மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சிசேரியனுக்கு பிறகு கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

குழந்தையை பிரசவித்த பிறகும் சற்று கூடுதலாகவே உடலை கவனித்துகொள்ள வேண்டும். அதிலும் சுகப்பிரசவம் இல்லாமல் சிசேரியன் செய்துகொண்டவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

உணவு விஷயத்துக்கும் இவை பொருந்தும். அப்படி தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் குறித்தும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். இது குறித்து தெரிந்துகொள்வோம்.

சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி சத்டு நிறைந்தவை என்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகம் தருபவை. இவை உடலுக்கு நன்மை மட்டுமே செய்யகூடியவை என்பதையும் மறுக்கமுடியாது.

ஆனால் சிசேரியன் சிகிச்சைக்கு பிறகு இந்த வகையான பழங்களை அளவாக எடுத்துகொள்ள வேண்டும். இயன்றவரை தவிர்ப்பது நல்லது.

சிசேரியன் முடிந்து காயம் ஆறும் வரையில் சிட்ரஸ் பழங்களை தவிர்த்து பிறகு படிப்படியாக சேர்க்க வேண்டும். அதுவும் அளவாகவே. மற்ற பழங்களை மருத்துவரின் அறிவுரையோடு எடுத்துகொள்ளலாம்.

காரம் நிறைந்த உணவு
பொதுவாகவே அதிக காரம், அதிக மசாலா சேர்த்த உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதிலும் வயிற்றில் புண் வரவழைக்க கூடிய அளவுக்கு தீங்கு தரக்கூடியது. சொல்லபோனால் கார உணவுகள் மன அழுத்தத்தை இன்னும் கூடுதலாக்கவே செய்யும்.

காரம் நிறைந்த உணவுளை எடுத்துகொள்ளும் போது அவை சிசேரியன் செய்த ரணத்தை ஆற்ற செய்யாது. குறிப்பாக இரைப்பையில் பிரச்சனைகளை உண்டாக்கும். காரம் நிறைந்த உணவை எடுத்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலும் அவை தாய்ப்பாலில் சேர்ந்து குழந்தைக்கு காரத்தன்மையை உண்டாக்கிவிடும். குறைந்தது ஒருமாதமாவது உணவில் காரம் சேர்க்காமல் இருப்பது நல்லது.

​குளிர்ச்சியான பானங்கள்
கார்பனேட்டட் பானங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை. இது எல்லா காலங்களிலும் உடலுக்கு கெடுதல் செய்ய கூடியவையே. பழச்சாறுகளை குளுமையில்லாமல் குடிக்கலாம்.

அதிலும் வீட்டில் தயாரித்தவற்றை மட்டுமே குறிப்பிட்ட பழக்கலவைகளை மட்டுமே மருத்துவரின் அறிவுரையோடு எடுத்துகொள்வது நல்லது.

உணவு வகைகளை சூடாக சாப்பிடக்கூடாது என்பது போன்றே அதை குளிர்ச்சியாகவும் எடுக்க கூடாது. காலையில் செய்த உணவை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து குளிரவைத்து மறுநாள் எடுத்து சாப்பிடுவதும் கெடுதலை தரக்கூடியதே. அதிக குளிர்ச்சி நிறைந்த பொருள்கள் தாய்க்கு சளி பிடிப்பை உண்டாக்கும். அது குழந்தைக்கும் எளிதில் பரவக்கூடும்.

​எண்ணெய் உணவுகள்
கர்ப்பக்காலத்தில் செரிமானக்கோளாறுகளால் சாப்பிடமுடியாத எண்ணெய் பண்டங்களை குழந்தைபிறந்த பிறகு சாப்பிடலாம் என்று நினைக்கலாம். இப்போதுதான் முன்னிலும் அதிகமாக கவனம் கொள்ள வேண்டும்.

எண்ணெய் அதிகம் இருக்கும் உணவு பொருள்கள், எண்ணெயில் பொரித்தெடுக்கும் உணவுகள், வறுவல் பண்டங்களை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். இயல்பாகவே குழந்தை தாய்ப்பாலை கக்கிவிடுவார்கள். இந்நிலையில் எண்ணெய் உணவுகளை எடுத்துகொள்ளும் போது குழந்தைக்கும் செரிமான பிரச்சனை உண்டாகவே செய்யும்.

​ஆல்கஹால்
சமீப வருடங்களாக பெண்களும் ஆல்கஹால் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். கர்ப்பக்காலம் தொடங்கி பிரசவக்காலம் அது முடிந்து தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரை ஆல்கஹாலை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இவை தாய்ப்பால் சுரப்பில் பாதிப்பை உண்டாக்கிவிடக்கூடும்.

சிசேரியனுக்கு பிறகு எடுத்துகொள்ளும் உணவுகள் உடலுக்கு வலு கொடுப்பதற்காக மட்டும் அல்ல, அவை அறுவை சிகிச்சையின் மூலம் உண்டான காயத்தை ஆற்றுவதற்கும் துணைபுரிகிறது.

ஊட்டச்சத்து மிக்க உணவாக இருந்தாலும் அவை எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாக இருக்க வேண்டும். வயிறு கோளாறுகளை உண்டாக்காமலும் இருக்க வேண்டும். அப்போதுதான் தாயும் சேயும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button