மருத்துவர் கூறும் தகவல்கள்! ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்?

கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்? என்பது குறித்து டாக்டர் சுதா சேஷய்யன் விளக்கம் அளித்துள்ளார்.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்? டாக்டர் விளக்கம்
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை – டாக்டர் சுதா சேஷய்யன்
சென்னை:

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தின் பயன்பாடு குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், ‘தினத்தந்தி’ நிருபருக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு டாக்டர் சுதா சேஷய்யன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை கொரோனா வைரசை தடுக்குமா?

பதில்:- ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்பது மலேரியா நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிற ஒரு மருந்து. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, இந்த மருந்தை பயன்படுத்தினால் நல்ல குணம் இருப்பதை டாக்டர்கள் கண்டார்கள். ஆகவே இந்த மருந்தை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கியுள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் அணுக்கள், ‘இண்டர்பெரான்’ எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்யும். ஆங்கிலத்தில் உள்ள ‘இண்டர்பியர்’ என்னும் சொல்லில் இருந்து வந்த பெயர் ‘இண்டர்பெரான்’ என்பதாகும். வைரசின் பெருக்கத்தில் இடையீடு செய்வதால், இத்தகைய வேதிப்பொருளுக்கு இந்த பெயர் வந்தது. இதேபோல இன்னும் சில வேதிமங்களையும் (இண்டர்ல்யுகின் போன்றவை) நோயாளியின் அணுக்கள், குறிப்பாக அவருடைய நோய் எதிர்ப்பு மண்டல அணுக்கள் உற்பத்தி செய்யும். இவை எல்லாவற்றையும் சேர்த்து, சைட்டோகைன் என்று அழைக்கிறோம்.Tamil News Hydroxychloroquine tablet Who and how much to use Doctors

சில நோய்களில், இத்தகைய சைட்டோகைன்கள் (இவற்றை உற்பத்தி செய்யும் அணுக்களும் சேர்ந்து) மிக அதிகமாக உற்பத்தி ஆகிவிட்டால், எல்லாமாக சேர்ந்து நுரையீரல்களுக்கு படையெடுத்து, மூச்சுத் திணறலையும், பிரச்சினைகளையும் அதிகப்படுத்திவிடும். இதற்கு சைட்டோகைன் ஸ்டார்ம் என்று பெயர்.

கொரோனா நோயிலும், மூச்சு பிரச்சினைகள் ஏற்பட்டபோது, சைட்டோகைன் ஸ்டார்ம் என்பதை கண்டறிந்த டாக்டர்கள், இண்டர்பெரான் உள்ளிட்ட சைட்டோகைன்களை ஹைட்ராக்சிகுளோரோகுயின் தடுக்கும் என்பதை உணர்ந்தார்கள். ஆகவே இந்த மருந்தை கொடுத்தால் சைட்டோகைன் ஸ்டார்மை தடுக்கலாம்.

கேள்வி:- யார்-யார் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை பயன்படுத்தலாம்? எவ்வளவு அளவு பயன்படுத்தலாம்? இதை சாதாரணமாக ஒருவர் பயன்படுத்தினால் கொரோனா வராமல் தடுத்துவிட முடியுமா?

பதில்:- இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு கொடுப்பதற்கு, கோவிட்-19 பணிக்குழு அறிவுறுத்தியுள்ளது. இதுதவிர இன்னும் சிலருக்கும் இதை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தருகிற முன்னணியில் இருக்கும் டாக்டர், செவிலியர் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆய்வக முடிவு வந்தவர்களின் வீட்டில் அவர்களோடு உள்ளவர்கள் ஆகியோருக்கு நோய் அறிகுறிகள் இல்லையென்றாலும், இவர்களுக்கு நோய் தடுப்பாக இந்த மருந்தை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலில் ஒருநாள் காலை, மாலை இருவேளைகளும் 400 மி.கி. அளவும், பின்னர் வாரத்திற்கு ஒருநாள் 400 மி.கி. என்றளவில் 7 வாரங்களுக்கு, உணவுக்கு பின்னர் இந்த மருந்தை உட்கொள்ளலாம். சிகிச்சையில் ஈடுபட்டவர்களுக்கு 7 வாரம் என்பது, வீட்டில் உள்ளவர்களுக்கு 3 வாரம் கொடுத்தால் போதுமானது. நோய் ஏற்படும் அபாயத்தையும், மருந்தினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளையும் ஒப்பிட்டு பார்த்து, நோய் அபாயத்தை தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கையாகத்தான் இதனை பணிக்குழு பரிந்துரைத்துள்ளது.

குறிப்பாக அதி அபாயச்சூழலில் இருப்பவர்கள் என்று கணக்கிட்டு, அத்தகையோருக்கே கூறப்பட்டுள்ளது. இந்த மருந்தை சாப்பிட்டால் நோயை தடுத்துவிடலாம் என்று எல்லோரும் சகட்டுமேனிக்கு கடையில் வாங்கி சாப்பிட முடியாது. சாப்பிடவும் கூடாது. அதுவும்கூட டாக்டரின் பரிந்துரைப்படி மட்டுமே உட்கொள்ளவேண்டும்.

எங்கள் வீட்டில் கொரோனா மாதிரி அறிகுறி இருந்தது. ஆகவே நான் சாப்பிடுகிறேன் என்று செய்யக்கூடாது. 15 வயதுக்கு உட்பட்டவர்கள், விழித்திரை கோளாறு உள்ளவர்கள், ஒவ்வாமை உள்ளவர்கள், வேறு ஏதாவது நாட்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் தடுப்புக்காகக்கூட இந்த மருந்தை பயன்படுத்தவேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Source:  maalaimalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button