ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இத சாப்பிட கொடுங்க…

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தையின் சந்தோஷம் மற்றும் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். குழந்தை எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று, அவர்களுக்கு சாப்பிடக் கொடுக்கும் உணவுகளில் இருந்து, அவர்களைச் சுற்றியிருக்கும் பொருட்களின் சுத்தம் வரை அனைத்திலும் மிகவும் கவனமாக இருப்பார்கள். இருந்தாலும், அதையும் தாண்டி கிருமிகள் குழந்தைகளின் உடலினுள் நுழைந்து அவர்களை நோய்வாய்ப்படச் செய்கிறது.

தாய்ப்பால் கொடுக்கும் வரை கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால் அதை நிறுத்தி அவர்களுக்கு இதர உணவுகளை கொடுக்க ஆரம்பித்த பின் கொடுக்கும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும் உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

உங்களுக்கு உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் எவையெல்லாம் குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் என்பதைத் தெரிந்து, அவற்றைக் கொடுத்து வாருங்கள். கீழே குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

6 மாதத்திற்குட்பட்ட குழந்தை

ஆறு மாதத்திற்குட்பட்ட குழந்தையின் ஆரோக்கியம் தாயின் கையில், அதுவும் தாய்ப்பாலில் உள்ளது. குழந்தை பிறந்த பின் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு குறைந்தது 6 மாத காலம் வரை தாய்ப்பாலைக் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். உலகிலேயே தாய்ப்பாலை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. தாய்ப்பாலில் புரோட்டீன், சர்க்கரை, கொழுப்பு, ஆன்டிபாடிகள் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. கடைசியில் குறிப்பிடப்பட்ட இரண்டும் தான் குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொள்பவை. எனவே உங்கள் குழந்தை ஆரோக்கியமாக நோய்களின் தாக்குதலின்றி இருப்பது தாயிடம் தான் உள்ளது.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளை விட புட்டிப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு காது தொற்றுகள், செரிமான பிரச்சனைகள், நிமோனியா மற்றும் இதர பிரச்சனைகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

2 வருடத்திற்கு மேலான குழந்தை

நல்ல நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு தேவை ஆரோக்கியமான டயட். ஆகவே குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த ஆப்பிள், மெலன், ப்ராக்கோலி, பீன்ஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை சரியான அளவில் அடிக்கடி கொடுக்க வேண்டியது அவசியம்.

முக்கியமாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவுகள் எளிதில் செரிமானமாகும் வகையில் இருக்க வேண்டும். அதிலும் அவர்களது டயட்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் இருந்தால், அவர்களது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். ஒருவேளை உங்கள் குழந்தைக்கு 2 வயது என்றால், ஒரு வேளைக்கு 2 டேபள் ஸ்பூன் பழங்களை நன்கு மசித்துக் கொடுக்கலாம்.

நட்ஸ்

குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த, அவர்களது டயட்டில் விதைகள், நட்ஸ், பருப்பு வகைகள், முழு தானியங்கள் மற்றும் ஜிங்க், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், செலினியம், வைட்டமின்களான ஏ, பி2, பி6 மற்றும் சி போன்றவை நிறைந்த உணவுப் பொருட்களையும் சேர்க்கலாம். இவை அனைத்தும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த அவசியமான சத்துக்களாகும்.

தயிர்

புரோபயோடிக்ஸ் என்னும் நல்ல பாக்டீரியாக்கள் தயிரில் ஏராளமான அளவில் உள்ளது. இத்தகைய தயிரை குழந்தைகளுக்கு கொடுத்தால், செரிமான பாதையில் உள்ள தொற்றுகளைத் தடுத்து, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும். எனவே குழந்தைகளுக்கு வீட்டில் தயாரித்த தயிரை அன்றாடம் கொடுங்கள். சமீபத்திய சர்வே ஒன்றில், தயிர் சாப்பிடும் குழந்தைகளுக்கு சளி, தொண்டை பிரச்சனை மற்றும் காதுகளில் தொற்று ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

க்ரீன் டீ

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த உதவும் பானங்களுள் ஒன்று க்ரீன் டீ. இதில் உள்ள பாலிபீனால்கள் (கேட்டசின்கள்) தான் இதற்கு காரணம். இந்த கேட்டசின்கள் வைரஸ்களை அழிக்கும் திறன் கொண்டவை. எனவே குழந்தைகளுக்கு இந்த க்ரீன் டீயை சாதாரண முறையில் தயாரித்து குடிக்க கொடுங்கள்.

இன்னும் சிறப்பான பலன் கிடைக்க க்ரீன் டீயுடன் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை கலந்து கொடுங்கள். தயது செய்து பால் மட்டும் சேர்த்துவிடாதீர்கள். இதனால் க்ரீன் டீயின் மருத்துவ குணங்கள் குறைந்துவிடும்.

வால்நட்ஸ்

வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். எனவே இத்தகைய வால்நட்ஸை குழந்தைகளுக்கு அன்றாடம் ஸ்நாக்ஸ் போன்று கொடுங்கள். இதனால் ஏராளமான தொற்றுகளின் தாக்கத்தைக் குறைக்கலாம். வால்நட்ஸை அப்படியே சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு, அதைத் துருவி, அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளின் மீது தூவி கொடுக்கலாம்.

பூண்டு

பழங்காலம் முதலாக பூண்டு பல்வேறு நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள அல்லிசின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி சளி, இருமல் மற்றும் இதர பிரச்சனைகளின் தாக்கத்தைத் தடுக்கும். எனவே இந்த பூண்டை அவர்கள் சாப்பிடும் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட கொடுங்கள்.

இஞ்சி

இஞ்சி பல்வேறு பிரச்சனைகளான அஜீரண கோளாறு, சளி மற்றும் இருமலில் இருந்து விடுவிக்க பழங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் தான் காரணம். ஆகவே உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்த நினைத்தால், அவர்களது அன்றாட உணவில் இஞ்சியை சேர்த்து வாருங்கள்.

பசலைக்கீரை

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பசலைக்கீரையில் உள்ளது. வைட்டமின் கே குறைபாடு ஏற்பட்டால், அது எலும்பு முறிவை ஏற்படுத்தும். இந்த வைட்டமின் மற்றும் இதர அத்தியாவசிய சத்துக்கள் பசலைக்கீரையில் மட்டுமின்றி, அனைத்து கீரைகளிலும் உள்ளது.

முட்டை

முட்டை பல்வேறு வழிகளில் குழந்தைகளுக்கு நன்மை அளிக்கிறது. மருத்துவர்களும் தினமும் ஒரு முட்டையை குழந்தைகளுக்கு கொடுக்க பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் முட்டையில் அத்தியவசிய ஊட்டச்சத்துக்கள், கனிமச்சத்துக்கள், புரோட்டீன் போன்றவை அடங்கியுள்ளது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தற்போது ஆரோக்கியமற்ற உணவுகள் குழந்தைகளின் கண்களைப் பறிக்கும் வகையில் கடைகளில் விற்கப்படுகிறது. குழந்தைகளும் அதையே அடம்பிடித்து வாங்கி கொடுக்க கேட்கிறார்கள். அதில் சோடா பானங்கள், கேக்குகள், பிஸ்கட் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த உணவுப் பொருட்களை எக்காரணம் கொண்டும் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால், அதுவே குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்து, பல நோய்த்தாக்குதலுக்கு வழிவகுக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button