சரும பராமரிப்பு

அழகு சிகிச்சை அபாயங்களும் ஆச்சரியங்களும்!

தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மோகம் கொண்டதாக மாறிவிட்டது வாழ்க்கை. ஆடைகள், அணிகலன்கள் என்று பகட்டாகக் காட்டிக் கொள்ள விரும்புகிறவர்கள் ஒருபக்கம் என்றால், ‘எனக்கு வேற மூக்கு வேணும்’, ‘கருப்பா இருக்கறது பிடிக்கலை’ என உடலையே சிலர் மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.சமீபகாலமாக அழகு சார்ந்த அறுவை சிகிச்சைகளுக்கு சலுகைகள் வழங்குவதாக மருத்துவமனைகளின் விளம்பரங்களையும் பார்க்க முடிகிறது. தம்பதியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் தள்ளுபடி உண்டு எனவும் கவர்ந்திழுக்கின்றன விளம்பரங்கள்!

இத்தகைய அழகு சிகிச்சைகளால் நிஜமாகவே பலன் உண்டா என்ற கேள்வியை சரும நல மருத்துவரான வித்யா ராம் பிரதீப்பிடம் முன்வைத்தோம்.”அழகு சிகிச்சைகளை செய்ய சில விதிகள் இருக்கின்றன. போகிற போக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. எல்லோருக்கும் செய்யவும் முடியாது. முகப்பரு தழும்புகள் மறைய லேசர் சிகிச்சை வேண்டும் என்று அவசரமாகக் கேட்டால், ‘அது சாத்தியமில்லை’ என்றுதான் சொல்வேன்.

லேசர் சிகிச்சைக்கென்று ஒரு கால அவகாசம் தேவை. அறுவை சிகிச்சை செய்த பிறகு சருமத்தின் நிறம் மாற வேண்டும், அதன்பிறகுதான் பழைய செல்கள் உரிந்து, புதிய சருமம் வரும். இதன் அடுத்த நிலையாகத்தான் தழும்புகள் மறைய ஆரம்பிக்கும். அதுவரை சூரிய ஒளி நேரடியாக படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். தவிர்க்க இயலாமல் வெளியே சென்றால் சன் ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தி வர வேண்டும். இதற்கெல்லாம் தயாராக இருக்கிறவர்களுக்குத்தான் போதுமான விடுமுறை எடுத்துக் கொண்டு வரச் சொல்லுவோம். அப்போதுதான் இந்த சிகிச்சை பலனளிக்கும்.

வழுக்கை பிரச்னை உள்ளவர்கள் ஸ்டெம்செல் தெரபி செய்துகொள்ள வருவார்கள். இவர்களுக்கு ஸ்டெம்செல் தெரபி கொடுப்பதுடன், வைட்டமின் மருந்துகளும் கொடுப்போம். இதனுடன் புரதம் மிகுந்த உணவுகளையும் சாப்பிட்டு வர வேண்டும். இப்படி முறையாக செய்யும்போதுதான் முடி வளரும். இதுபோல, சிகிச்சைகளை முறைப்படி எடுத்துக் கொள்ளும்போதுதான் பலன் கிடைக்கும்.

இணையதளங்களில் படித்துவிட்டோ, யாரோ சொல்கிறார்கள் என்றோ செய்யக் கூடாது. முகத்தில் சுருக்கங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக போடாக்ஸ் (Botox) ஊசியை சில பெண்கள் போட்டுக் கொள்கிறார்கள். போடாக்ஸ் சுருக்கங்களை விளைவிக்கும் நரம்புகளை தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்துவிடுகிறதுதான். ஆனால், இந்த ஊசி 30 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்குத்தான் பயன்படும்.

அதிக வயதான பின் ஏற்படும் சுருக்கங்களை சரி செய்ய முடியாது. 25 வயதுக்கு கீழே உள்ள பெண்களுக்கு போடாக்ஸ் தேவையே இல்லை.இதுபலருக்கும் தெரிவதில்லை. சிலர் தங்கள் நிறத்தைப் பொலிவாக்க ஊசிகள், மாத்திரைகள் பயன்படுத்துகிறார்கள். இந்த ஊசிகள் மற்றும் மாத்திரைகளுக்கு மருத்துவரீதியாக இன்னும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. எந்த மருத்துவரும் இவற்றைப் பரிந்துரைப்பதுமில்லை. ‘கருப்பாக இருப்பவர்களை வெள்ளையாக மாற்றுகிறேன்’ என சில போலி மருத்துவர்கள் சிகிச்சையும் அளிக்கிறார்கள். அவர்களிடம் சென்று ஏமாந்துவிடக் கூடாது” என்கிறார் டாக்டர் வித்யா ராம் பிரதீப்.

