23
ஆரோக்கியம் குறிப்புகள்

உயிரையுமா பறிக்கும் குளிர்பானம்?

இன்றே விழிப்போம்

யாரேனும் இளம் வயதில் திடீர் மரணம் அடைந்தால் ‘தம், தண்ணின்னு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவருக்கு இப்படி ஒரு முடிவா?’ என்று பலரும் அங்கலாய்த்துக் கொள்வார்கள். மது மற்றும் புகைப் பழக்கம் மட்டுமல்ல… நமது தவறான உணவுப் பழக்கமும் உயிர்கொல்லியாக மாறிவிடும். இதற்கு மலையாள திரைப்பட இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் மரணமே எடுத்துக்காட்டு.

மூளைச்சாவில் உயிரிழந்த ஹிதேந்திரனின் இதயத்தை குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் தேனாம்பேட்டையிலிருந்து முகப்பேருக்கு எடுத்துச் சென்று வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. இந்த உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து இவர் மலையாளத்தில் இயக்கிய திரைப்படம் ‘ட்ராஃபிக்’.

இப்படம்தான் ‘சென்னையில் ஒரு நாள்’ என தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. ப்ரீ ஸ்கூல் தொடங்க நினைக்கும் ஒரு பெண் எதிர்கொள்ளும் சிக்கலை அடிப்படையாக வைத்து இன்றைய கல்வி முறை குறித்தான பார்வையையும் முன் வைத்து ‘மிலி’ எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படி தொடர்ச்சியாக தனது படங்களில் சமூக அக்கறையை முன் வைக்கும் ராஜேஷ் பிள்ளைக்கு மது மற்றும் புகைப்பழக்கம் கிடையாது. ஆனால், படப்பிடிப்பின் போது உணவு எடுத்துக் கொள்ளாமல் குளிர்பானங்களையும் ஜங்க் உணவுகளையுமே உட்கொண்டு வந்திருக்கிறார். இதன் விளைவு அவரது கல்லீரலை பாதித்து இறுதியாக உயிரையே எடுத்துக் கொண்டது.

ஷாப்பிங், சினிமா, மால்கள் என எங்கு போனாலும் குளிர்பானங்களை வாங்கிப் பருகுவதை பலரும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். மதுவகை அல்லாத பானம் என்பதாலேயே Soft drinks என்று குளிர்பானங்களைச் சொல்கிறார்கள். ஆனால், மதுபானங்களைவிட அதிக ஆபத்து கொண்டவை இந்த குளிர்பானங்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரைப்பை மற்றும் குடலியல் சிறப்பு மருத்துவரான ஜோதிபாசு சொல்வதைக் கேட்போம்…

”நம் உடலின் ஆரோக்கியத்துக்கும் இயக்கத்துக்கும் தேவையில்லாத ஓர் உணவுப்பொருள் இந்த குளிர்பானங்கள். Nutritive value என்று எந்த சத்துப்பொருட்களும் இதில் இல்லை. தேவையற்ற கலப்படங்கள்தான் நிறைய இருக்கின்றன. ஒரு நாளில் 3 டீஸ்பூனுக்கு மேல் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

ஒரு குளிர்பான பாட்டிலில் மட்டுமே 7 டீஸ்பூன் வரை சர்க்கரை இருக்கிறது. கார்பனேட்டட் டிரிங்ஸ், ஏரியேட்டட் டிரிங்ஸ் என்று சொல்லும் அளவுக்கு குளிர்பானங்களில் அடங்கியிருக்கும் ரசாயன வாயுவின் அளவும் அதிகம்.

இந்த கார்பனேட்டட் வாயுதான் செரிமானம் ஆனது போன்ற மாயத்தோற்றத்தை உண்டாக்குகிறது. குடலின் ஒரு பகுதியில் நகர்ந்து வேறு பகுதிக்கு உணவு சென்றுவிடுவதால் ரிலாக்ஸான உணர்வு வயிறுக்குக் கிடைக்கிறது. Peristaltic movement in oesophagus என்று இதைச் சொல்வோம். முறையாக செரிமானம் ஆகாததால் இன்சுலின் தேவை அதிகரிப்பதுதான்
கடைசியில் நடக்கும்.

