மருத்துவ குறிப்பு

கட்டாயம் இதை படியுங்கள் டெங்குக் காய்ச்சலின்போது உணவின் முக்கியத்துவம் என்ன?

டெங்குக் காய்ச்சலைப் பொருத்தவரையில் 4 முதல் 7 நாட்களுக்குப் பிறகே அறிகுறிகள் தென்பட துவங்குவதால், என்ன காய்ச்சல் என்று கண்டுபிடிப்பதில் தாமதம் ஆவது சற்று வருத்தப்படக்கூடிய செய்திதான்.

ஆனாலும், 3 நாட்களுக்கு மேல் தொடரும் எவ்வித காய்ச்சலாக இருப்பினும் நோயாளியுடன் இருக்கும் பாதுகாவலர்கள் விரைந்து செயல்படவேண்டும். அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக இருப்பின், மருத்துவர்களுடைய நேரடி கண்காணிப்பில் இருப்பார்கள். ஆனால், வெளி சிகிச்சைப் பிரிவிற்கு செல்பவர்களாகவும், வீட்டிலிருந்தபடியே அவ்வப்போது மருத்துவர்களை சென்று பார்ப்பவர்களாகவும் இருக்கும் வேளையில், நோயாளியின் ரத்தம், சிறுநீர், மலம், சளி போன்றவைகளின் பரிசோதனை முடிவுகள் மருத்துவரின் உடனடி கண்காணிப்பிற்குச் செல்வது மிகமிக அவசியம். இதுகுறித்து வண்டார்குழலி அளித்துள்ள கேள்வி – பதில் விவரம் இதோ:

டெங்கு காய்ச்சலில் எவ்வாறான நிலைகள் தீவிர கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட வேண்டிய நிலைகளாகக் கருதப்படுகின்றன?

உலக சுகாதார இயக்கத்தின் அறிக்கையின்படி, உடலின் வெப்பநிலை 37.5-38 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழே இறங்குவதுடன், மூன்றிலிருந்து ஏழு நாட்கள் வரையில் காய்ச்சல் இருத்தல், நீர்ச்சத்து குறைவதால், மொத்த ரத்த அளவில் இருக்க வேண்டிய ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் (hematocrit) மற்றும் ரத்தத்தின் பிளாஸ்மா மெதுவாகக் கசியத் துவங்குதல், ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை ஒரு மைக்ரோ லிட்டருக்கு 20,000 அல்லது 10,000க்கும் கீழிறங்குதல் போன்றவை நெருக்கடியான அல்லது தீவிர சிகிச்சையளிக்கும் நிலையாகக் கருதப்பட வேண்டும்.

டெங்கு காய்ச்சலின்போது ரத்தத் தட்டுக்களின்(Platelets) எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள் யாவை?

ரத்தத்தில் உள்ள நுண் பொருட்களில் ரத்தத் தட்டுக்கள் எனப்படும் Platelets மிக முக்கியமானவை. சீராய்ப்பு, காயங்கள் அல்லது அடிபட்ட இடத்தில், ரத்தம் வெளியேறும்போது, ரத்தத்தில் உள்ள நிறமற்ற செல்களான இந்த தட்டுக்கள் ஒன்றோடொன்று பசைபோன்று இறுகி ஒட்டிக்கொண்டு, அந்த இடத்தில் ஒரு அடைப்பை ஏற்படுத்தி ரத்தம் வெளியேறு
தலை நிறுத்தும் மிக முக்கிய வேலையைச் செய்கின்றன. பொதுவாக ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில், 150,000 முதல் 450,000 ரத்தத் தட்டுக்கள் இருக்க வேண்டும். இந்த அளவு அதிகரித்தால் இதை Thrombocytosis எனவும் குறைந்தால் Thrombocytopenia எனவும் கூறுகிறோம். டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு ரத்தத் தட்டுகளின்எண்ணிக்கை குறைந்து விடுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அவை, எலும்பு மஜ்ஜையில் தட்டுக்களின் உற்பத்தி குறைவதும், உடல் முழுவதும் உள்ள ரத்த ஓட்டத்தில் உள்ள ரத்தத் தட்டுக்கள் அதிக அளவில் அழிக்கப்படுவதும் ஆகும்.

