ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…உங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!

பெரும்பாலானோருக்கு போதுமான அளவு புரோட்டீன் கிடைப்பதில்லை. புரோட்டீனானது உடலின் சீரான செயல்பாட்டிற்கு அத்தியாவசியமானது. இவை அமினோ அமிலங்களின் நீண்ட சங்கிலிகள். இது உடலின் பல்வேறு செயல்பாட்டிற்கு தேவையான முக்கியமான மூலக்கூறுகளாகும். புரோட்டீன் நம் உடலில் ஒவ்வொரு செல்லின் ஒரு அங்கமாகும். உடல் இந்த புரோட்டீனை செல்களின் வளர்ச்சிக்கும், திசுக்களை சரிசெய்யவும், நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் உடலின் இதர கெமிக்கல்களை உருவாக்கவும், எலும்புகள், தசைகள், சருமம் மற்றும் இரத்தத்தின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது.

கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்களைப் போன்று, நமது உடல் புரோட்டீனை சேமித்து வைப்பதில்லை. ஆகவே ஒருவர் அன்றாட உணவில் இருந்து தான் புரோட்டீனை பெற முடியும். இத்தகைய புரோட்டீன் பல்வேறு உணவுகளான இறைச்சி, பால், மீன், சோயா, முட்டை, பீன்ஸ், பருப்பு வகைகள், நட்ஸ் வெண்ணெய் போன்றவற்றில் ஏராளமாக உள்ளது.

ஒவ்வொருவருக்கும் தேவையான புரோட்டீன் அளவானது அவரது வயது, பாலினம், உயரம், எடை மற்றும் அமில அளவைப் பொறுத்தது. பொதுவாக ஒவ்வொரு கிலோ உடல் எடைக்கும், 0.8 கிராம் புரோட்டீன் அவசியமாகும். உடல்நல நிபுணர்கள் அன்றாடம் தேவையான புரோட்டீனில் இருந்து மட்டும், ஒருவர் 10-30 சதவீத கலோரிகளை பெறுவதாக கூறுகின்றனர்.

* பெண்கள் (வயது 19 – 70+) : 46 கிராம்

* ஆண்கள் (வயது 19 – 70+) : 56 கிராம்

ஒருவர் பரிந்துரைக்கப்பட்ட அளவு புரோட்டீனை எடுக்காவிட்டால், அது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும். அதுவும் தலை முதல் கால் நகங்கள் வரை ஒவ்வொரு பாகங்களும் பாதிக்கப்படும். நீங்கள் சரியான அளவு புரோட்டீனை எடுக்காவிட்டால், உடல் ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்தும். இக்கட்டுரையில் அந்த அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பலவீனமான தசை

நடுத்தர வயது ஆண்கள் சிலர் தசை இழப்பை சந்திக்கக்கூடும். வயது அதிகரிக்கும் போது தசைகளின் அடர்த்தி குறைவது இயற்கையே. அதிலும் ஒருவர் புரோட்டீனை போதுமான அளவில் எடுக்காமல் இருந்தால், அவர்களது உடலில் உள்ள புரோட்டீன் குறைபாட்டினால், தசைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

வீக்கம்

எப்போது ஒருவரது உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளதோ, அப்போது சந்திக்கும் நிலை தான் எடிமா. அதாவது உடலில் நீர் தேக்கத்தால் ஏற்படுவதாகும். உடலில் புரோட்டீனானது முக்கிய பங்கை வகிக்கிறது. அதுவும் திசுக்களில் சீரான அளவில் திரவங்களை பராமரிக்க உதவும். குறிப்பாக பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் உள்ள திசுக்களில் திரவங்களை பராமரிக்கும். இந்த புரோட்டீன் ஒருவரது உடலில் குறையும் போது, அவர்களது கால்களில் நீர் தேங்க ஆரம்பித்து வீங்கி காணப்படும்.

தாழ் இரத்த அழுத்தம் மற்றும் குறைவான இதயத் துடிப்பு

ஒருவரது உடலில் புரோட்டீன் மிகவும் குறைவாக இருந்தால், இரத்த புரோட்டீன் (இரத்த அடர்த்தி மற்றும் ஒட்டுத் தன்மை) மற்றும் இரத்த அழுத்த அளவு குறைய ஆரம்பிக்கும். இதனால் இரத்தத்தின் மூலம் ஊட்டச்சத்துகளானது முக்கிய திசுக்களுக்கு கிடைக்காமல், உடலின் மற்ற செயல்பாடுகளை பாதிக்கும். ஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அல்லது புரோட்டீன் அளவு போதுமான அளவில் இல்லாமல் குறைவாக இருந்தால், அதனால் இதயத் துடிப்பின் அளவும் குறையும்.

ஊட்டச்சத்து குறைபாடு

உடலில் போதுமான புரோட்டீன் கிடைக்காமல் போகும் போது, உடலால் ஊட்டச்சத்துக்களான நியாசின், இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் கால்சியம் போன்றவற்றை உறிஞ்சும் திறனானது குறைந்து, ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட நேரிடும்.