வெயிலில் அலைந்துவிட்டு வருகிறவர்களுக்கு தண்ணீர்தான் முதலில் தேவை. அதற்குப் பதிலாக குளிர்பானத்தைக் குடித்து தாகம் தணிப்பது தவறான விஷயம். வெயிலில் அலைந்து வந்தவுடன் உடனடியாக சக்தி தேவை என்பதாலும் குளிர்பானங்களை விரும்புகிறார்கள். உண்மையில் எந்த சத்துகளும் இல்லாத Empty calories இவை என்பதை நாம் கவனிப்பதில்லை.

இந்த கலர் பானங்களில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை உடனடி சக்தியைக் கொடுக்கிறது என்பது உண்மைதான். ஆனால், உடலின் தேவைக்கு அதிகமான சர்க்கரையின் அளவை செரிமானமாக்க இன்சுலினும் அதற்கேற்ற அளவு தேவைப்படுமே.

இந்த தலைகீழ் முரண்பாட்டால்தான் நீரிழிவு நோய்க்கான பெரிய சாத்தியமாக குளிர்பானங்கள் மாறிவிடுகின்றன. உடல் உழைப்பு குறைந்த இன்றைய தலைமுறை அதிக பருமனோடு இருப்பதற்கான முக்கிய காரணங்களில் குளிர்பானங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு” என்றவரிடம், குளிர்பானத்தில் இருக்கும் வேதிப் பொருட்களின் கலவை பற்றிக் கேட்டோம்.

”நிறத்துக்காக கலரிங் ஏஜென்டுகள் சேர்க்கப்படுவது பலருக்கும் தெரிந்திருக்கும். சமீபகாலமாக கொய்யாப்பழம், மாம்பழம், ஆரஞ்சு போன்ற பழங்களின் சுவை கொண்ட குளிர்பானங்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். அந்தப் பழங்களுக்கும் இந்த குளிர்பானங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. It contains no fruit pulp என்று அவர்களே குறிப்பிட்டிருந்தாலும், நாம் அதை கண்டுகொள்வதில்லை.

மாம்பழத்தின் சுவையைப் போலவே ஒரு குளிர்பானம் இருக்க வேண்டுமென்றால் Esters என்கிற செயற்கையான வேதிப்பொருட்களின் மூலமே அந்த மாம்பழச் சுவையை உண்டாக்க முடியும். இதோடு, நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பிரசர்வேட்டிவ்களாகவும் நிறைய வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை எதுவும் நல்லது கிடையாது. இவற்றை உடல் ஏற்றுக் கொள்வதும் இல்லை.

இந்த குளிர்பானங்கள் எந்த அளவுக்கு சுகாதாரமாக தயாரிக்கப்படுகின்றன, பேக் செய்யப்படுகின்றன என்பதும் கேள்விக்குறிதான். அதன் எதிரொலிதான் குளிர்பானத்தில் கரப்பான்பூச்சி இருக்கிறது, பல்லி கிடக்கிறது என்று அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

முறையாக குடிநீரை சுத்திகரிக்காததால்தான் குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லிக் கலப்பும் வருகிறது. குளிர்பானமாக பிராசஸ் செய்யும்போது தண்ணீரில் இருக்கும் பூச்சிக்கொல்லிகளின் அடர்த்தி இன்னும் அதிகமாகிவிடுகிறது” என்கிறார் டாக்டர் ஜோதிபாசு.

இதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
”குளிர்பானங்களை தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்குத் தொண்டையில் தொற்றுகள் உருவாவது, வயிற்றுவலி போன்ற சின்னச்சின்ன தொந்தரவுகளில் ஆரம்பித்து, இரைப்பை, குடல், கல்லீரல் போன்ற இடங்களில் அழற்சி கூட ஏற்படலாம். இதுவே நாளடைவில் பெரிதாகி உணவுப்பாதையில் புற்றுநோய் ஏற்படவும் காரணமாகிறது.

