உங்கள் புன்னகை இன்னும் அழகாகும்!

ld2153மணிக்கணக்கில் மேக்கப், லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைல், காஸ்ட்லியான உடை மற்றும் நகைகள்… இவை எதிலுமே சாத்தியமாகாத அழகை,   புன்னகை கொடுத்து விடும். ஒரு சின்ன சிரிப்புக்கு அத்தனை சக்தி! அந்த சிரிப்பைத் தாங்கும் உதடுகளை அலட்சியப்படுத்தலாமா? கொஞ்சம்  அக்கறை காட்டினால், உங்கள் புன்னகை இன்னும் அழகாகும். எத்தனை பேர் இருந்தாலும், நீங்கள் தேவதையாகத் தெரிவீர்கள்!

உதடுகளைப் பராமரிக்கவும் அழகுப்படுத்தவும் ஆலோசனைகள் சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் ஹசீனா சையத்.உதடுகளின் அழகைப் பற்றிப் பேசும்  போது, முதலில் அவற்றின் வடிவங்களைப் பார்க்க வேண்டி யது அவசியம். ஒவ்வொருவரின் உதட்டு அமைப்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.  அதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப மேக்கப் செய்தால், அழகு அள்ளும்.

தடித்த உதடுகள்
மேல், கீழ் உதடுகள் தடித்து இருக்கும்.
தடித்த மேலுதடு
மேலுதடு மட்டும் தடித்தும், கீழுதடு சாதாரணமாகவும் இருக்கும்.
தடித்த கீழுதடு
மேலுதடு சாதாரணமாகவும், கீழுதடு தடித்தும் இருக்கும்.
மெல்லிய உதடுகள்
இரண்டுமே மெலிதாக இருக்கும்.
சின்ன வாய்
சொப்பு வாய் என்கிற மாதிரி உதடுகள் மிகச் சிறியதாக இருக்கும்.

எந்த உதட்டுக்கு என்ன மேக்கப்?

தடித்த உதடுகளுக்கு உதடுகளின் நிறத்தில் அல்லது டார்க் ஷேடுகளில் லிப்ஸ்டிக் உபயோகிக்க வேண்டும். பளீர் நிறங்களையும் பளபளா  ஷேடுகளையும் தவிர்க்க வேண்டும்.மேல் அல்லது கீழ் உதடு மட்டும் பெரியதாக இருந்தால், பெரிய உதட்டின் மேல் ஃபவுண்டேஷன் தடவி, சிறியதாக  உள்ள உதட்டுக்கேற்ப அவுட்லைன் வரைந்து, பிறகு லிப்ஸ்டிக் நிரப்ப வேண்டும்.

மெல்லிய உதடுகளுக்கு பளீர் நிறங்கள் பொருந்தும். டார்க் ஷேடுகள் அவர்களது உதடுகளை இன்னும் சிறியதாகக் காட்டும் என்பதால் தவிர்க்கவும்.  பிங்க் ஷேடுகள் நன்றாக இருக்கும்.  சிறிய உதடுகளுக்கு முதலில் அவுட்லைன் கொடுத்து, உதடுகளின் ஓரங்களிலும் அவுட்லைன் கொடுத்து பிறகு  லிப்ஸ்டிக் நிரப்பினால், பெரிதாகத் தெரியும்.சிறியதும் பெரியதுமான அல்லது சரியான வடிவமைப்பில்லாத உதடுகளை உடையவர்கள், டார்க்  ஷேடுகளில் அவுட்லைன் கொடுத்து விட்டு, உள்ளே நேச்சுரல் கலர்களை பயன்படுத்தி சரி செய்யலாம்.

