28.3 C
Chennai
Saturday, May 18, 2024
black 2 19291 1
சரும பராமரிப்பு

ஒரே வாரத்தில் கறுப்பழகு’- இப்படி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

ஒரே ஊரில் பிறந்த பெண்கள் ரோஜாவும் செண்பகமும். ரோஜா சிவப்பாக, பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பாள். செண்பகம் ரோஜாவுக்கு நேர்மாறாக கறுத்த நிறத்தில் இருப்பாள். ஒரே வயதுடைய இந்த இரண்டு பெண்களும் ஊரில் சந்தித்த பிரச்னைகள் இருவேறு விதமானவை.

தோழிகள் இருவரும் பள்ளிக்குச் செல்லும் போது இருவரையுமே ஆடவர்கள் கிண்டல் செய்தார்கள். நிற்க! இந்த இடத்தில் பெண்கள் என்றாலே பொதுவாக கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவது வழக்கம் தான் என்றாலும், நிறத்தின் அடிப்படையில் பார்க்கும்போது ரோஜாவுக்கும் செண்பகத்துக்கும் வெவ்வேறு விதமான தொந்தரவுகள் இருந்தன.

‘கருப்பாயி’ என்றும் ‘அண்டங்காக்கா’ என்றும் செண்பகத்தின் மீது வார்த்தைகள் வீசப்பட்டன. ஒன்றுக்கு நான்கு முறை சோப்பால் முகத்தைக் கழுவி, டால்கம் பவுடரை அள்ளி அப்பி வெள்ளைப் பூச்சோடு வெளியே வரத் தொடங்கியிருந்தாள் செண்பகம். ‘ப்ப்பா… யார்றா இவ பேய் மாதிரியே இருக்கா?’ என சினிமா வசனம் சேர்த்து இன்னும் கூடுதலாய் ஏவுகணைகளை வீசி சிதைத்தார்கள்.

தன் வகுப்பில் சிவப்பாக இருந்த பெண்களுக்கு வந்து குவிந்த காதல் விருப்பங்களை எண்ணி மனதுக்குள் மௌனமாய்ப் புழுங்கினாள் செண்பகம். வீட்டருகே உள்ள தோழிகளில் ஆரம்பித்து வகுப்புத் தோழிகள் வரை, அனைவரும் தன்னை நிறத்தால் பிரித்துப் பாகுபடுத்துவதைப் பார்த்து கூனிக் குறுகினாள். தன் மாநிறத்தாலேயே, பல சமயங்களில் ஆசிரியரின் கண்களில் பளிச்சென்று தெரியாமல் போய்விட, ஆண்டுவிழா, சிறப்பு விருந்தினர் வரவேற்பு என பல நல்ல வாய்ப்புகளையும் இழந்திருக்கிறாள். வகுப்பறையின் தலைமைப் பொறுப்புக்கு ஆசைப்பட்டால் கூட அவளை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆளுமைக்கான தகுதியை வளர்த்துக் கொள்வதில் அவளுக்கு அத்தனை சிரமங்கள் இருந்தன.

பெண் பார்க்கும் படலத்தில் மாப்பிள்ளை வீட்டில் கேட்கும் முதல் கேள்வி ‘பொண்ணு சிவப்பா இருக்குமா?!’ என்பது தான். அதை மீறி பார்க்க வந்துவிட்டால் சந்தை மாடு போல நிறத்துக்குமாகச் சேர்த்து கூடுதல் தங்கத்தை கொட்டிக் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு வழியாக திருமணம் நடந்தாலும் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாக இருக்க வேண்டுமே என்ற அச்சம் அவள் மனதில் ரம்பமாய் அறுத்துக் கொண்டிருந்தது. மகப்பேறு மருத்துவமனைகளின் சுவரொட்டிகளில், வாழ்த்து அட்டைகளில், சினிமாக்களில் அவள் பார்த்த குழந்தைகள் செக்கச் சிவப்பாகவே இருந்திருக்கிறார்கள். அழகு என்றால் அது சிவப்புதான் என்பதை அடித்துச் சொல்லும்,’ஒரே வாரத்தில் சிவப்பழகு’ விளம்பரங்கள், மனித இனத்துக்குத் தேவைப்படும் நிறம் மாநிறம் அல்ல என, அவள் மனதில் பதியவைத்துக்கொண்டிருந்தன.

