ஆரோக்கியம்எடை குறைய

என்ன  எடை  அழகே!

திருமணமான புதிதில் ஹீரோயின் மாதிரி இருக்கிற பெண்கள், ஒரு குழந்தையைப் பெற்றதும் அக்கா, அண்ணி கேரக்டரில் நடிக்கிறவர்கள் மாதிரி மாறிப் போக வேண்டியதில்லை. சரியான உணவுக்கட்டுப்பாடும், முறையான உடற்பயிற்சியும் இருந்தால், எந்த வயதிலும் ஹீரோயின் போலவே வலம் வரலாம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

என்ன எடை அழகே- சீசன் 2’வில் தேர்வான தோழிகள் பெரும்பாலானவர்களும் பிரசவத்துக்குப் பிறகு பருமனானவர்களே… குறிப்பாக தொப்பை பிரச்னை அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையைக் கொடுத்திருந்ததையும் பார்க்க முடிந்தது..

தி பாடி ஃபோகஸ்’ உரிமையாளரும் டயட்டீஷியனுமான அம்பிகா சேகர், என்ன எடை அழகே’வின் சீசன் 2வில் தேர்வான தோழிகளுக்கு எடை குறைப்புப் பயிற்சிகளைக் கொடுத்து வருகிறார். உடலின் ஒட்டுமொத்த எடையும் குறைந்து, தன்னம்பிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் தோழிகள். வயிற்றுச் சதையைக் குறைப்பதே அவர்களது
அடுத்த டாஸ்க்காக இருந்தது.

வஜ்ரா ஹெல்த் அண்ட் ஃபிட்ன’ஸின் ஃபிட்னஸ் பயிற்சியாளர் அருணகிரியுடன் இணைந்து, தோழிகளுக்கு வயிற்றுச் சதையைக் குறைக்கும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார் அம்பிகா.

பெண்களுக்கு அதிகம் சதை போடற இடம் வயிறு மற்றும் இடுப்புப் பகுதி. குறிப்பா பிரசவத்தின் போது அந்தப் பகுதி தசைகள் விரிவடையுது. பிரசவத்துக்குப் பிறகு அந்தத் தசைகள் தளர்ந்து, லூசாகுது.  குழந்தை பிறந்த முதல் ஒரு வருஷத்துக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியிருக்கும். அதனால அந்த காலகட்டம் வரைக்கும் டயட் மூலமா எடையை குறைக்க முடியாது. சுகப்பிரசவம்னா குழந்தை பிறந்த 20வது நாள்லேருந்தும், சிசேரியனா இருந்தா, 6 மாசத்துக்குப் பிறகும் சில உடற்பயிற்சிகளை செய்யறது மூலமா கர்ப்ப காலத்துல சேர்ந்த அதிகபட்ச எடையை உதறித் தள்ளலாம்.

பிரசவமான ஒரு வருஷத்துக்குள்ள இந்த அதிகப்படியான எடையை் குறைக்கலைன்னா, அப்புறம் அதுக்காக ரொம்பவே மெனக்கெட வேண்டியிருக்கும். இன்னும் சில பெண்களுக்கு பரம்பரையா, இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகள்ல சதை போடும். சிலர் ரொம்ப வருஷமா டான்ஸ் பண்ணிட்டு, திடீர்னு அதை  விட்ருப்பாங்க. அதனாலயும் வெயிட் போடும். அதை செலுலைட்’னு சொல்றோம். எப்படி இருந்தாலும் எப்பேர்ப்பட்ட எடையையும் முயற்சியும் பயிற்சியும் இருந்தா குறைச்சிட முடியும்…’’ – பெண்களுக்குப் பிரச்னை தரும் இடுப்பு மற்றும் வயிற்றுச் சதை பற்றிப் பேசினார் அம்பிகா. அடுத்து வயிற்றுப் பகுதிச் சதைகளைக் குறைக்க உதவும் பயிற்சிகளைப் பற்றி விளக்கி, செயல்முறை விளக்கமும் அளித்தார் அருணகிரி.

ஸ்விஸ் பால் வச்சு உடற்பயிற்சி செய்யற போது, முதுகை வளைச்சு பண்ற பயிற்சிகள் சிரமமா இருக்காது. அது ஒரு சப்போர்ட்டா இருக்கும். இதுல பால் மேல மல்லாக்கப் படுத்துச் செய்யற பயிற்சியும் குப்புறப்படுத்துச் செய்யற பயிற்சியும் பிரசவத்துக்குப் பின்னாடி பெண்களுக்கு உண்டாகிற தொப்பைப் பிரச்னைக்குப் பெரியளவுல உதவியா இருக்கும். கைகள்ல சதை போடற பெண்கள், டம்பிள்ஸ் வச்சு பயிற்சி பண்ணலாம். அது வாங்க முடியாதவங்க 1 லிட்டர் வாட்டர் பாட்டிலை வச்சுப் பண்ணலாம்.

இந்த எல்லாப் பயிற்சிகளுக்கும்  உடற்பயிற்சி ஆலோசகரோட முறையான வழிகாட்டுதல் அவசியம்.  உடலைத் தயார்படுத்தற வார்ம் அப் பயிற்சிகளுக்குப் பிறகுதான் எந்த ஒரு எக்சர்சைஸையும் ஆரம்பிக்கணும். இன்னிக்கு செய்ய ஆரம்பிச்சு, நாளைக்கே பலனை எதிர்பார்க்கக் கூடாது. பொறுமை அவசியம்…’’ என்ற அருணகிரி, அடுத்த இதழில் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சதையைக் குறைக்கும் பயிற்சிகளைக் கற்றுத் தரவிருக்கிறார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button