முகப் பராமரிப்பு

தெரிஞ்சிக்கங்க…அழகு சாதனப் பொருட்களில் கலந்துள்ள அபாயகரமான ரசாயனங்கள்!!

இப்போதெல்லாம், நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் அழகுப்படுத்துவதற்கான பொருட்கள் மார்க்கெட்டில் கிடைக்கத் தொடங்கிவிட்டன. பல நிறுவனங்கள் பல கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு புதிது புதிதாக அவற்றைத் தயாரித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

ஒரு மாலுக்கோ அல்லது சூப்பர் மார்க்கெட்டுக்கோ சென்று பார்த்தால், அழகு சாதனப் பொருட்களை வைத்திருக்கும் இடத்தில் தான் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கும். நாமும் என்ன கிடைத்தாலும் விடுவதில்லை. ‘ஒரு கை பார்த்துத் தான் விடுவோமே’ என்று சாம்பிள் பார்ப்பது போல அனைத்தையும் வாங்கி வீட்டில் அடுக்கிக் கொண்டே இருக்கிறோம்.

இருந்தாலும், அந்தப் பொருட்களில் எந்த விதமான ரசாயனங்கள் கலந்துள்ளன, பக்க விளைவுகள் இருக்குமா என்பது பற்றி நாம் துளியும் கவலைப்படுவதில்லை. இனியாவது, நாம் இது குறித்து கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அழகு சாதனப் பொருட்களில் கலந்திருக்கும் அபாயகரமான ரசாயனங்கள் குறித்தும், அவற்றின் விளைவுகள் குறித்தும் இப்போது பார்க்கலாம்.

மெத்தில் ஐசோதயாஸோலினோன் (Methylisothiazolinone)

சோப்புகள் மற்றும் ஹேண்ட்வாஷ் ஆகியவற்றில் இந்த ரசாயனம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இது நரம்புகளை எளிதில் தாக்கக் கூடியதாம். அல்சைமர் என்ற மோசமான ஒரு நரம்பு வியாதி உள்பட பல்வேறு நோய்கள் தாக்கும் ஆபத்து உள்ளதாம். ஆனால், எந்தவிதமான பக்க விளைவுகளும் இருக்காது என்பது போலத் தான் இந்தத் தயாரிப்புகளுக்கான விளம்பரங்கள் தூள் பறக்கும்.

சோடியம் லாரில் சல்பேட் (Sodium Lauryl Sulphate)

பேஸ்ட், ஷேவிங் க்ரீம், சோப்புகள், டிடர்ஜெண்ட்டுகள், என்று நீண்டு கொண்டே போகும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பான்மையான பொருட்களில் இந்த ரசாயனம் கலந்துள்ளது. நுரை வருவதற்காகத் தான் இந்தத் தயாரிப்புகளில் எல்லாம் இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது நம் உடலுக்குள் புகுந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கி, கடைசியில் புற்றுநோயில் கொண்டு போய் விடுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளதாம்!

பாதரசம் (Mercury)

இது ஒரு விஷத் தன்மையுள்ள வேதிப் பொருள் என்பது நிச்சயம் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். ஆனால், பெண்கள் தம் உதடுகளில் அப்பிக் கொள்ளும் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் பளபளப்புடன் இருப்பதற்கான காரணம் பாதரசம் தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இதனால், அலர்ஜி மட்டுமல்லாமல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்துக்களும் உள்ளன. ஜாக்கிரதை!

கோல் தார் (Coal tar)

பொடுகு மற்றும் அரிப்பு நோய்களுக்காகத் தயாரிக்கப்படும் பொருட்களில் இந்த ரசாயனம் வெகுவாகக் கலந்துள்ளது. கார்சினோஜென் என்றும் அழைக்கப்படும் இந்த ரசாயனம், நம் சருமத்தில் மிகவும் எளிதாகக் கரைந்து, எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கண், மூக்கு, தொண்டை மற்றும் சருமத்தில் பயங்கரமான எரிச்சலை ஏற்படுத்தி, நிரந்தர அலர்ஜி வியாதிகளைத் தரும் அபாயம் உள்ளது. ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் இந்த ரசாயனத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றால் அதன் அபாயத்தை யூகித்துக் கொள்ளுங்கள்.

பாராபென் (Paraben)

தோல் மற்றும் முடி அழகு சாதனப் பொருட்களில் இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. ஷாம்பு, பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களிலும் கூட உபயோகப்படுத்தப்படுகிறது. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை சோதனை செய்த போது, அவர்கள் அனைவரின் உடலிலும் இந்த ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மார்பகப் புற்றுநோய் தற்காலத்தில் எவ்வளவு வேகமாகப் பரவி வருகிறது என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button