‘ஒரே வாரத்தில் கறுப்பழகு’ என்கிற வகையில் ஏன் விளம்பரங்கள் வருவதே இல்லை? கறுப்பெல்லாம் அழகே இல்லையா? ஆயிரம் கேள்விகள் குத்தத் குத்த அவளின் ஆக்ரோஷக் குரல்கள் நிறமற்ற சுவடுகளாய் காற்றில் கரைந்தன.

ரோஜா நிறமானவள். அவள் வசித்த தெருவில் அவள் மட்டுமே ராணி. கன்னத்தில் திருஷ்டி பொட்டோடுதான் அவள் இளமைக்காலம் கடந்து கொண்டிருந்தது. அவள் நிறத்துக்காகவே அவள் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டாள். அவளுக்கு விருப்பமே இல்லாத நடனத்திலும் மாறுவேடப் போட்டியிலும் அவள் கட்டாயப்படுத்தப்பட்டு சேர்க்கப்பட்டாள். வகுப்பில் தலைமைப் பொறுப்பேற்க விருப்பமே இல்லை என்றாலும் அந்த பொறுப்புக்குள் திணிக்கப்பட்டுத் திணறினாள்.

ஊரில் இருந்த வாலிபர்கள் பலர் ரோஜாவிடம் காதல் விருப்பம் சொன்னார்கள். அவள் நிறம், பத்தாம் வகுப்புக்கு முன்னதாக அவளிடம் காதல் கலவரங்களையும் கொண்டு வந்து சேர்த்தது. காதல்களை புறக்கணிப்பதும், அதில் இருந்து தப்புவதுமாக சிரமப்பட்டாள். தெருமுனையின் குட்டிச் சுவரில் ஆரம்பித்தது, முகநூல் சுவர் வரை வாலிபர்கள் வீசும் வலையை கடித்து கிழித்து வெளியேறுவதற்கே தன் இளமையை செலவழித்துக் கொண்டிருந்தாள். சிவப்பு நிறப் பெண்கள் அவள் வகுப்பில் பத்தில் ஒருவர் என்பதால், மற்ற பெண்களின் வெறுப்பை சம்பாதித்தாள். சமயங்களில் நிறத்தால் தூக்கி வைக்கப்படும் கிரீடங்கள் அவளுக்கு முள் கிரீடங்களாய் குத்தின.

உயிர்த் தோழியாகவே இருந்தாலும், அவள் கறுப்பாய் இருந்தால் அவளுடைய பெண் பார்க்கும் படலத்துக்கு ரோஜா அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே அனுமதிக்கப்பட்டாலும் ‘மாப்பிள்ளை கண்ணுல பட்டுறாத’ என்பதுதான் அவளுக்கான அதிகபட்ச உபசரிப்பாக இருக்கும்.

ரோஜாவும் செண்பகமும் கைகோத்து நடந்து போனால் ‘பிளாக் அண்ட் வொய்ட்’ என்று காதுபடப் பேசினார்கள். சமூகத்தின் சாட்டைகள் இருவரையுமே இருவேறு விதங்களாகப் பதம் பார்த்துக் கொண்டிருப்பது உண்மை. செண்பகத்துக்கு நேரடியாக! ரோஜாவுக்கு சற்று மறைமுகமாக!

இருவரின் கைப்பைகளிலும் நிறத்தை அடையாளப்படுத்தாத ஒரு மாயப்பூச்சு தேவை. அது பெண்ணின் அழகை கூட்டுவதாக இல்லாமல் அவள் தன்னம்பிக்கையை கூட்டுவதாக இருக்க வேண்டும்!black 2 19291

Related posts

பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! பப்பாளியின் சில அழகு இரகசியங்கள்!!!

nathan

சருமத்திற்கு பாதுகாப்பு தரும் சத்தான எண்ணெய்கள்

nathan

இதோ எளிய நிவாரணம்! முதுகில் இருக்கும் பருக்களால் வந்த தழும்புகளைப் போக்க சில டிப்ஸ்…

nathan

குளிர்காலத்தில் சரும பொலிவை மேம்படுத்த சில டிப்ஸ்…

nathan

சருமத்திற்கு பொலிவு தரும் சப்போட்டா

nathan

பனிகாலத்தில் சரும பராமரிப்பு கட்டாயமானது கட்டாயம் இத படிங்க!….

sangika

கோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் தேங்காய் எண்ணெய்

nathan

அழகு பராமரிப்பிற்கு வேப்பிலையை யூஸ் பண்ணுங்க…

nathan