மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்…

நிறைய பேருக்கு வாய் துர்நாற்ற பிரச்சனையானது இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருந்தால், மற்றவர்களிடம் தைரியமாக பேசவே முடியாது. ஏனெனில் எங்கு அவர்களின் அருகில் சென்று பேசினால், அவர்களுக்கு நமது வாய் நாற்றம் அடித்து, அவர்களை தர்மசங்கட நிலைக்கு தள்ளிவிடுமோ என்ற எண்ணம் ஏற்படும். குறிப்பாக இத்தகைய துர்நாற்றம் வீசுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

 

அவற்றில் சரியாக வாயை பராமரிக்காமல் இருப்பது மட்டுமின்றி, இன்னும் வேறு பல காரணங்களும் உள்ளன. ஆனால் அந்த காரணங்களைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவை அனைத்தும் அன்றாட பழக்கவழக்கங்களுடன் தொடர்பில் இருப்பவை.

இங்கு அப்படி வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் சில காரணங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து அவைகளை முறையாக பின்பற்றி வந்தால், வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

 

வறட்சியான வாய்

வாய் துர்நாற்றம் அடிப்பதற்கு வாய் வறட்சியும் ஒரு காரணம். பொதுவாக இந்த நிலையானது வாயின் வழியாக சுவாசிக்கும் போது ஏற்படும். இப்படி வறட்சி அடைவதால், வாயில் உள்ள எச்சில் வறண்டு துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே எப்போதும் மூக்கின் வழியாக சுவாசித்துப் பழகுங்கள்.

சரியான மௌத் வாஷ்

மௌத் வாஷ் பயன்படுத்தினால் வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் சரியான மௌத் வாஷ் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஆல்கஹால் குறைவாக உள்ள மௌத் வாஷ்களை பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதுவே கடுமையான துர்நாற்றத்தை வீசும்.

மூக்கு ஒழுகல்

சளி அல்லது மூக்கு ஒழுகல் இருந்தால், மூக்கின் வழியாக சுவாசிக்க முடியாமல், வாயின் வழியாக சுவாசிப்போம். மேலும் காய்ச்சல் இருந்தால் வாய் துர்நாற்றம் அதிக அளவில் இருக்கும்.

காலை உணவு

பெரும்பாலானோர் காலையில் அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று காலை உணவை உட்கொள்ளாமல் கூட செல்வார்கள். ஆனால் காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தாலும், வாய் துர்நாற்ற பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். எனவே சரியான வேளையில் உணவுகளை உட்கொண்டு வர வேண்டும்.

கார்போஹைட்ரேட் குறைவான உணவு

டயட் என்ற பெயரில் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும், வாய் துர்நாற்றம் ஏற்படும். எனவே சரியான முறையில் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை எடுத்து வாருங்கள்.

ஆல்கஹால்

சாதாரணமாக ஆல்கஹால் பருகினாலேயே நாற்றம் வீசும். ஏனெனில் ஆல்கஹால் வாயை வறட்சியடையச் செய்து, வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கிறது. ஆகவே ஆல்கஹால் பருகுவதை நிறுத்துங்கள்.

உணவில் சேர்க்கும் பொருட்கள்

உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிட்டால் கூட, வாய் துர்நாற்றம் வீசும். ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை உட்கொண்ட பின்னர் புதினா அல்லது சோம்பை வாயில் போட்டு மெல்லுங்கள். வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.

தண்ணீர் குடியுங்கள்

முக்கியமாக தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். அப்படி போதிய அளவில் தண்ணீரை குடிக்காமல் இருந்தால், அது கூட வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் தண்ணீரானது வாய் வறட்சியை தடுப்பதுடன், எச்சில் உற்பத்தியை அதிகரிக்கும்.

கல்லீரல் கோளாறு

இன்னொரு காரணம் என்னவென்றால், கல்லீரலில் பிரச்சனை இருந்தாலும், வாய் துர்நாற்றம் வீசும். எனவே வாயை நன்கு பராமரித்து வந்து, மேற்கூறியவற்றை பின்பற்றிய பின்னரும் வாய் துர்நாற்றம் அதிக அளவில் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் உடலில் அம்மோனியாவானது அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் தான் வாய் துர்நாற்றம் வீசுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button