உடல் பயிற்சி

மூளை சுறுசுறுப்பாக இயங்க தினமும் 20 நிமிட யோகா

அமெரிக்க ஆய்வில் தகவல்

மூளையின் செயல்பாடுகளைத் தூண்டிவிட்டு, சுறுசுறுப்பாக இயங்க நாள்தோறும் ஒருவர் 20 நிமிடங்கள் யோகா செய்தலே போதுமானது என்று அமெரிக்காவில் உள்ள இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிலும் குறிப்பாக ஹதாயோகா எனக்கூறப்படும் மூச்சுப்பயிற்சி, பிராணயாமம் ஆகியவை ஆய்வில் பங்கேற்றவர்களின் மூளை செயல்பாட்டின் வேகம், கூர்ந்து கவனிக்கும் தன்மையை அதிகரித்தது, சுவாசதத்தையும் சீரானதாக மாற்றி குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில், இந்திய மரபு வழியைச் சேர்ந்த நேகாகோதே எனும் மாணவி தலைமையில் யோகா குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக 30 கல்லூரி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு தினமும் 20 நிமிடங்கள் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியும் மற்றொரு பிரிவுக்கு யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் யோகா செய்த மாணவிகளின் மூளையின் செயல்பாட்டில் சுறுசுறுப்பு , எதையும் கூர்மையாக நோக்கும் பாங்கு, சுவாச எளிமையிலும் முன்னேற்றம் காணப்பட்டது.

இதுகுறித்து ஆய்வு நடத்திய மாணவி நேகாகோதை கூறுகையில், யோகா என்பது இந்தியாவின் பழங்கால அறிவியல் மற்றும் வாழ்க்கை முறை. யோகா செயல் முறை என்பது உடல் ரீதியான இயக்கங்கள், செயல்பாடுகள் மட்டுமல்லாது, சுவாசத்தை ஒழுங்குபடுத்துதல், தியானத்தையும் குறிக்கும். நாங்கள் நடத்திய இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் யோகா செய்தவர்கள் தங்களின் 20 நிமிட பயிற்சிக்குப் பின்பு, மூளையின் செயல்பாட்டில் ஒரு விதமான புத்துணர்ச்சி இருப்பதை உணர்ந்தனர். ஆனால், உடற்பயிற்சி செய்தவர்கள் அதை உணரவில்லை.

20 நிமிட யோகா பயிற்சியில் அமருதல், நிற்பது மற்றும் தரையில் முகத்தை மேல் நோக்கி வைத்திருக்கும் சுபைன் யோகநிலை ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. பல்வேறு விதமான தசைகளுக்கு ஊட்டம் கொடுக்கும் பயிற்சிகளும், ஆழ்ந்த மூச்சு பயிற்சியும் வழங்கப்பட்டது.  ஆனால், ஏரோபிக் எனப்படும் உடற்பயிற்சியில் டிரட் மில்லில் நடைபயிற்சி செய்தல், ஓடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் 20 நிமிடங்கள் வழங்கப்பட்டன. ஆனால், ஆய்வின் முடிவில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகளின் மூளையின் சுறுசுறுப்பு, செயல்பாட்டில் துல்லியத்தன்மை, சுவாசத்தில் எளிமை ஆகியவைகளில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் இருப்பதை மாணவிகளும் , நாங்களும் உணர்ந்து, ஆச்சர்யமடைந்தோம்.

மேலும், எந்த விசயத்தையும் எளிதாக கிரகித்துக்கொள்வது, தெளிவான கண்னோட்டத்துடன் அணுகுதல் போன்ற முன்னேற்றங்களும் இருந்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், உடற்பயிற்சி செய்த மாணவிகளின்  மூளைத்திறனிலும் , சுவாசத்திலும் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை அந்த மாணவிகளும் உணர்ந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button