தலைமுடி சிகிச்சை

தெரிஞ்சுக்கங்க! குளிர்காலத்தில் அதிகமான முடி உதிர்வை சந்திக்கும் ஆண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்!

குளிர்காலம் என்பது அனைவருக்கும் பிடித்த காலமாக தான் இருக்கும். குறிப்பாக ஆண்களுக்கு பிடித்த காலம். ஏனென்றால், வியர்வை இல்லை, வியர்க்குரு இல்லை. இது போதாதா என்ன. ஆனால், வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை உடல் சந்திக்கக் கூடும். உடனே அனைவருக்கும் சரும வறட்சி நினைவிற்கு வரும். ஆனால், அதை விட முக்கிய பிரச்சனை ஒன்று அதிகமாக ஏற்படும். அது தான், கூந்தல் பிரச்சனை.

 

முடி இல்லை என்பது ஒரு பிரச்சனையாக இருந்தாலும், இருக்கும் முடியை பாதுகாப்பது என்பது கடினத்திலும் கடினமான வேலை. சாதாரணமாக, மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் முடி வறட்சி, அரிப்பு தொல்லை போன்றவை அதிகமாகவே இருக்கும். இந்த பிரச்சனைகளை சாதாரணமாக விட்டுவிட்டால் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

 

பெண்கள் என்றால் உச்சி முதல் பாதம் அனைத்திலும் முறையாக பராமரிப்பை மேற்கொள்பவர்கள். அதுவே, ஆண்கள் முகத்தை பற்றியே கவலைப்படுவதில்லை இதிலெங்கே முடிக்கு பராமரிப்பு. இருப்பினும், இந்த குறிப்புகளை பின்பற்றுவது மிகவும் அவசியமான ஒன்று. இல்லை, முடியை இழக்க நேரும். குறைவான முடிக்கு எதுக்கு பராமரிப்பு என்ற எண்ணம் தான் அனைத்திற்கும் காரணம்.

கடும் குளிரில் முடியை பாதுகாக்க தவறுவது மிகவும் ஆபத்து. தினமும் இதையெல்லாம் செய்ய வேண்டும் என கூறவில்லை. இப்போது சொல்லப்போகிற குறிப்புகளை குளிர்காலத்தில் முறையாக பின்பற்றி ஆரோக்கியமாக, அழகான முடியை பெறுங்கள் என்று தான் சொல்கிறேன். வாருங்கள், அவற்றை தெரிந்து கொள்வோம்…

உங்கள் ஷாம்பு பிரச்சனையாக இருக்கலாம்

முடியை பொறுத்தவரை அப்படியே நேரடியாக பயன்படுத்துவது என்றால் அது ஷாம்பு தான். நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவின் கெமிக்கல் அளவு மிகவும் முக்கியம். லேசான ஷாம்புவை பயன்படுத்துவதே சிறந்தது. ஏனென்றால், கடுமையான ஷாம்பு உங்கள் ஸ்கால்ப்பை சேதப்படுத்தக்கூடும். ஆரோக்கிமான ஸ்கால்ப் தான், ஆரோக்கியமான முடிக்கு அஸ்திவாரம். எனவே, ஆர்கானிக் மற்றும் லேசான ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

எண்ணெய் தேய்ப்பது அவசியம்

ஸ்கால்ப் கூட சருமம் மாதிரி தான். குளிர்காலத்தில் சருமம் எப்படி வறண்டு காணப்படுமோ, ஸ்கால்ப் கூட வறண்டு விடும். எனவே, ஸ்கால்ப்பில் ஈரப்பதத்தை தக்க வைப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதன்மூலம், முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய் என எதுவாக இருந்தாலும் சரி, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து சில மணி நேரங்கள் கழித்து குளித்து பாருங்கள் நீங்களே முடியில் ஏற்பட்டுள்ள வித்தியாசத்தை பார்க்கலாம்.

ஹேர் ட்ரையர் வேண்டாமே

தலைக்கு குளிப்பது சுலபம் என்றாலும், முடியை காயவைப்பது அனைவருக்கும் கடினமான விஷயமாகவே மாறிவிட்டது. ஈர முடியை காய வைக்க ஹேர் ட்ரையர் உபயோகிக்காதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனை செய்ய வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். அது உங்கள் கூந்தலை சேதப்படுத்துவதோடு மட்டுமின்றி, ஸ்கால்ப்பில் அதிகப்படியான வெப்பம் படுவதால் அரிப்பு பிரச்சனையும் ஏற்படக்கூடும். மேலும். கூந்தலின் வேர்களை பாதித்து முடி உதிர்வை அதிகப்படுத்திவிடும்.

கண்டிஷனர் பயன்படுத்துங்கள்

தலைக்கு குளித்து விட்டு, முடியில் கண்டிஷனர் அப்ளை செய்வது என்பது, கூந்தலுக்கு ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்குவது போன்றது. அது உங்கள் கூந்தலில் ஈரப்பதத்தை தக்க வைத்து, அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கும். ஷாம்பு பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் பயன்படுத்த மறக்க வேண்டாம்.

தொப்பி அணிவது சிறந்தது

அழகு மற்றும் ஸ்டைல் ஆகியவற்றிற்காக மட்டும் தொப்பி அணிய சொல்வதில்லை. கடுமையான குளிரில் இருந்தும், வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் ஏசி காற்று, சூரியனின் புற ஊதாக்கதிர்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருந்து கூந்தலை பாதுகாக்கிறது. எனவே, வெளியே செல்லும் போது தொப்பி அணிய மறக்க வேண்டாம்.

ஹேர் ஜெல்லுக்கு டாடா சொல்லிடுங்க..

அன்றாடம் ஜெல் பயன்படுத்துவதை பழக்கமாக கொண்டவரா நீங்கள்? அப்படியென்றால் முதலில் அதனை நிறுத்துங்கள். ஸ்டைலுக்காக பயன்படுத்தப்படும் அந்த ஜெல், முடியின் ஈரப்பதத்தை நீங்கி வறட்சியை தந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு அடித்தளமாக அமைகிறது. மேலும். இந்த குளிர்காலத்தில் அதனை செய்வதால், பிரச்சனைகள் தீவிரமடையக்கூடும். எனவே, தினமும் ஜெல் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, கூந்தலுக்கு சிறிது ஓய்வை கொடுங்கள்.

முடியை ட்ரிம் பண்ணிக்கலாமே..

ஆண்களுக்கு இருக்கும் சிறிய முடி கூட பிரச்சனைகளை சந்திக்க தான் செய்கிறது. அந்த முடியில் கூட சிக்கலை சந்தித்தால், ட்ரிம் செய்து கொள்வது தான் சிறந்தது. ஏனென்றால், அப்படி செய்யும் போது முடி உதிர்வும் இருக்காது, பராமரிப்பும் சுலபமாகிவிடும்.

அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை உட்கொள்ளுங்கள்

குளிர்காலத்தில் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆரோக்கியமான உணவை உண்டு, அதிக அளவில் நீரை பருகுங்கள். குறிப்பாக, குளிர்காலத்தில், துரித உணவுகள், அதிகமான எண்ணெய் மற்றும் அதிகப்படியான சர்க்கரை போன்றவைற்றை குறைத்திட வேண்டும். இப்படி சாப்பிடுவது, கூந்தலுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலுக்கும் நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button