ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்து கொள்ளுங்கள்! ஆண்கள் இதுவரை வெளியே பகிராத விஷயங்கள்….

ஆண்களின் உலகம் சற்று வித்யாசமானது தான். இதை யார் ஒப்புக் கொள்கிறோமோ இல்லையோ ஆண்கள் கண்டிப்பாக ஒத்துக் கொள்வார்கள். பிறந்ததிலிருந்து காட்டப்படும் அன்பும் ,சுமத்தப்படும் பொறுப்புகளும் ஆண்களை தனி உலகத்தில் வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

அண்ணன்,தம்பி,நண்பன்,காதலன்,கணவன்,அப்பா,தாத்தா,மாமா,சித்தப்பா,பெரியப்பா என்ற எல்லா ஆண் உறவுகளுக்கும் இந்த கதை பிடித்துப் போகும். இது கதையாக இல்லாமல் பலரது வாழ்க்கை அனுபவங்களாக தொகுப்பாக வந்திருக்கிறது. ஆண்கள் இதுவரை வெளியே பகிராத விஷயம் நாமும் அவ்வளவாக கவனிக்காத கவனிக்க மறந்த ஓர் விஷயம் இந்த கட்டுரையில் வெளியாகியிருக்கிறது. தொடரருங்கள்.

அம்மாவின் முத்தம் :
பள்ளி சென்ற ஆரம்பித்த காலத்தில் எப்போது அம்மாவிடம் முதல் முத்தம் வாங்கினீர்கள் நினைவில் இருக்கிறதா. விவரம் தெரியாத வயதில் கொடுத்திருக்கலாம். ஆனால் எனக்கு விவரம் தெரிந்து அப்படியில்லை என்று சொல்கிற ஆண்கள் தான் இங்கே அதிகம்.

ஒர் வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும் போதிலிருந்தே, அவனின் அதிகார தோற்றத்தில் தான் உருவகப்படுத்தி பார்க்கிறோம். அவன் ஆண்…. என்று அவனை உயர்த்திப் பிடிக்க அந்த ஆண் அன்னியப்பட்டுப் போகிறான் என்பது தான் இங்கே யாருக்கும் புரிவதில்லை.

நீ பெரியவன் : இப்போது தான் நடக்கப் பழகியிருக்கும் சிறுவனாக இருந்தாலுமே…. ஆம்பளப்பய அக்காவ பாத்துக்கோ என்ற வசனங்கள் கேட்கத்தான் செய்கிறது. சுமைகளை ஏற்றிக் கொண்டே செல்கிறோமே தவிர அவனுக்கான நேரம்… அவனுக்கென்று இருக்கும் குழந்தைத்தனங்களை ரசித்திருக்கிறோமா?

நாமாக நினைக்கும் யாவும் அவனுக்கானது அல்ல : அவன் அப்படித்தான். என்ற முத்திரையை ஆரம்பத்திலேயே குத்தி விடுகிறோம், வீடு சார்ந்த விஷயங்களில் குடும்பம் சார்ந்த விஷயங்களில் எல்லாம் அவன் கவனம் செலுத்த மாட்டான். அவனுக்கு இதில் தான் விருப்பம், அவன் இப்படித் தான் இருப்பான். விளையாட்டும் நண்பர்களும் தான் அவன் உலகம் என்று தானே இதுவரை நாம் பேசி நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

கேள்விகள் ஆயிரம் : ஒரு நாளாவது உண்மையிலேயே உனக்கு இது பிடிச்சிருக்கா? என்று கேட்டிருப்போமா…. வேறு வழியின்றி செய்து கொண்டிருக்கிறேன் என்று அவர்கள் மனதில் நினைப்பதை வெளியில் சொல்வதற்கான சந்தர்பங்களையாவது ஏற்படுத்திக் கொடுத்திருப்போமா?

குடும்பம் : காதலித்த ஆண்கள் பலரும் இந்த சங்கடங்களை சந்தித்திருப்பார்கள். காதலியை திருமணம் செய்துக் கொள்ளப்போகும் போது எனக்கு ஃபேமிலி இருக்கு…… அவங்களையும் நான் பாக்கணும்ல என்ற ஒரு வசனம் வரும். ஏம்மா…. நாங்க மட்டும் ஆதாம் ஏவாள்ட்டயிருந்து வராம குறுக்குச் சந்து வழியாவா வரோம் எங்களுக்கும் குடும்பம்… அம்மா அப்பா அக்கா தங்கச்சி எல்லாம் இருக்கத்தான் செய்யுது.