மற்ற பிற காய்ச்சலைவிட டெங்கு காய்ச்சல் வந்த நோயாளிகளுக்கு நீர்ச்சத்தின் அவசியத்தை உணர்த்தி, உடல் நீரின் சமநிலையை பராமரிக்கக் கூறுவதன் நோக்கம் என்ன?

காய்ச்சலின்போது ஏற்படும் அதிகப்படியான வியர்வை, பிளாஸ்மா கசிவு, தண்ணீர் அல்லது திரவ உணவு எடுத்துக்கொள்ளும் விருப்பம் அல்லது நிலை இல்லாமை போன்றவை உடலிலுள்ள நீர்ச்சத்தின் அளவைக் குறைத்துவிடு
கிறது. இதனால், தசைப்பிடிப்பு, மூட்டு மற்றும் கால்களில் இறுக்கமான வலி, தலைவலி போன்றவை அறிகுறிகளாகத் தென்படுவதுடன், உடலுறுப்புகளின் செயல்பாடுகளும் பாதிப்படையும் நிலை ஏற்படும். எனவேதான், நீர் மற்றும் திரவ உணவுகளின் வாயிலாகவோ அல்லது நரம்பு மூலம் செலுத்தப்படும் மருந்துத்திரவங்கள் (IV Fluids) வாயிலாகவோ உடலின் நீர்ச்சத்து சமன்செய்யப்படுகிறது.
dgdg
டெங்குக் காய்ச்சலின்போது உணவின் முக்கியத்துவம் என்ன?

பப்பாளி இலைச் சாறும், நில வேம்பு குடிநீரும் கொடுத்துவிட்டால் மட்டுமே போதும், ரத்தத்தட்டுகளின் அளவு அதிகரித்துவிடும் என்ற நிலையிலேயே இருந்துவிடாமல், அதனுடன் சேர்த்து அந்நிலையில் உடலுக்குத் தேவையான சத்துகளை கொடுக்கும் உணவுகளையும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொருட்களைக் கொடுப்பதால் எவ்வித சிக்கலும் இருக்காது. ஆனால், கல்லீரல் அழற்சி நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், கணையம் அல்லது பித்தப்பை சார்ந்த நோய்கள், சுவாசக்கோளாறு, தீவிர வயிற்றுப்புண் போன்ற வேறே தேனும் சிக்கல் இருக்கும் வேளையில் நோயாளி குழந்தையாக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும், கர்ப்பிணியாக இருந்தாலும் குடும்ப உறுப்பினரோ அல்லது நோயாளியோ தாங்களாகவே பப்பாளி மற்றும் நிலவேம்பு சாற்றினை அல்லது கஷாயத்தை சரியான அளவு தெரியாமல் குடிக்க வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு மருத்துவரின் கண்காணிப்பும், உணவியல் நிபுணர்களின் ஆலோசனைகளையும் பின்பற்றுவது அவசியம்.

