ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்மருத்துவ குறிப்பு

சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது!

சுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை என்பது அந்த கால வாக்கு. ஆனால் அதில் அத்தனை உண்மை உள்ளது. சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது.

இஞ்சியை நன்றாக உலர வைத்தபின் நீர் வற்றிய எஞ்சிய நிலையில் இருப்பதுதான் சுக்கு. இது கெடாது. ஆனால் ஆரோக்கியத்திற்கு அத்தனை நன்மைகள் அளிக்கின்றது.

சுக்கு நமது பழங்கால உணவிலிருந்து பயன்படுத்திவருகிறோம். எத்தகைய உணவையும் செரிக்க வைத்துவிடும். நச்சுக்களை முறித்துவிடும்.

குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தப்படுத்தும். அத்தகைய சுக்கை எப்படி நாம் நமது உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தலாம் இந்த பதிவில் பார்ப்போம்.

Dry Ginger

நோயில்லாத வாழ்வு :

வாரம் ஒருநாள் சுக்குப் பொடி சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் இல்லாமல் வாழலாம். முக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுபோன்று உணவில் சுக்கை சேர்த்து வந்தால் வாத நோய்கள், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்றவை வராமல் காத்துக்கொள்ளலாம்.

வயிற்றுப் பூச்சிகள் அழிய :

சுக்குப் பொடியை அல்லது சுக்கை வெங்காயத்துடன் அரைத்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிந்துவிடும். உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேற்ற உதவும்.

மூட்டு வலி:

மத்திய வயது ஆனவுடன் மூட்டு வலி ஆரம்பிக்கும். சில சமயம் அமர்ந்து எழ முடியாதபடி ஆகும். அப்படியானவர்கள் சுக்கை தட்டி பாலுடன் சேர்த்து அரைத்து மூட்டுகளுக்கு பற்று போல் போட்டு வந்தால் மூட்டு வலியிலிருந்து விடுதலை பெறலாம்.

கபம் கரைய :

சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை, ஆகியவற்றை பொடி செய்து அல்லது இந்த ஐந்தும் கலந்து பொடியை நாட்டு மருந்து கடையில் வாங்கி அதனை னீரில் காய்ச்சி குடித்தால் எப்பேர்ப்பட்ட சளி மற்றும் கபம் விலகும்.

சுக்குக் காபி :

சுக்குக் காபி குடிப்பதால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். அஜீரணப் பிரச்சனைகள் நீங்கும். முக்கியமாக மலச்சிக்கல் குணமாகும். மந்தத்தன்மை மறையும்.

விஷக்கடிகள் குணமாகும் :

தேள், வண்டு போன்ற விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் உடனடியாக ஒரு வெற்றிலையில் சுக்கு, 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் பூச்சியின் விஷத்தை முறிக்கலாம்.

தீராத தலைவலிக்கு :

தலையை இடிப்பது போல் தலைவலி வந்தால், சுக்கை நீரில் உரசி அதனை பற்றாக போட்டால் போதும். சில நிமிடங்களில் தலைவலி மறைந்துவிடும்.

தலையில் நீர்க்கோர்த்திருந்தால், நீரை வற்றச் செய்யும் சிறப்பை சுக்கு பெற்றுள்ளது. தலைவலிக்கு இது சிறந்த பலனைத் தரும்.

அஜீரணப் பிரச்சனை :

1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, நீரில்1 ஸ்பூன் சுக்குப் பொடியை கலந்து உடனே மூடி வைத்திடுங்கள். வெதுவெதுப்பாக ஆறிய பின் அந்த நீரில் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும்.

இதனால் வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல்,குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் வலி, குணமாகும்.

வாய் துர் நாற்றம் :

சுக்குப்பொடியை உப்புடன் சேர்த்து தினமும் காலையில் பற்களை விளக்கலாம். மேலும் ஈறுகளையும் இந்த பொடிக் கொண்டு மசாஜ் செய்தால் பல் கூச்சம், பற்சொத்தை ஏற்படாமல் தடுக்கும். பல் வலி குறையும். வாய் துர் நாற்றம் குணமாகும்.

வாய்வுபிடிப்பிற்கு :

சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாதபோதும், மன அழுத்தம் இருக்கும்போதும் வாய்வுபிடிப்பு உண்டாகும். அந்த சமயத்தில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button