‘தம்பதியாக செல்கிறவர்களுக்கு குறைந்த கட்டணம் நிஜம்தானா’ என்று காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான ரஜினிகாந்த்திடம் கேட்டோம். ”ஒருவர் தொப்பையைக் குறைக்கும் Tummy tuck சிகிச்சை செய்துகொள்ள விரும்புகிறார் என்பது அவரது மனைவிக்கு தெரியவரும்போது, நாமும் முகத்தை சீராக்கும் Face lift போன்ற சிகிச்சை எடுத்துக் கொள்ளலாமே என்று நினைப்பார்.

இவர்களைப்போல தம்பதியாக சிலர் வருவதைப் பார்த்துதான், பலரையும் இதுபோல வரவழைக்கலாமே என்று விளம்பரம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், விளம்பரங்களில் சொன்ன மாதிரியே பல மருத்துவமனைகளில் நடந்து கொள்வதில்லை. சொன்னதைக் காட்டிலும் அதிக கட்டணம் என்பதுடன் பக்க விளைவுகளைக் கொண்ட தரமற்ற சிகிச்சையையும் கொடுக்கிறார்கள்.

மாதம் இத்தனை லட்சம் சம்பாதித்து கொடுக்க வேண்டும் என சில மருத்துவமனைகளுக்கு இலக்குகளும் இருக்கும். இலக்கை அடைய அதன் மேலாளர்களை மருத்துவமனை நிர்ப்பந்திக்கும். அவர்கள் இந்த மாதிரி ஏதாவது சலுகை கட்டணம் என அறிவித்து தங்களுடைய டார்கெட்டை நிறைவேற்ற பார்ப்பார்கள்.

தம்பதியராக வருகிறவர்களுக்கு சலுகை கட்டணம் உண்டு என்பதெல்லாம் பெரும்பாலும் வணிக நோக்கம் கொண்டதுதான். ஒருவருக்கு 2 அமர்வில் பிரச்னை சரியாகும், இன்னொருவருக்கு 10 முறை சிகிச்சை அளித்தால்தான் சரி ஆகும். அது தனிப்பட்ட நபரின் உடல்நிலையைப் பொருத்தது. இத்தனை குறைந்த செலவில் எல்லாவற்றையும் செய்வோம் என்பது ஒரு விளம்பர உத்தி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அழகு சிகிச்சைகளைத் தேவைக்குப் பயன்படுத்தலாம். குறிப்பாக, பெண்களைப் போன்ற மார்பகங்கள் கொண்ட ஆண்கள் மற்றவர்களின் கேலிக்கு ஆளாகிவிடுவோமோ என்ற பதற்றத்திலேயே இருப்பார்கள். அறுவை சிகிச்சையின் மூலம் இந்தப் பிரச்னையை எளிதாக சரிசெய்து விடலாம். அதன்பிறகு அவர்களின் தன்னம்பிக்கை அதிகமாவதை பார்த்திருக்கிறேன். ஆனால், தேவையேயில்லாமல் அந்த நடிகை போல மூக்கு வேண்டும் என்று வருகிறவர்களையெல்லாம் நான் ஊக்குவிப்பதில்லை. கவுன்சலிங் கொடுத்து அனுப்பி விடுவேன். நான் சர்ஜரி செய்ய வேண்டியதில்லை என்று சொல்லி, வேறு மருத்துவரிடம் அறுவை சிகிச்சை பண்ணிக்கொண்டு அவஸ்தைப்பட்டவர்களும் உண்டு. அவர்களுக்கு மீண்டும் நானே அந்தப் பிரச்னையை சரி செய்த அனுபவமும் உண்டு.

அதனால் சரியான டாக்டரையும், மருத்துவமனையையும் தேடிச் சென்று காஸ்மெட்டிக் சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதே நல்லது. காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சைகள் நிறைய உள்ளன. அது அவசியமான சிகிச்சையா என்று ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தே முடிவு எடுக்க வேண்டும்” என்கிறார்டாக்டர் ரஜினிகாந்த்.சிலர் தங்கள் நிறத்தைப் பொலிவாக்க ஊசிகள், மாத்திரைகள் பயன்படுத்துகிறார்கள். இந்த ஊசிகள் மற்றும் மாத்திரைகளுக்கு மருத்துவரீதியாக இன்னும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. எந்த மருத்துவரும் இவற்றைப் பரிந்துரைப்பதுமில்லை.
ld4062

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button