பாகிஸ்தான் ஆயுத கிடங்கு மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்.. பரபர வீடியோ

ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் ஐந்து சிறப்புப் ராணுவப் படை வீரர்கள் கொல்லப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு, அதே செக்டாரில் இந்திய ராணுவம் பெரும் பதிலடியை கொடுத்துள்ளது, இது தொடர்பான ட்ரோன் வீடியோ காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது.

பாகிஸ்தான் ராணுவ வெடிமருந்து கிடங்கு, இந்திய போஃபோர்ஸ் பீரங்கி துப்பாக்கிகளால் தாக்கப்பட்டதை இந்த வான்வழி காட்சிகள் காட்டுகின்றன.

சினிமாவில் பார்ப்பதை போல, இந்த வீடியோ பல குண்டு வீச்சுக்களை துல்லியமாக காட்டுகிறது. குண்டு விழுந்ததும், அங்கே இருந்த பொருட்கள் வெடித்து சிதறுகின்றன.

அதிரடி

இந்திய ராணுவ வட்டார தகவல்படி, எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகேயுள்ள பாகிஸ்தான் பயங்கரவாத ஏவுதளங்கள், துப்பாக்கி நிலைகள் மற்றும் வெடிமருந்து குவியல் ஆகியவை குறி வைத்து அழிக்கப்பட்டன. இந்த அதிரடியை பாக். ராணுவம் சற்றும் எதிர்பார்க்கவில்லை.blast7

பதிலடி

குப்வாராவின் கெரான் செக்டாரில் பாகிஸ்தானால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், எனவே, பதிலடியாக இந்தியா இந்த தாக்குதலை தொடுத்து பாகிஸ்தானை நிலைகுலைய வைத்ததாகவும், ராணுவம் கூறுகிறது.

தீவிரவாதிகள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை குப்வாரா செக்டாரில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றபோது அதை தடுத்த இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். பின்னர் 5வது தீவிரவாதியும் கொல்லப்பட்டார். பாக். ராணுவம் இதன் பின்னணியில் இருந்தது.

உயிர் இழந்த வீரர்கள் சஞ்சீவ் குமார், தவேந்திர சிங், பால் கிரிஷன், அமித் குமார் மற்றும் சத்ரபால் சிங் என்று அடையாளம் காணப்பட்டது. இதற்கு பழிவாங்கும் விதமாக இந்திய ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

அதிரடிகள்

எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, பாக். எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இவை அனைத்துமே பதிலடி தாக்குதல்கள்தானே தவிர, இந்தியா முதலில் தாக்குதல் நடத்தியது கிடையாது. ஆனால், பதிலடி ஒவ்வொன்றும் பாக். ராணுவத்தை நிலைகுலைய வைக்கும் அளவுக்கு பயங்கரமாக இருப்பது சமீப கால வீடியோ ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.