மருத்துவ குறிப்பு

உஷார்… கர்ப்பத்தின் போது பாராசிட்டமால் எடுக்கப் போறீங்களா?

கர்ப்பமாக உள்ள பெண்கள் அனைத்து விதமான மருந்துகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்பது நாமறிந்த ஒன்று. ஏற்கனவே மருந்துகள் உட்கொள்பவராகவும் அல்லது எடுத்து கொள்ள வேண்டியிருப்பவராகவும் இருந்தால் ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி அவரிடம் ஆலோசனைப் பெற்று எடுப்பது நலம்.

பேறு காலத்தின் போது உட்கொள்ளப்படும் பெரும்பாலான மருந்துகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்குக் கேடாக அமையலாம். இந்த மருந்துகள் ரத்தத்தில் கலந்து குழந்தைக்கும் செல்லக்கூடியவை என்பதோடு பிற்காலத்தில் வளரும் குழந்தையின் மீது பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். கர்ப்பமான பெண்கள் சோர்வு, தலைவலி, முதுகுவலி மற்றும் உடம்புவலியால் அவதியுறுவதையும், அவர்களுக்கு இந்த பாராசிட்டமால் மருந்து ஒரு சிறந்த தேர்வாக இருப்பதும் நாம் அதிகம் பார்க்கிறோம்.

பாராசிட்டமால் பெரும்பாலும் பாதுகாப்பான மருந்தாக இருந்தாலும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் குழந்தைகளுக்கு அது பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த முறை நீங்கள் இந்த மருந்தை பாதுகாப்பானதாகக் கருதி எடுத்துக் கொள்ள நினைக்கும் முன் ஒருமுறை நன்றாக யோசித்து செயல்படுவது நல்லது. இந்த பாராசிட்டமால் என்ன செய்யும் என்பதை அறிய மேலும் படியுங்கள்.

கற்றல் மற்றும் நடத்தை சார்ந்த சிக்கல்கள்

கர்ப்பத்தின் போது பாராசிட்டமால் மருந்து உட்கொண்ட பெண்களின் குழந்தைகள் கற்றல், உண்ணிப்பு மற்றும் நடத்தைக் குறைபாடுகளால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இது ஏடிஹெச்டி (கவனக்குறைவான நடத்தை குறைபாடு) என அழைக்கப்படுகிறது. இது குழந்தைப் பருவக் குறைபாடுகளில் பொதுவாகக் காணப்படுவதுடன் அவர்கள் வளர்ந்த பின்னும் தொடரக் கூடியது.

பாராசிட்டமால் மூலம் ஏற்படும் ஏடிஹெச்டி பாதிப்பு

இந்த பாதிப்பினால் குழந்தைகள் அடங்காத குணத்துடன் இருப்பதோடு தங்களை கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் சிரமப்படுவர். அவர்களால் உன்னிப்பாக எந்த ஒரு விஷயத்தையும் கவனிக்க இயலாமல், அதன் மூலம் கற்றலிலும் குறைபாடு ஏற்படுகிறது. அவர்கள் கவனம் எளிதில் சிதறுவதுடன் எவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ள இயலாது. மேலும் கர்ப்பமாக உள்ள பெண்கள் பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளும் போது இந்த குறைபாட்டிற்கான வாய்ப்பு இருமடங்காக ஆகிறது.

பாராசிட்டமால் ஏடிஹெச்டி குறைபாட்டை ஏன் ஏற்படுத்துகிறது?

குழந்தையின் மூளை வளர்ச்சிக்குக் காரணமான தாயின் ஹார்மோன்களில் குறுக்கிடுவதன் மூலம் அதன் வளர்ச்சியை இந்த மருந்து பாதிக்கிறது. பாராசிட்டமால் குழந்தைகளின் நரம்பு மண்டலங்களில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி ஏடிஹெச்டி குறைபாட்டிற்கு காரணமாகிறது.

எனவே உங்கள் குழந்தையின் மன மற்றும் நடத்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கர்ப்பத்தின்போது பாராசிட்டமால் எடுத்துக் கொள்வதை அறவே தவிர்த்திடுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button