உலகமயமாக்கலின் விளைவாக பல வெளிநாட்டு பொருட்கள் இந்தியாவுக்குள் வந்திருக்கின்றன. வெளிநாட்டு உணவுப்பொருட்களை அரசு தவிர்க்க வேண்டும் என்று சொல்வதைவிட, அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கிறது என்ற காரணத்துக்காகவே நாம் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லையே?” என்று கேள்வி எழுப்புகிறார் ஜோதிபாசு.இந்த குளிர்பானங்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க சில வழிமுறைகளைச் சொல்கிறார் பொது மருத்துவரான செல்வி.

”ஒரு உணவு நம் உடல்நலனுக்கு சரிவராது என்றால் முன்பு அதை நம்மால் நிறுத்திவிட முடிந்தது. இப்போதோ எந்த உணவையும் நம்மால் உடனடியாக நிறுத்த முடிவதில்லை. அந்த அளவுக்கு போதைப் பொருள் போல தன் கட்டுப்பாட்டில் நம்மை வைத்திருக்கின்றன நவீன உணவுகள்.

குளிர்பானங்களில் இருக்கும் சர்க்கரையின் கார்பன் வடிவமும், நம்முடைய டி.என்.ஏ. கார்பன் வடிவமும் ஒரே மாதிரி தோற்றத்தில் இருக்கிறது என்பதையும், இதனால் குழப்பம் ஏற்படுகிறது என்பதையும் சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் என்ன பிரச்னைகள் வரும் என்பது இனிமேல்தான் தெரியும்.

இதுபோல யாரவது குற்றம் சாட்டினால், சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனங்களே ஆய்வுகள் நடத்தி இது நல்ல குளிர்பானம்தான் என்று சொல்வதும் உண்டு. இவற்றிடம் இருந்து நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒரு விஷயத்தைக் கவனித்து பாருங்கள்… ஆரோக்கியமான, நம் நாட்டு உணவுகளை சாப்பிடும்போது குளிர்பானம் குடிக்க வேண்டும் என்று பெரும்பாலும் தோன்றாது. பீட்சா, பர்கர், பப்ஸ், பாப்கார்ன் என்று பேக்கரி உணவுகளையோ, துரித உணவுகளையோ சாப்பிடும்போதுதான் குளிர்பானங்கள் வேண்டும் என தோன்றும்.

அதனால், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்வது இதிலிருந்து தப்பிக்க ஒரு நல்ல வழி. ஃபேஷன், ஸ்டைல் என்று நினைத்துக் கொண்டு பணத்தையும், உடல்நலத்தையும் கெடுப்பதற்குப் பதிலாக ஃப்ரூட் ஜூஸோ, இளநீரோ, மோரோ குடிக்கலாமே…” என்கிறார்.யோசிக்க வேண்டிய விஷயம்தான்!

குளிர்பானங்களை தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்குத் தொண்டையில் தொற்றுகள் உருவாவது, வயிற்று வலி போன்ற சின்னச்சின்ன தொந்தரவுகளில் ஆரம்பித்து இரைப்பை, குடல், கல்லீரல் போன்ற இடங்களில் அழற்சி ஏற்படும். இதுவே நாளடைவில் பெரிதாகி உணவுப்பாதையில் புற்றுநோய் ஏற்படவும் காரணமாகிறது…
23

Related posts

உடல் எடை கூட… உணவோடு வெண்ணெய்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளை தூங்க வைக்கும் வழிகள்!!!

nathan

நீங்களே காலையில் வேகமாக எழும் நபராக மாற வேண்டுமா?

nathan

இதுதான் கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம்…

nathan

வெளிநாட்டு மக்கள் விரும்பி மேற்கொண்டு வரும் சில இந்திய ஆரோக்கிய குறிப்புகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…வாங்கும் தங்கத்தை உப்புக்குள் வைத்து எடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

மூளை முதல் மலக்குடல் வரை… உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்

nathan

இந்த 5 ராசிக்காரங்கள பணம் தேடி ஓடி வருமாம்…

nathan

இந்த 6 ராசி ஆண்கள் அற்புதமான கணவர்களாக இருப்பாங்களாம்…அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan