சரும பராமரிப்பு

தெரிந்துகொள்வோமா? ஷவரில் தலைக்கு குளிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்!!!

தற்போது பெரும்பாலான வீடுகளில் ஷவர் இருக்கிறது. ஆனால் பலரும் இதைப் பயன்படுத்த யோசிக்கின்றனர். இதற்கு ஷவரில் குளித்தால், முடியின் ஆரோக்கியம் பாழாகிவிடுமோ என்ற பயம் தான் காரணம். உண்மையில் ஷவரில் குளித்தால் எவ்வித பிரச்சனையும் முடிக்கு ஏற்படாது. ஆனால் தலைக்கு குளிக்கும் போது ஒருசிலவற்றை மனதில் கொண்டு நடக்க வேண்டும்.

இங்கு தலைக்கு குளிக்கும் போது முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை மனதில் கொண்டு நடந்தால், நிச்சயம் முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

ஷாம்புவை சரியாக போடவும்

பெரும்பாலான மக்கள் முடி எவ்வளவு நீளம் உள்ளதோ, அந்த அளவிற்கு ஷாம்புவை தடவி தேய்த்து குளிப்பார்கள். ஆனால் நிபுணர்களின் கருத்துப்படி, அழுக்கானது ஸ்கால்ப், மயிர்கால்கள் போன்றவற்றில் தான் இருக்கும். ஆகவே அந்த இடங்களில் மட்டும் ஷாம்பு போட்டு நன்கு தேய்த்து குளித்தால் போதும். அதைவிட்டு, முடியின் முனை வரை ஷாம்பு போட்டு தேய்த்து குளித்தால், முடியின் முனைகளில் வறட்சி அதிகம் ஏற்படும். இதனால் முடி வெடிப்பு ஏற்படும்.

சுடுநீரை தவிர்க்கவும்

எப்போதுமே சுடுநீரை சருமத்திற்கோ, கூந்தலுக்கோ பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் சுடுநீர் சருமம் மற்றும் முடியில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்களை முற்றிலும் நீக்கி, முடியை வறட்சி அடையச் செய்து, அதிக சிக்கு ஏற்பட வழிவகுக்கும். எனவே வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

சரியாக சீவவும்

பெரும்பாலான பெண்களுக்கு எப்படி தலை சீவுவது என்று தெரியவில்லை. நிறைய பெண்கள் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்று ஈரமான தலையில் சீப்பை வைத்து சீவுகின்றனர். ஆனால் அப்படி சீவுவதால் முடி வெடிப்பு ஏற்படுவதோடு, முடி உதிர்தலும் ஏற்படும். மேலும் முடி நன்கு உலராமல் தலையில் சீப்பு வைக்க கூடாது. முதலில் முடியின் முனைகளில் உள்ள சிக்கை நீக்கிவிட்டு, பின் தலையில் இருந்து சீவ வேண்டும்.

அடிக்கடி ஷாம்பு வேண்டாம்

தலையில் அழுக்கு அதிகம் உள்ளது என்று தினமும் ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் உள்ள இயற்கை எண்ணெய் முற்றிலும் நீங்கி, முடி வறட்சி அடைந்து, அதன் ஆரோக்கியம் போய்விடும். எனவே வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போட்டு குளிப்பது நல்லது.

நீண்ட நேரம் ஷவர் வேண்டாம்

ஷவரில் குளிப்பது நன்றாக உள்ளது என்று நீண்ட நேரம் ஷவரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் நிபுணர்களும் ஷவரில் 10 நிமிடத்திற்கு மேல் குளிப்பதை தவிர்க்குமாறு கூறுகின்றனர்.

கண்டிஷனர்

குளிக்க சென்ற பின்னர் கெமிக்கல் கலந்த கண்டிஷனரை முடிக்கு போட்டு 5 நிமிடம் ஊற வைத்து பின் குளிப்பீர்கள். இருப்பினும் அதனால் எவ்வித பலனும் கிடைத்திருக்காது. ஆனால் இயற்கை கண்டிஷனர்களான தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து, நன்கு ஊற வைத்து குளித்து வந்தால், முடி நன்கு ஆரோக்கியமாகவும், பட்டுப் போன்றும் இருக்கும்.

முடியை உலர வைக்கும் முறை
பல பெண்கள் மற்றும் ஆண்கள் தலைக்கு குளித்து முடித்த பின்னர், டவல் கொண்டு முடியை தேய்த்து துடைப்பார்கள். ஆனால் அப்படி துணியைக் கொண்டு முடியை தேய்த்தால், முடியின் முனைகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டு, முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மேலும் சில பெண்கள் ஈரமான முடியை துணியால் தட்டுவார்கள். இப்படி செய்வது அறவே தவிர்க்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button