உதடுகளின் வடிவம் எப்படி இருந்தாலும் இந்த முறையில் மேக்கப் மூலம் சரி செய்து விட முடியும். லிப் மேக்கப் என்பது ஒரு கலை. லிப்ஸ்டிக்கை  திறந்தோமா, அப்படியே நேரடியாக உதடுகளில் தடவினோமா என  செய்யக்கூடாது. முகத்தை சோப் போட்டுக் கழுவுவது போல உதடுகளையும்  அடிக்கடி தண்ணீர் வைத்து, மென்மையாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். முதலில் ஃபவுண்டேஷன் போட்டு, திட்டுத்திட்டான உதட்டின் நிறத்தை  சமன்படுத்த வேண்டும்.  பிறகு லிப் லைனர் உபயோகித்து, எந்த வடிவம் வேண்டுமோ அதற்கேற்ப அவுட்லைன் வரைய வேண்டும்.

அடுத்து லிப்ஸ்டிக்கில் சுத்தமான பிரஷ்ஷை தொட்டு, அதன் மூலமே உதடுகளில் நிரப்ப வேண்டும். டிஷ்யூ பேப்பர் வைத்து அழுத்தி, அதிகப்படியான  லிப்ஸ்டிக்கை துடைத்து எடுத்து விடலாம். பக்கவாட்டில் லிப்ஸ்டிக் பட்டிருந்தால், பட்ஸ் உதவியால் மெதுவாக நீக்கலாம். அதற்கு மேல் இன்னும்  பளபளப்பு வேண்டுமானால், லிப்கிளாஸ் அல்லது ஷீன் உபயோகிக்கலாம்.

கிரீம் வடிவிலானது, மேட்

ஃபினிஷ், ஃபிராஸ்ட், டிரான்ஸ்லுஸன்ட் என நிறைய வகைகள் கிடைக்கின்றன. மேட் ஃபினிஷ் என்பது நீண்ட நேரம் அப்படியே இருக்கும். ஃபிராஸ்டட்  என்பது உலர்ந்த தோற்றம் தரும். கிரீம் வடிவிலானது சாதாரணமாக இருக்கும். டிரான்ஸ்லுசன்ட் என்பது உதட்டின் நிறத்துக்கே மாறிக் கொள்ளும்.  யாருக்கு என்ன தேவையோ, அதற்கேற்றதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

உதடுகளைப் பராமரிக்க…

உதடுகளை அடிக்கடி நாக்கினால் தடவியோ, பல்லால் கடித்தோ ஈரப்படுத்தக் கூடாது. குளித்ததும், மென்மையான துணி வைத்து, உதடுகளின் மேல்  உரிந்து நிற்கும் தோலை மெதுவாகத் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும். உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வெண்ணெய், வாசலின் அல்லது  தேங்காய் எண்ணெய் ஏதாவது உபயோகிக்கலாம். உதடுகளை அழகாக்க லிப்ஸ்டிக் போடுவது எத்தனை முக்கியமோ, அதைவிட முக்கியம், அதை  நீக்குவது. தேங்காய் எண்ணெய் கொண்டு லிப்ஸ்டிக்கை துடைத்து எடுக்க வேண்டும்.  உதடுகளில் வெடிப்போ, காயமோ இருந்தால் லிப்ஸ்டிக்  உபயோகிக்க வேண்டாம்.

கூடிய வரையில் வெஜிடபுள் ஆயில் கலந்த லிப்ஸ்டிக்காக பார்த்து உபயோகிப்பது நல்லது. முகத்திலுள்ள இறந்த செல்களை அகற்ற ஸ்க்ரப்  உபயோகிப்பது போல, உதடுகளுக்கான பிரத்தியேக ஸ்க்ரப் உபயோகிக்கலாம். அது உதடுகளின் மேலுள்ள இறந்த செல்களை அகற்றி, நிறத்தைக்  கூட்டும். லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டாம். அதை நீக்கி விட்டு, சாப்பிட்டு முடித்த பிறகு மறுபடி தடவிக் கொள்ளலாம். ‘டச்சப்  செய்கிறேன்’ என்கிற பெயரில், ஏற்கனவே போட்ட லிப்ஸ்டிக்கின் மேலேயே மறுபடி தடவ வேண்டாம். அதை முழுவதும் துடைத்து எடுத்து விட்டு,  மறுபடி புதிதாகத் தடவுவதே சிறந்தது.

Leave a Reply