மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…உடலை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

தினமும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே ஆரோக்கியமானது என்று கூற முடியாது. அதிலும் இன்று நம்மைச் சுற்றி ஜங்க் உணவுகள் சூழ்ந்திருப்பதால், நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளால் உடலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்துவிடுகிறது. இப்படி ஒருவரது உடலில் சேரும் நச்சுக்களை அவ்வப்போது வெளியேற்றாமல் இருந்தால், உடலுறுப்புக்களின் செயல்பாடு பாதிக்கப்படும். இதன் விளைவாக பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு உள்ளாகக்கூடும்.

உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கான சிறந்த வழி உடலை சுத்தம் செய்யும் டயட்டை மேற்கொள்வது தான். இந்த டயட்டினால் உடல் சுத்தமாகிறதோ இல்லையோ, நாம் சாப்பிடத் தேர்ந்தெடுக்கும் உணவுகளில் மாற்றத்தைக் கொண்டு வரும். அதாவது இந்த டயட்டை ஒருவர் அடிக்கடி மேற்கொண்டால், ஆரோக்கியமற்ற உணவுகளைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்து, அந்த உணவுகளின் மீதுள்ள ஆவலையும் கட்டுப்படுத்தும். இதன் விளைவாக உணவுப் பழக்கமும் ஆரோக்கியமானதாக மாற ஆரம்பிக்கும்.

மேலும் உடலை சுத்தம் செய்வதன் மற்றொரு முக்கியத்துவம் என்னவென்றால், இது உடலுக்கு தேவையான நுண் ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்கும் சூப்பர் உணவுகள் மற்றும் பானங்களை குடிக்க செய்து, உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் என அனைத்தும் கிடைக்கச் செய்யும். அதோடு இச்செயலால் மன அழுத்தமும் குறையும்.

சரி, ஒருவரது உடல் நச்சுமிக்கதாக உள்ளது என்பதை எப்படி அறிவது எனத் தெரியுமா? இக்கட்டுரையில் ஒருவரது உடலை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

குறைவான ஆற்றல்

ஒரு வேலையில் ஈடுபடும் போது, அந்த வேலையை முடிக்கும் வரையில் உடலில் ஆற்றல் இல்லாமல் போகிறதா? என்ன தான் காப்ஃபைன் நிறைந்த காபி அல்லது டீயைக் குடித்தாலும், சற்று நேரம் நன்கு சுறுசுறுப்பாக செயல்பட்ட பின்பு மீண்டும் உடல் சோர்வை உணர்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் உடலை டாக்ஸின்கள் ஆக்கிரமித்து, உடலுறுப்புக்களின் செயல்பாட்டை மோசமாக்குகிறது என்று அர்த்தம்.

தலைவலி

உடலில் டாக்ஸின்களின் சேர்க்கை அதிகம் இருந்தால், நீங்கள் எந்நேரமும் தலைவலியை சந்திப்பீர்கள். அதிலும் உங்களுக்கு தலைவலியானது நேரம் ஆக ஆக அதிகரித்துக் கொண்டே போனால், அது உங்கள் உடலை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதற்கு உடல் வெளிப்படுத்தும் அறிகுறியாகும். எனவே தலைவலி பிரச்சனைகளை அடிக்கடி சந்தித்தால், உடலை சுத்தம் செய்யும் டயட்டை மேற்கொள்ள முயலுங்கள்.

கவனச்சிதறல்

உங்களால் எந்த ஒரு வேலையிலும் சரியாக கவனத்தை செலுத்த முடியவில்லையா? மிகவும் சலிப்பாக இருக்கிறீர்களா அல்லது சற்று வேடிக்கையாக செய்ய நினைக்கிறீர்களா? இருப்பினும், எதிலும் கவனத்தை செலுத்த முடியாமல் போகிறதா? அப்படியெனில் உங்கள் உடலில் டாக்ஸின்கள் நிரம்பியுள்ளது மற்றும் இதனால் உங்கள் மூளையின் செயல்பாடு பெரிதும் பாதிக்கப்பட்டு, கவனம் செலுத்த முடியாத நிலையை உண்டாக்குகிறது.