ஒருவரின் சிறுநீரகத்திலும், கல்லீரலிலும் உருவாகும் Thrombopoitin என்னும் ஹார்மோனே, எலும்பு மஜ்ஜையிலிருந்து ரத்தத் தட்டுக்கள் உருவாவதற்கு உதவி செய்கின்றன. எனவே, டெங்கு காய்ச்சலின்போது சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை சரியான முறையில் பராமரிப்பதற்கும், குறைந்துவிடும் ரத்தத்தட்டுக்கள் விரைவில் அதனுடைய சமநிலையை அடைவதற்கும் என்னென்ன சத்துகள் முக்கியம் என்பதைத் தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம். இதன்வாயிலாக அந்த சத்துகள் எந்தெந்த உணவுப் பொருட்களில் உள்ளன, அவற்றை நோயாளிக்கேற்ப எவ்வாறு உணவாகத் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டால், டெங்கு காய்ச்சலிலிருந்து முழுவதுமாக ஒருவரைக் காப்பாற்றிவிட முடியும். அவ்வாறு பார்க்கும்போது, இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12, வைட்டமின் சி போன்றவை மிக முக்கியச் சத்துகளாகக் கருதப்படுகின்றன. அதனுடன் சேர்ந்து, தண்ணீரும், சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற உப்புகளின் சமநிலையும் உடலில் பாதுகாக்கப்பட வேண்டும்.

டெங்கு நோயாளிக்கு உணவளிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

* கொதிக்க வைத்து ஆறவைத்த நீரையே அடிக்கடி கொடுப்பதுடன், பிற திரவ உணவுகளையும் சேர்க்க வேண்டும். இரண்டு வெவ்வேறு விதமான உணவுகளுக்கு இடையில் 1 குவளை நீரைப் பருகக் கொடுக்கலாம். சளி, இருமல் இருக்கும் வேளையில், தண்ணீருடன் துளசி, இஞ்சி, கற்பூரவல்லி, தூதுவளை போன்றவற்றின் சாறினை சிறிதளவு சேர்த்துக் கொடுக்கலாம்.

* சிறு குழந்தைகளுக்கு வாந்தியோ அல்லது பசியின்மையோ இருக்கும் நிலையில், மூன்று வேளை திட உணவுகள் என்பதைத் தவிர்த்து, பழச்சாறு, சூப், ரசம், தானிய கஞ்சிகள், பருப்பு கடைந்த தண்ணீர், சாதம் வடித்த நீர் ஆகியவற்றை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறு சிறு அளவாகக் கொடுப்பதால் நீர்ச்சத்துடன் சேர்ந்து, வைட்டமின் மற்றும் தாதுக்களும் எளிதில் கிடைப்பதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும். உடல் நிலை தேறும் நிலையில், குழைத்த ரசம் சோறு, பருப்பு சோறு, மசித்த காய்கள் சேர்த்த சோறு, தானியக் கூழ் உணவுகள் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

* காய்ச்சலினாலும், மிகுந்த சோர்வினாலும், மருந்துகள் உண்பதாலும், நாவின் சுவை சற்றே குறைவானதுபோல் இருப்பதும், பசியின்மையும், உணவை ஒதுக்குவதும் நோயாளியிடம் காணப்படும் ஒரு பொதுவான நிலை. இதைத் தவிர்ப்பதற்கு, புதினா, ஏலக்காய், எலுமிச்சை போன்றவற்றை திரவ உணவுகளுடன் சேர்த்துக்கொள்ளலாம். அரிசி கஞ்சி செய்வதைவிட, அரிசியை மிதமான சூட்டில் சற்றே வறுத்து பின் கஞ்சி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

* ரத்தத் தட்டுக்கள் உற்பத்தியாவதற்கு போலிக் அமிலம் மிக முக்கியமானது என்பதால், அந்த சத்து மிகுதியாக உள்ள கடலை, துவரை, அரைக்கீரை, கொத்தவரை, வெண்டைக்காய், புதினா, பசலைக்கீரை, எள், வெந்தயம் போன்றவற்றை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். பருப்புகளை வேகவைத்து குழைத்த சாதமாகவும், ரசமாகவும், கீரை மற்றும் காய்களை சாறாகவோ அல்லது சூப்பாகவோ செய்து கொடுக்க வேண்டும்.

