அதிக வாய்ப்புகள் உள்ளன.

படை – தேமல்

உடலில் ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சை கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்ளும். குறிப்பாக வியர்க்குருவில் இந்த தொற்றும் சேர்ந்து கொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும். அதை குணப்படுத்த களிம்பு அல்லது பவுடரை தடவ வேண்டும். அவற்றை நேரடியாக மருந்து கடைகளில் வாங்க வேண்டாம். தோல் சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற்று அவரது அறிவுறுத்தலின்படி பயன்படுத்தலாம். உள்ளாடைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பூஞ்சை, படை வருவதை தடுக்கலாம்.

கோடை காலத்தில் சிறுநீர் கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுவதாலும், தேவையான அளவு தண்ணீர் குடிக்காததும் இதற்கு முக்கிய காரணமாகும். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் நீர்க்கடுப்பு பிரச்சினை தீரும்.

தொற்று நோய்கள்

வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய் கிருமிகள் அதிக அளவில் பெருகும். இந்த உணவுகளை சாப்பிடு வதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபதி, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும்.

ஆகவே வெயில் காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்த வேண்டும். உணவு மீது ஈக்கள் மொய்க்காமல் மூடி பாதுகாக்க வேண்டியது அவசியம். தண் ணீரை கொதிக்க காய்ச்சிஆற வைத்து குடியுங்கள்.

எண்ணெய் சேர்ந்த உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஆவியில் வேக வைத்த காய்கறிகள், இயற்கையிலேயே குளிர்ச்சியான உணவுகள், பழங்கள், மோர், இளநீர், தண்ணீர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

சரும நோய்கள்

இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளால் சருமத்தில் வியர்வை தேங்கி படர்தாமரை, அரிப்பு, தோல் வீங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதிக தூசு, வெப்பம் கலந்த காற்று காரணமாகவும் சருமத்தில் அலர்ஜி ஏற்படும்.

உடலை மறைக்கும் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது, தோல் வீங்கிய பகுதிகளை கையால் தொந்தரவு செய்யாமல் இருப்பது, முடிந்தவரை உடலை தூய்மையாக வைத்திருப்பது, படர்தாமரைக்காக கிரீம்களை மருத்துவர் ஆலோசனையோடு தடவுவது போன்றவற்றை மேற்கொண்டாலே பிரச்சினை தீர உதவும்.

குளிக்கும்போது மிகவும் மிருதுவான (மைல்ட்) சோப்பை பயன்படுத்துவது நல்லது.கடுமையான வெப்பத்தால் சருமம் பாதிக்கப்படுகிறது. அதற்கு காரணம் சூரிய ஒளியில் உள்ள ‘அல்ட்ராவைலட்’ ஒளியே காரணம்.

அதுவே தோல் வறண்டு போக காரணமாகிறது. எனவே ‘பிரெஷ்’ ஆன பழச்சாறு, காய்கறி சாறு போன்றவற்றை பருகுங்கள். இது உடலின் ஈரப்பசையை காக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

அது தவிர தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருகலாம். அதுவும் உடலின் ஈரத்தன்மையை பாதுகாக்கும். கோடை காலத்தில் காபி, தேநீர் குடிப்பதை குறைத்து கொள்ள வேண்டும். வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்கள் மற்றும் குளிர்பானங்களை அருந்த வேண்டாம்.

அதற்கு பதிலாக இளநீர், மோர், சர்பத், பதநீர் போன்றவற்றை அதிக அளவில் குடிக்கலாம். எலுமிச்சை பழ சாற்றில் சமையல் உப்பு அல்லது சர்க்கரை கலந்து குடிப்பதும் உடல்நலத்துக்கு சிறந்தது.

தர்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து மிகுந்த பழங்கள் சாப்பிடலாம் அல்லது இவற்றை சாறு எடுத்தும் பருகலாம்.

தொடர்ந்து வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அப்படி வெளியே செல்ல வேண்டுமென்றால் குடையை எடுத்து கொள்ளலாம். இதுபோன்ற சில எளிய முன்எச்சரிக்கை நடவடிக்கைககளை மேற்கொண்டால் கோடையை வெகுவாக அனுபவிக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button