மோசமான சருமம்

உங்கள் தோற்றம் பொலிவிழந்து, முகப்பருக்கள் நிறைந்து மோசமாக காணப்படுகிறதா? அப்படியென்றால் இது உங்கள் உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். உடலிலேயே சருமம் தான் மிகப்பெரிய உறுப்பு. அதேப் போல் முதலில் உடலைத் தாக்கும் பல்வேறு டாக்ஸின்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதும் இது தான். அதோடு உடலில் டாக்ஸின்களின் அளவு அதிகமானால் முதலில் பாதிக்கப்படுவதும் இதுவே.

புகை மற்றும் மது

பொதுவாக புகை மற்றும் மது உடல் ஆரோக்கியத்தை சீரழிக்கும் ஆரோக்கியமற்ற பழக்கங்களுள் ஒன்று. எவர் ஒருவர் வழக்கத்திற்கு மாறாக அளவுக்கு அதிகமாக மது அருந்தினாலோ அல்லது புகைப் பிடித்தாலோ, உடனே உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், அவற்றால் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை பாதிக்கப்பட்டு, நோய்களின் தாக்கம் அதிகரித்து, புற்றுநோய் வரும் அபாயத்தையும் அதிகரிக்கும்.

உடல் பருமன்

உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, உடல் எடை குறையாமல் அதிகரிக்கிறதா? அப்படியனால் உங்கள் உடலில் டாக்ஸின்கள் அதிகம் தேங்கியுள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் என்ன தான் எடையைக் குறைக்க முயற்சித்தாலும் முடியாது. எனவே எடையைக் குறைக்க முயற்சிக்கும் முன், டாக்ஸின்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுங்கள். அதற்கு நச்சுக்களை வெளியேற்றும் பானங்களைப் பருகுவது மிகச்சிறந்த வழியாகும்.

பாலியல் பிரச்சனைகள்

என்ன இந்த பட்டியலில் பாலியல் பிரச்சனைகளும் அடங்கியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறதா? ஆம், ஒருவரது உடலில் டாக்ஸின்கள் அதிகம் தேங்கியிருந்தால், இனப்பெருக்க மண்டலம் போதுமான அளவில் செயல்படாமல், அதன் விளைவாக பாலியல் வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

தூக்க பிரச்சனை

உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தால், அது தூங்குவதில் இடையூறை உண்டாக்கும். அளவுக்கு அதிகமாக டாக்ஸின்கள் சேரும் போது, அது இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் செய்துவிடும். எப்படியெனில் டாக்ஸின்கள் அதிகம் இருக்கும் போது, மெலடோனின் என்னும் பொருளின் அளவு குறையும். ஆகவே கண்ட மருந்து மாத்திரைகளை எடுக்கும் முன், உடலை சுத்தம் செய்யும் டயட்டை மேற்கொள்ளுங்கள்.

அடிக்கடி மலச்சிக்கல்

மலச்சிக்கல் பல பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால் இது உடலில் உள்ள அதிகப்படியான டாக்ஸின் தேக்கத்தின் அறிகுறிகளுள் ஒன்றும் கூட. உடல் சுத்தமாக இல்லாமல் இருந்தால், குடலில் நச்சுக்களின் தேக்கம் அதிகரித்து, கழிவுகள் முறையாக நகர்ந்து செல்லாமல் இறுக ஆரம்பித்து, மலச்சிக்கலை உண்டாக்கும். எனவே இந்நிலையில் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள் அல்லது டயட்டில் சிறிது மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்.

உடல் வலி

உங்கள் உடல் காரணமின்றி வலியுடனும், ஏதோ ஒன்று குத்துவது போன்றும் உணர்ந்தால், அதற்கு காரணம் அதிகமான டாக்ஸின்களின் தேக்கம் தான். மோசமான உணவுகள் மற்றும் பானங்களில் உள்ள டாக்ஸின்கள் உடலினுள்ளே காயங்களை ஏற்பட்டு, விவரிக்க முடியாத அளவில் காயங்களை உண்டாக்கி, உடல் வலியை சந்திக்கச் செய்யும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button