* ரத்தத் தட்டுகள் சற்றே அதிகரிக்கத் துவங்குவதை பரிசோதனை மூலம் தெரிந்துகொண்ட பிறகு, முட்டை, சிறு மீன்கள், ஆட்டிறைச்சி போன்றவற்றை சிறிது சிறிதாக கொடுக்கத் துவங்கலாம். இவற்றில், வைட்டமின் பி12 சத்து மிகுந்துள்ளது. ஆட்டின் எலும்புடன், பருப்பு மற்றும் காய்களையும் சேர்த்து வேகவைத்து சூப் தயாரித்துக் கொடுப்பதால், இரும்புச் சத்தும், போலிக் அமிலமும் பிற வைட்டமின்களுடன் சேர்ந்தே கிடைக்கப்பெறுகிறது.

* வைட்டமின் “சி’ சத்தானது, ரத்தத்தில் இரும்புச்சத்து உட்கிரகிக்கும் தன்மையை ஊக்கப்படுத்துவதால், அந்தச் சத்து அதிகமுள்ள உணவுகளான எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யாப்பழம், சாத்துக்குடி, தக்காளி, பெர்ரி பழங்கள், அடர் பச்சை நிற காய் மற்றும் கீரைகள் ஆகியவற்றை மாற்றி மாற்றி சாறாகக் கொடுக்க வேண்டும். இவற்றுடன் மாதுளை, ஆப்பிள், திராட்சை, சப்போட்டா போன்ற பழங்களையும் சாறெடுத்துக் கொடுப்பதால், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டின் அளவும் அதிகரித்து, விரைவான குணமும் கிடைக்கப்பெறும்.

* சுண்டைக்காய், கருவேப்பிலை, கொத்துமல்லி போன்றவற்றை கொதிக்க வைத்தோ, சாறெடுத்தோ கொடுப்பதால், கால்சியம் சத்தும், இரும்பு சத்தும் ஒரு சேர கிடைப்பதுடன், உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும் உதவி புரிகின்றன. மேலும், உடலின் எதிர்ப்புச் சக்தியை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதில் வைட்டமின் ஏ பெரும்பங்கு வகிப்பதால், அச்சத்து நிறைந்த உணவுகளான முருங்கைக் கீரை, கேரட், மிளகு, சாதிக்காய், அருநெல்லி போன்றவற்றை சாறாக தயாரித்துக் கொடுக்கலாம்.

* தினமும் தவறாமல் ஒரு வேளை பப்பாளி இலைச்சாறும், நிலவேம்பு நீரும் குடிப்பதைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். பப்பாளியில் உள்ள பெப்பெய்ன், டு டோகோபெரால், பிளேவனாய்ட்ஸ், சிஸ்டாடின், கைமோபெப்பெய்ன் போன்ற நுண் பொருட்கள் ரத்தத் தட்டுகளை அதிகரிக்கச் செய்கின்றன. டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்துவதற்கு ஒன்பது மருத்துவப் பொருட்கள் உள்ளடக்கிய, சிறந்த கிருமிநாசினியாகச் செயல்படும் நிலவேம்புக் குடிநீரைப் பயன்படுத்தலாம் என்று 2011-இல் தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டதும், அதை இன்றளவும் பயன்
படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

* பப்பாளி இலை மட்டுமே டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதில்லை. சர்க்கரை வள்ளிக்கிழங்கு இலை, அம்மான் பச்சரிசி இலை, பார்லி புல், ஓக் இலை, வெந்தயக் கீரை போன்றவையும் ரத்தத் தட்டுக்களை உற்பத்தி செய்வதற்கும், காய்ச்சலின் தீவிரத்தை குறைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு, கூடுமானவரையில் வெளிப்புறக் கடைகளிலோ, உணவகங்களிலோ வாங்கிய உணவுகளைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றால், ஒவ்வாமை ஏற்படுவதற்கும், தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், நோயாளியின் நிலை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கிவிடும். பதப்படுத்தப்பட்ட, வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவு
களையும், துரித உணவுகளையும் அறவே தவிர்க்கவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button