கல்லீரல் பிரச்சனைகள்

புரோட்டீன் குறைபாடு மற்றும் கல்லீரல் நோய்கள் இரண்டிற்கும் சம்பந்தம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவரது உடலில் புரோட்டீன் தேவைக்கு மிகவும் குறைவாக இருக்கும் போது, கல்லீரலானது கொழுப்பு அமிலங்கள் மற்றும் நச்சுப் பொருட்களை நீக்க போராடும். இதன் விளைவாக கல்லீரலில் பிரச்சனைகள் ஏற்படும்.

இரத்த சோகை

உடலில் புரோட்டீன் போதுமான அளவில் இல்லாத போது, உடலில் வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் அளவு குறைய ஆரம்பித்து, போதுமான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போய் இரத்த சோகை பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். இதன் விளைவாக குறைவான இரத்த அழுத்தம் மற்றும் களைப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி

ஒருவரது உடலில் நீண்ட நாட்களாக புரோட்டீனின் அளவு மிகவும் குறைவாக இருக்கும் போது, அவர் அடிக்கடி உடல்நல குறைவால் பாதிக்கப்படக்கூடும். ஏனெனில் நோயெதிர்ப்பு செல்களானது புரோட்டீனால் ஆனது. இந்த புரோட்டீன் அளவு குறைவான அளவில் இருக்கும் போது, நோயெதிர்ப்பு செல்களின் அளவு குறைந்து, நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும்.

அதிகப்படியான பசி

உங்களுக்கு எந்நேரமும் பசி எடுத்துக் கொண்டே இருக்கிறதா? எவ்வளவு தான் சாப்பிட்டாலும், உங்களால் பசியைக் கட்டுபடுத்த முடியவில்லையா? அப்படியானால் உங்கள் உடலில் புரோட்டீன் குறைவாகவும், சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் உள்ளது என்று அர்த்தம். எனவே உடனே புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொள்ள ஆரம்பியுங்கள்.

தசை மற்றும் மூட்டு வலி

தசை பலவீனம், தசை வலி போன்றவற்றுடன், மூட்டுக்களில் கடுமையான வலியை சந்தித்தால், உங்கள் உடலில் புரோட்டீன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். எனவே உங்களுக்கு அடிக்கடி தசை வலி மற்றும் மூட்டு வலி ஏற்பட்டால், உடனே புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிட ஆரம்பியுங்கள்.

காயங்கள் தாமதமாக குணமாவது

உங்களுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டு, அந்த காயம் விரைவில் குணமாகாமல் தாமதமானால், உங்கள் உடலில் புதிய செல்கள் புதுப்பிக்கவும், பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்யவும் தேவையான புரோட்டீன் இல்லை என்று அர்த்தம். இதைக் கொண்டும் புரோட்டீன் குறைபாட்டை அறியலாம்.

தலைமுடி, நகம் மற்றும் சரும பிரச்சனைகள்

உங்கள் தலைமுடி உதிர்ந்து எலி வால் போன்று மாறினாலோ, நகங்கள் உரிய மற்றும் உடைய ஆரம்பித்தாலோ, உங்கள் சருமத்தில் தோல் உரிய ஆரம்பித்தாலோ, உங்கள் உடலில் புரோட்டீன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

மந்தமான மனநிலை

ஒருவரது உடலில் புரோட்டீன் மிகவும் குறைவாகவும், இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும், மனநிலை சற்று மந்தமாகவே இருக்கும். எனவே சமீப காலமாக உங்களது மனநிலை சரியில்லாவிட்டால், புரோட்டீன் உணவுகளை சற்று அதிகம் சாப்பிட ஆரம்பியுங்கள்.

எடை மாற்றம்

புரோட்டீன் குறைபாட்டிலேயே இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று குவாஷியோர்கர் (குறைவான புரோட்டீன் ஆனால் கலோரி அதிகம் ), மற்றொன்று மராமஸ் (புரோட்டீன் மற்றும் கலோரிகள் இரண்டுமே குறைவாக இருக்கும் நிலை). குவாஷியோர்கர் நிலை, அதாவது உடலில் புரோட்டீன் குறைவாக இருந்து, அதிகளவு கலோரிகளைப் பெறுகிறார்கள் என்றால், அவர்கள் ஆரோக்கியமற்ற டயட்டை மேற்கொள்கிறார்கள் என்ற அர்த்தம். இவர்களது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள், உடல் பருமனை அதிகரிக்கும். மராமஸ் நிலையின் படி, புரோட்டீன் மற்றும் கலோரிகள் இரண்டுமே குறைவாக இருக்கும் போது, உடலில் இதுவரைப் பெற்ற புரோட்டீன் தசைகளின் வளர்ச்சிக்கு உதவாமல், ஆற்றலாக மாற்றப்படும். இதன் விளையாக இவர்களது உடல் மெலிந்து காணப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button