மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா டான்சில் பிரச்னையை தவிர்ப்பது எப்படி?!

தொண்டையில் ஏற்படும் பிரச்னையில் மிக பரவலானது டான்சில். இது குழந்தைகள், பெரியவர்கள் என எவருக்கு வேண்டுமானாலும் ஏற்படுகிறது. டான்சிலுக்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி விளக்குகிறார் ENT மருத்துவர் குமரேசன்…

டான்சில் என்பது என்ன?

டான்சில் என்பதையே நோய் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், டான்சில் என்பது நம் உடலின் ஓர் உறுப்பு. இது தொண்டையின் பின் பகுதியில் இருக்கும் ஒரு பகுதி. இது சில சமயங்களில் புண் ஆகும்போது தான் தொந்தரவு ஏற்படுகிறது.

டான்சிலால் ஏற்படும் பிரச்னைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று உடனடியாக திடீரென்று புண்ணாவது, மற்றொன்று திரும்பத் திரும்ப புண்ணாவது. இது நபருக்கு நபர் மாறுபடும்.

ஒருவருக்கு திடீரென்று தொண்டை வலி ஏற்பட்டு அவர்கள் நாக்கின் அடியில் இரண்டு பக்கமும் சிவப்பாக வீக்கத்துடன் இருக்கும். மேற்பாகத்தில் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருக்கும். தொண்டையில் எரிச்சல் இருக்கும். எச்சில் முழுங்குவதில் சிரமம் இருக்கும். இவையனைத்தும் திடீரென்று ஏற்படும் டான்சில் தொந்தரவுகள்.

shutterstock 409126717 17572219948081

இது குளிர்ந்த நீர் அல்லது ஐஸ்க்ரீம் போன்றவற்றை உட்கொண்டதால் ஏற்பட்டிருக்கும். அல்லது காற்று மாசுபாடு, அசுத்தமான தண்ணீர் அருந்தியது போன்ற காரணங்களாலும் உண்டாகலாம். இதற்கு முறையான ஆன்டிபயாடிக்குகள், கூடுதலாக வைட்டமின் சி மற்றும் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் குணப்படுத்திவிட முடியும்.

மற்றொன்று திரும்பத் திரும்ப வருவது. இதை செப்டிக் டான்சில்(Tonsillitis) என்கிறோம். இதில் தொண்டை வலி இல்லாமல் இருந்தாலும் தொண்டையில் கழலை இருந்துகொண்டே இருக்கும். தொண்டையை சுற்றியுள்ள உறுப்புகள் அனைத்தும் சிவப்பாகவே இருக்கும். இதற்கு டான்சில் புண் ஆகியிருப்பதே காரணம். இதற்கு அறுவை சிகிச்சை அவசியம். இதன் மூலம் அந்த செப்டிக் அகற்றப்படும்.

இயற்கையாகவே பார்த்தோமானால் டான்சில் உடலுக்கு நல்லது. இது உடலுக்கு ஆன்டிபயாடிக்குகளை தருகிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதுபோன்ற நல்ல விஷயங்கள் டான்சிலால் நமக்கு கிடைத்தாலும் அதன் மேல் சீழ் பிடிக்கும்போது அறுவை சிகிச்சை அவசியமாகிறது.

குழந்தைகளுக்கு வரும் டான்சில் பற்றி…

குழந்தைகளைப் பொறுத்தவரை அனைவருக்குமே டான்சிலின் மேல் புண்ணாகத்தான் செய்யும். இதில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், இதன் பாதிப்பு அனைவருக்கும் தீவிரமானதாக இருப்பதில்லை. தானாகவே இது குணமடையவும் செய்யும். இவர்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமில்லை. மருத்துவரின் ஆலோசனையின்படி ஆன்டிபயாடிக்குகளை எடுத்துக் கொள்வதன் மூலம் முற்றிலுமாக குணமடைந்துவிடும். ஆனால், சில குழந்தைகள் மட்டும் டான்சிலுடன் சேர்ந்த அடினாய்டு சதையினால் குறட்டை பிரச்னை ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள்.

