மருத்துவ குறிப்பு

இதோ எளிய நிவாரணம்! பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி?

அதிக நேரம் உட்கார்ந்து நீங்கள் உங்கள் குழந்தைக்கு பாலூட்டும் போது கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்றவை ஏற்படும். பாலூட்டும் போது தாய்மார்கள் சரியாக அமராமல் இருப்பது முதுகு வலி வர காரணமாகிறது. மேலும் ஏற்கனவே பிரசவ காலத்தின் போது நீங்கள் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்பட்டால் பிரசவத்துக்கு பிறகும் அது தொடர வாய்ப்புள்ளது குறிப்பாக நீங்கள் பாலூட்டும் போது.

ஆனால் இந்த காரணங்களுக்காக நீங்கள் உங்கள் குழந்தைக்கு பாலூட்டுவதை நிறுத்த முடியாது. ஏனென்றால் தாய்ப்பால் தான் குழந்தைக்கு உட்டச்சத்து வழங்கும் பிரதான உணவாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் உதவுகிறது.

எந்த நிலையில் அமர்ந்தால் சரியாக தாய்பாலூட்டலாம் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்

சரியான நிலையில் அமர்ந்து தாய்பாலூட்டுவது முதுகுவலி வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்பாலூட்டுவதற்கு பல்வேறு நிலைகள் உள்ளன (உட்கார்ந்த நிலையில், படுத்த நிலையில்) அவற்றில் எது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் வசதியானதாக இருக்கிறது என்பதை கண்டறிந்து அந்த நிலையில் பாலுட்ட பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் அடிக்கடி பாலூட்டும் நிலைகளை மாற்றிக்கொள்ளுங்கள் இது உங்கள் தசைகளுக்கு சற்று ஓய்வைக் கொடுக்கும். பாலூட்டும் போது அதிகமாக முன்னோக்கி சாய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

தலையணைகளை பயன்படுத்துங்கள்

நீங்கள் வசதியாக அமர்ந்த நிலையில் பாலூட்டினாலும், கட்டாயம் தலையணைகளை பயன்படுத்தி உங்கள் முதுகுக்கு சிறிது தாங்கும் வலிமையை கொடுங்கள். மேலும் கழுத்து வலி வராமலிருக்க தலையணையை பயன்படுத்தி உங்கள் குழந்தையை உங்கள் அருகில் கொண்டுவாருங்கள்.

உங்கள் இருக்கையை கவனமாக தேர்ந்தெடுங்கள்

தாய்பாலூட்டும் தாய்மார்கள் குஷன் வைத்த நாற்காலிகளை தவிர்த்து உறுதியான நாற்காலியை தேர்ந்தெடுத்து அதில் நேராக அமர்ந்து பாலூட்ட வேண்டும். இது அதிகமாக முதுகுவலி வருவதை தடுக்கிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உடற்பயிற்சி

குழந்தை உறங்கும் சமயத்தை பயன்படுத்தி பாலூட்டும் தாய்மார்கள் தங்களது முதுகுக்கு சில உடற்பயிற்சிகளை செய்துக் கொள்ளவேண்டும் மேலும் யோகா செய்வதன் மூலம் உங்கள் உடலை வலுவாக வைத்து கொள்ளவும் மன அழுத்தமில்லாமலும் இருக்கலாம்.

உடலில் தேவையான அளவு தண்ணீர் இல்லமலிருப்பதும் உடல் வலியை உண்டாக்கும். எனவே பாலூட்டும் தாய்மார்கள் தேவையான தண்ணீர் அருந்துவதுடன் தாய்பால் ஊட்டும் பொழுது மணிக்கணக்கில் ஒரே நிலையில் அமருவதை தவிர்த்து, சின்ன சின்ன இடைவெளி விட்டு பாலூட்டவும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button