ஆரோக்கியம் குறிப்புகள்

மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான வழிகள் -தெரிந்துகொள்வோமா?

Source:maalaimalar தியானம், உடற்பயிற்சி, சரிவிகித ஊட்டச்சத்து உணவு, யோகா போன்றவை மன ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எதிர்பாராத சூழலில் மனதை உலுக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள் நடந்தால் அதில் இருந்து மீண்டு வருவதற்கு வெகு நேரமாகும். அது மன நலனில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இத்தகைய சூழலில் மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான சில வழிமுறைகளை பின்பற்றுவது முக்கியம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

1. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பேசுவதை நிறுத்துங்கள்

மன நலத்தை பேணுவதை விட மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள், தங்களை எந்த நிலையில் வைத்திருக்கிறார்கள், நாம் ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அதனை எப்படி எடுத்துக்கொள்வார்கள், விமர்சிப்பார்களா? பாராட்டுவார்களா? என்பதை அறிந்து கொள்வதற்குத்தான் பலரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இது மன ஆரோக்கியத்திற்கு சுமையை ஏற்படுத்தும். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி தொடர்ந்து சிந்திப்பது, சுதந்திரமான வாழ்க்கை சூழலுக்கு வழிவகுக்காது. நிறைவேறாத ஆசைகள், லட்சியங்கள் போன்ற இலக்குகளை நோக்கி பயணிக்கும்போது அதிலும் பாதிப்பை ஏற்படுத்தும். தேவையில்லாத விஷயங்களை பற்றி சிந்தித்து குழம்பிப்போய்விடுவீர்கள். மனம் நிம்மதியை இழந்துவிடும். உங்கள் மனதிற்கு சரி என்று தோன்றினால், அதனை பின்பற்றுவதற்கு தயங்கக்கூடாது. தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது.

2. மனதை லேசாக்குங்கள்

நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்போது பதற்றம் எட்டிப்பார்க்கும். அந்த சமயத்தில் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள மனம் விரும்பாது. தன்னம்பிக்கையை இழக்க நேரிடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. மனதை ரிலாக்‌ஸ் ஆக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அது தவறான முடிவு எடுப்பதை தடுக்கும். வாழ்க்கையை முழுமையாகவும், சுதந்திரமாகவும் வாழ வழிவகை செய்யும். மன நலனும் பாதுகாக்கப்படும்.

3. நகைச்சுவை உணர்வை தக்கவையுங்கள்

நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் கடினமான சூழலையும் சிறப்பாக கையாள்வார்கள். சட்டென்று டென்ஷன் ஆக மாட்டார்கள். நகைச்சுவை உணர்வை தக்கவைத்துக்கொண்டால் மனம் ரிலாக்‌ஸ் ஆகும். எல்லா விஷயங்களையும் சீரியசான கண்ணோட்டத்தில் அணுகத் தோன்றாது. மன ஆரோக்கியத்தின் தரத்தையும், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மேம்படுத்த உதவும்.

4. நெருக்கமானவர்களுடன் பகிருங்கள்

உடல் ஆரோக்கியத்தை போலவே மன நலமும் முக்கியமானது. ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் அதுபற்றி மனதுக்குள்ளேயே பேசிக்கொள்வது நல்லதல்ல. அதுபற்றி மனதுக்கு பிடித்தமான நபர்கள், நண்பர்கள், குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அது மார்பிலும், மனதிலும் இருந்து சுமையை குறைக்க பெரிதும் உதவும். நெருக்கமானவர்களிடம் மட்டுமின்றி அந்நிய நபர்களிடமும் பேசலாம். ஆனால் நீங்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினையை பற்றி அல்லாமல் பொதுவான விஷயங்களை பேசலாம். அது மன நிலையை மேம்படுத்தும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

5. வழக்கத்தை மாற்றுங்கள்

தினமும் ஒரே மாதிரியான வழக்கத்தை பின்பற்றுவது சலிப்புணர்வை உண்டாக்கும். ஒருவித மந்தமான உணர்வை ஏற்படுத்தும். சில சமயங்களில் சின்ன விஷயமாக இருந்தாலும், அது வழக்கத்திற்கு மாறாக நடந்தால் பயத்தை உண்டாக்கிவிடும். அவ்வாறு உணரும்போதெல்லாம் வழக்கமான நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அது மன நலனை மேம்படுத்த உதவும்.

6. செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்

சலிப்பை முறியடிப்பதற்கான சிறந்த வழி, நீங்கள் விரும்பும் விஷயங்கள், வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்கும் செயல்கள் போன்றவற்றில் ஈடுபடுவதாகும். ஓவியம் வரைதல், நடனம் ஆடுதல், தோட்டக்கலை சார்ந்த பணிகளில் ஈடுபடுதல் என மனதுக்கு பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்தலாம். இவை மட்டுமின்றி தியானம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம். இதுவும் மனதளவில் வலிமையாக செயல்பட ஊக்கப்படுத்தும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

7. காலை – இரவு வழக்கத்தை உருவாக்குங்கள்

காலையிலும், இரவிலும் குறிப்பிட்ட விஷயங்களை செய்வதற்கு நேரம் ஒதுக்குங்கள். அதில் உடற்பயிற்சியும், தியானமும் அவசியம் இடம் பெற வேண்டும். அது உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் செயல்பட உதவும். காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். காலையில் உடற்பயிற்சி, இரவில் தியானம் என நேரத்தை ஒதுக்கிவிடலாம். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு செல்போன் பார்ப்பதை தவிர்த்துவிட்டு தியானம் மேற்கொள்வது நல்ல தூக்கத்தை வரவழைக்கும். அசவுகரியம், மன குழப்பத்தை உணரும் போது இதனை செய்வது பலன் தரும். மனதை ஆசுவாசப்படுத்த உதவும்.

8. வேலையைப் பற்றி பெருமையாக பேசுவதை நிறுத்துங்கள்

இரவு பகல் பாராமல் உழைக்கும் பலர் வேலை மீதுதான் முழு கவனத்தையும் செலுத்துவார்கள். குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடமாட்டார்கள். தாங்கள் பார்க்கும் வேலையை பற்றி மற்றவர்களிடம் பெருமையாக சொல்வார்கள். தன்னால்தான் அந்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்றும் பெருமிதம் கொள்வார்கள். வேலை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு குடும்ப நலன் மீது அக்கறை கொள்வதும் அவசியமானது.

அதனை புரிந்து கொள்ளாவிட்டால் மன நிம்மதியையும், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் இழக்க நேரிடும். வேலை, குடும்பத்துடன் செலவிடும் நேரம் மற்றும் பொழுதுபோக்கு இவை மூன்றையும் சமமாக கையாளும் பின்லாந்து, உலகில் மகிழ்ச்சியாக மக்கள் வசிக்கும் நாடாக அடையாளப்படுத்தப்படுகிறது. அங்கு வசிப்பவர்களை போல வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே சம நிலையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். இத்தகைய ஆக்கப்பூர்வமான வழிகள் மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button