தலைமுடி சிகிச்சை

தெரிஞ்சிக்கங்க… முடி கொட்டுவதைத் தவிர்க்க என்ன சாப்பிடலாம்?

முடி கொட்டுவது என்பது ஒரு பொதுவான ஆனால் மிகவும் கவலைத் தரக்கூடிய பிரச்சனை. அப்படி முடி அதிகம் கொட்டும் போது, நம்மில் பலர் உடனடியாக முடி பராமரிப்பு மருந்துகளையோ அல்லது பொருட்களையோ நாடுவோம். ஆனால், அப்படி செய்வதற்கு பதிலாக, நம் அன்றாட உணவுமுறையைக் கண்டறிந்து அவற்றை உடனே சரிசெய்வது மிகவும் முக்கியம்.

அதிலும் குறிப்பாக முடி வேர்களை பலப்படுத்தும், முடியை வலுவாக்கும் மற்றும் வளர்ச்சியை அதிகப்படுத்தும் முக்கிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை டயட்டில் சேர்க்க வேண்டியது மிகவும் அவசியம். இப்போது முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு தரும் முக்கிய உணவுகளைப் பற்றி பார்ப்போம்.

சால்மன்

சால்மன் மீனில் வைட்டமின் டி சத்துகள் நிறைந்துள்ளதுடன் முடி வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் கொண்டுள்ளது. நம் மயிர்கால்களுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் இந்த சால்மனில் உள்ளது. சால்மன் உள்ளிட்ட பிற கடல் உணவுப் பொருட்களில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. இதனால், உங்கள் முடிக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகளான உலர்ந்த தலைச்சருமம், பொடுகு மற்றும் முடி உதிர்வு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அளித்து முடிக்கு ஈரப்பதத்தை அளிக்கும்.

சோயா

இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யத் தேவையான தாமிரத்தை சோயா கொண்டுள்ளது. இதன் குறைபாட்டால், முடியின் வலு குறைந்து உடைந்து உதிரத் தொடங்கும். எனவே தினமும் ஒரு கப் சோயா பால் அருந்துவது, சிறிது தயிர் எடுத்துக் கொள்வது மற்றும் சோயா சீஸ்களை உண்பது உகந்தது.

ப்ளூபெர்ரி

முடித் திசுக்களை ஒன்றாக வலுவாக வைக்கவும், முடியை ஆரோக்கியமாக வைக்கவும் வைட்டமின் சி சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் குறைபாடு ஏற்பட்டால், மெலிந்த ஆரோக்கியமற்ற, உடைந்துவிடும் நிலையிலுள்ள முடி வெடிப்புகளுக்கு வழிவகுக்கும். ப்ளூபெர்ரி பழங்களில் இந்த வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. ஆகவே இதை தினசரி உங்கள் உணவுகளில் எடுத்துக் கொள்ளலாம்.

வால்நட்

வால்நட் பருப்புகளில், பயோடின், ஒமேகா-3 போன்ற கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் ஈ, தாமிரம் போன்ற முடி ஆரோக்கியத்திற்கு உகந்த சத்துக்களும் அதிகம் நிறைந்து காணப்படுகின்றன. இவை உங்கள் முடி தன் இயற்கையான நிறத்தை காப்பதோடு, வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்தும் காத்து பொலிவுடன் வைக்கின்றன.

முட்டை

அன்றாட உணவில் புரோட்டீன் அதிகம் கொண்டுள்ள முட்டை உபயோக்கிப்பதை அதிகப்படுத்துவதன் மூலம் முடி தொடர்பான பெரும்பாலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். புரோட்டீன்கள் திசு வளர்ச்சிக்கும், தலைச்சருமத்திற்கும் மிகவும் முக்கிய சத்தாகும். இவை முடி உற்பத்தி, இழந்த முடியை ஈடுசெய்தல், முடி வளர்ச்சிக்கு உதவுதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும் சீஸ், கோழிக்கறி, மீன் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் விலங்குப் புரதம் மிகவும் உகந்தது.

பசலைக் கீரை

உங்களுடைய ஊட்டச்சத்து இரும்புச்சத்து இல்லாமல் நிறைவுறாது. இரும்புச்சத்து ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பணுக்கள் உருவாகவும், ஆக்ஸிஜன் மற்றும் இரத்தத்தை தலைச் சருமத்திற்கு எடுத்துச் செல்லவும் உதவுகின்றது. எனவே கிட்னி பீன்ஸ், பருப்புகள், கொண்டைக்கடலை ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் இரும்புச்சத்தை அதிகரிக்க வேண்டும். அதிலும் பெண்களுக்கு இரும்புச்சத்தானது இருமடங்கு தேவைப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் மாதவிடாய் நேரங்களில் அதிக அளவு ரத்தத்தை இழக்கிறார்கள். மேலும் பசலைக்கீரையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது என்பது நாமறிந்ததே.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்குகளில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ சத்தை உருவாக்க உதவுகிறது. இந்த வைட்டமின் தலைச் சருமத்திற்குத் தேவையான அவசியமான எண்ணெய்களை உருவாக்க உதவுகிறது. இந்த எண்ணெய்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. இவை இல்லாவிட்டால், உங்கள் தலை அரிப்புடனும் வேதனையுடனும் இருக்கும். ஆகவே சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை வேக வைத்து உண்பது நன்கு சுவையுடன் இருக்கும். வேண்டுமென்றால் அத்துடன் சற்று எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

நம் சருமத்தைப் போலவே, நம் தலைமுடியும் வாழ்கைத் தரத்தையும், பொது ஆரோக்கியத்தையும் காட்டுவதாக உள்ளதால், முடி வளர்ச்சிக்கு உதவும் செல்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை தொடர்ந்து தருவது மிகவும் அவசியமாகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button