இனி எல்லாம் அவனே : திருமணமான பின் இனி எல்லாம் அவன் தான் என்று பில்டப்புகளை ஏற்றி அனுப்பி வைக்கும் யாவருக்கும் தெரிவதில்லை திருமணத்தில் ஆண் பெண் இருவருக்கும் பொறுப்புகள் கூடுகிறது என்று. வீடு,மனைவி,அலுவலகம்,அம்மா,தலைதூக்கும் மாமியார் மருமகள் பிரச்சனைகள் என எல்லாவற்றையும் சமாளிக்கும் ஆபத்பாந்தவனாக பார்க்கும் படலம் நிறுத்தும் வரை கணவன் மனைவி பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.5 12 1

அப்பா : ஆண்களுக்கு இருப்பதிலேயே மிகவும் சங்கடமான ஒரு கேரக்டர் என்றால் அது அப்பா கேரக்டர் தான். தன்னுடைய குழந்தை பிறப்பதிலிருந்து வளரும் ஒவ்வொரு பருவங்களிலும் வெளியே சொல்ல முடியாத சில சங்கடங்களை அவர்கள் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். விதிவிலக்காக ஒரு சிலர் இருந்தாலும், எப்படியாவது இந்த பருவத்தை கடந்து விடுவேன் என்ற ஏக்கத்தில் காலத்தை நகர்த்திக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

முதல் கேள்வி : குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்து வெளியுலகம் பார்க்க, கற்க ஆரம்பித்ததும் நம்மிடம் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். நம்முடைய உருவத்திலிருந்து வருமானம் வரைக்கும் எல்லாமே பல்லிளிக்கும். அவங்க அப்பா வாங்கி தராங்க… நீங்க ஏன் வாங்கித் தர்ல என்ற கேள்வியில் ஆரம்பித்து கேட்கப்படும் எதற்குமே நம்மால் குழந்தைகளிடத்தில் புரிய வைக்கிற பதிலைச் சொல்ல முடியாது.

அப்பா அடிப்பாருடா : இதோடு இன்னொரு கொடுமையும் நடக்கும். ஏதோ குழந்தைகளிடத்தில் அப்பா என்ற கதாப்பாத்திரத்தை பூச்சாண்டி கதாப்பத்திற்கு இணையாகத் தான் நம்மை டீல் செய்வார்கள். சாப்டல அப்பாட்ட சொல்லீருவேன்…. ரொம்பத்தான் சேட்ட பண்ணிட்டு இருக்க அப்பாக்கு போன் போடவா என்ற அப்பாவின் பெயரைச் சொல்லி சொல்லியே அப்பாவை டெரர் வில்லன் ஆக்கிடுவார்கள்.

செல்வங்களா : குழந்தைகளை அணைத்துக் கொள்ள வேண்டும், கொஞ்ச வேண்டும்…. சாரிடா மகனே அப்பாவுக்கு ஆபீஸ்ல வேல நாளைக்கு போகலாம் என்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் ஆசையிருக்கும். ஆனால் முடியாது, அது தான் முன்னாடியே டெடர் வில்லன் கெட்டப் போட்டுத் தான் குழந்தைகளிடத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அப்பா வாசலில் நுழைகிறார் என்றாலே உள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டு புத்தகத்தை எடுத்து வைத்து படிக்க ஆரம்பிக்கும் குழந்தைகள் தான் ஏராளம்.

உனக்கு என்னப்பா தெரியும் : கேட்கும் போதே சுருக்கென்று இருக்கும் வசனம் இது. தோளுக்கு மேல் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என்றாலே அப்பா அம்மாக்கு ஒண்ணும் தெரியாது என்ற எண்ணம் அவர்கள் மனதில் மேலோங்கும். அதனால் எல்லாம் எனக்குத் தெரியும்பா…. இதப்பத்தி உங்களுக்கு என்ன தெரியும் என்ற கேள்விகள் வந்து விழும்… கேட்கும் போது குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள் என்று சந்தோஷப்பட்டாலும் அப்பாக்களுக்கு என்னவோ வருத்தமாகத்தான் இருக்கும்.

பகிர்தலுக்கு ஆள் இல்லை : சிறுவயதிருந்தே ஆண்கள் ஓர் வகையான தனிமைபடுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பதை யாருமே மறுக்க முடியாது, எல்லாத்தையும் சமாளிப்பான்…. இதெல்லாம் அவன் பெருசா எடுத்துக்க மாட்டான் என்று நாமாக நினைத்துக் கொண்டிருக்கும் வசனங்கள் எல்லாம் உண்மையல்ல என்பதை முதலில் உணர வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button