உதாரணமாக உட்கார்ந்திருக்கும்போதே குழந்தை உறங்குவது, படுத்தவுடன் மூச்சடைப்பது, ஐந்து நிமிடத்திற்கொரு முறை புரண்டு புரண்டு படுத்து உறங்குவது சீரான தூக்கமில்லாதது, வாயில் உமிழ்நீர் வந்து கொண்டே இருப்பது போன்றவர்களுக்கும் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
டான்சில் புண் ஆவதற்கான காரணங்கள்…

டான்சிலுக்கான பொதுவான வேலை என்பது அது நமக்கு ஒரு சல்லடையாக இருக்கிறது. தேவையற்ற மாசு, இன்ஃபெக்ஷன் கிருமிகள் போன்றவை அதன் மீது படிந்துவிடுகிறது. அதை வெளியேற்றாமல் இருக்கும்போது தான் புண் ஏற்பட்டு தொந்தரவுகள் ஏற்படுகிறது. டான்சிலின் மேல் படிந்துள்ளவை தானாகவே சரியாகிவிடும் என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ளும்போது தான் இது இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு தீவிரமடைகிறது.

இந்த இன்ஃபெக்ஷனானது தீவிரமடையும்போது இதற்கு மருத்துவம் அவசியமாகிறது. முழுமையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே இது குணமடையும். சுத்தமான குடிதண்ணீர் இல்லாமை, காற்றுமாசுபாடு, எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றாலும் டான்சில் தொற்று ஏற்படுகிறது.

டான்சில் தொற்று வராமல் காப்பது எப்படி?

டான்சில் பொதுவாகவே உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. சரியான உணவுமுறையும், முறையான உடற்பயிற்சியும் இருந்தாலே அதன் மேல் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும். மிகவும் குளிர்ச்சியான உணவுப்பண்டங்கள் அல்லது ஐஸ்க்ரீம் போன்றவற்றை குழந்தைகள் சாப்பிடும்போது டான்சில் புண் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது உண்மைதான் என்றாலும் குழந்தைகள் ஐஸ்க்ரீம் போன்றவற்றை விரும்பி உண்பர்.

அதனால் அவர்கள் உண்பதை தடுக்காமல் அதை சாப்பிடக்கூடிய அளவுக்கு அவர்கள் உடலை தயார்படுத்த வேண்டும். டான்சில் தொற்றுக்கான எதிர்ப்பு சக்தியை உடலுக்கு ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக டான்சில் தொற்றுக்கு மூச்சுப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி இருந்தாலே டான்சில் தொந்தரவுகள் உண்டாகாமல் இருக்கும்.

முக்கியமாக ஓடுதல், குதித்தல் போன்றவையான உடற்பயிற்சிகள் செய்தாலே டான்சிலுக்கு நல்ல தீர்வு தரும். கார, அமில உணவுகள் மற்றும் ஃபாஸ்ட்ஃபுட் வகையான உணவுகளை தவிர்த்து அனைத்து வகையான பழ வகைகளும், நார்ச்சத்து மிகுந்துள்ள உணவுகளும் எடுத்துக் கொள்வது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

யாருக்கெல்லாம் அறுவை சிகிச்சை அவசியமாகிறது?

டான்சில் பிரச்னை இருக்கும் அனைவருக்குமே அறுவை சிகிச்சை தேவைப்படுவது கிடையாது. செப்டிக் டான்சில் இருப்பவர்களுக்கும், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுபவர்களுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை அவசியம். இது குழந்தைகளுக்கும் பொருந்தும். ஆனால் குழந்தைப் பருவத்தில் டான்சில் தொந்தரவுகள் இருப்பவர்களுக்கு 15 வயதிற்கு மேல் முற்றிலுமாக குணமடையவும் வாய்ப்புகள் அதிகம். இதற்கு உடற்பயிற்சி இருந்தாலே போதுமானது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button