சமையல் குறிப்புகள்

மிக்சி எது ரைட் சாய்ஸ்?

மிக்சி என்றால் 3 ஜார் மட்டும்தான் நினைவுக்கு வரும். இப்போதோ வீட்டிலேயே எல்லா வகை உணவுகளும் செய்ய பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சமையல் நேரத்தை மிச்சப்படுத்த பல்வேறு உபகரணங்கள் தேவை. அதில் ஒன்றுதான் ஹேண்ட் ப்ளெண்டர் எனப்படும் கையில் வைத்துக்கொண்டு கலக்கும், அரைக்கும் மிக்சி!

ஹேண்ட் மிக்சியில் இரு வகை இருக்கின்றன. ஒன்று டிரடிஷனல் வகை…அது கையால் மேனுவலாக செயல்படும் வகையில் இருப்பதால் அடுப்பின் அருகிலேயே வைத்துச் சுழற்ற முடியும். இதனால் ஒரே நேரத்தில் கலவை செய்யவும், அடுப்பு வேலையும் முடியும். ஆனால், கேக் போன்ற அயிட்டங்கள் செய்ய அதிக நேரம் கலக்க வேண்டும். அதனால் வந்தது எலக்ட்ரிக் ப்ளெண்டர்ஸ். அதில் காய் நறுக்க, பேக்கிங் கலவை கலக்க, மாவு கலக்க என்று பல வேலைகள் செய்ய முடியும்.

அதிக எடையில் இருப்பதை தூக்கி கையால் செய்வது சிரமமாக இருக்கும். அதே நேரத்தில் எடை இல்லாமல் இருந்தால் கடின வேலைகள் செய்ய இயலாது. இதை கவனத்தில் வைத்துக்கொண்டு நடுத்தரமான ஹேண்ட் ப்ளெண்டர் வாங்குவது நலம். இதிலும் மிக்சி போல ஆர்.பி.எம். வாட்டேஜ் எல்லாம் பார்க்கும் தேவை இருக்கிறது. 200 முதல் 600 வாட்ஸ் வரை கிடைக்கும். எடுத்துக்காட்டாக மாவு பிசைய வேண்டும் என்றால் அதிக சக்தி தேவை. குறைந்த ஆர்.பி.எம். போதும். பெரிய அளவில் சமையல் செய்ய – வேகமாகக் கலக்க அதிக அளவு ஆர்.பி.எம். உள்ள ப்ளெண்டர்கள் தேவை. அவை பொதுவாக உணவகங்களில்தான் தேவைப்படும்.

‘அது இது எதுவும் வேண்டாம். எனக்கு சாதாரண மிக்சி போதும்’ என்பவர்களுக்கு பிரச்னையே இல்லை. பொதுவான அதிக சக்தி் கொண்ட மிக்சியிலேயே தோசை மாவு, மஞ்சள் போன்ற பொடிகளை நன்றாக அரைக்க இயலும். காய் வெட்டுவது, மாவு பிசைவது போன்றவை சரியாக வராது. கேக் கலக்கும் வேளைகளில் ப்ளெண்டர்களின் பங்கு முக்கியமானது.

Related Articles

வேக அளவு…

சில ப்ளெண்டர்கள் மூன்று வித வேகத்தில் செயல்படும். தேவைக்கு மட்டும் வேகத்தை அதிகப்படுத்தலாம். இதில் பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பிளேடுகள் வரும். பிளாஸ்டிக் பிளேடுகள் அதிக சூட்டில் வீணாகிவிடக் கூடும். எவர்சில்வர் பிளேடுகள் அந்தளவு சேதமாவதில்லை.சில ஹேண்ட் ப்ளெண்டர்கள் சிறிய ஜார் எனப்படும் ஒரு ஜாடியுடன் வரும்.கீழே வட்ட வடிவில் இருக்கும் மாடல் நல்லது. முட்டை அடிக்கும் ப்ளெண்டர் மாடலும் உள்ளது. அவற்றிலும் 2-3 வகை கலப்பான்கள் தனியாக இருக்கும்.

இந்த ப்ளெண்டருக்கு தமிழில் மிக அழகான பெயர் இருக்கிறது. அதுதான் மத்து. மரம், அலுமினியம், எவர்சில்வர் மத்துகள் அடுப்பில் வைத்தே கடையலாம். அதை மோட்டாருடன் இணைத்து மின் மத்துக்கு நாகரிகமாக ப்ளெண்டர் என்று பெயர் வைத்து நம்மை செலவு செய்ய வைத்து ப்ளைண்ட் ஆக்குகிறார்கள். எனவே, எதற்குச் செலவு செய்தாலும் நமக்கு மிக தேவையா என்று பார்ப்பது மிக முக்கியம். அக்கம் பக்கம், விளம்பரம் என்று பார்க்காமல், நம் வீட்டுக்கு எந்த அளவுக்கு உபயோகம் என்று பார்ப்பதே சிறந்தது. சில வகை கலப்பான்கள்…ஹெவல்ஸ் சூப்பர் ப்ளேனட் ப்ளஸ் சாப்பர்,

விலை 3,800 ரூபாய், 400 வாட்ஸ் பவர், வாரன்டி 2 வருடம். பிலிப்ஸ் 250 வாட்ஸ் ப்ளெண்டர் பிலிப்ஸ் மாடல்களைப் பொறுத்தவரை நறுக்கும், அரைக்கும் திறன் நன்றாகவே உள்ளது. இது அடிப்படை மாடல். ஆயிரம் ரூபாய்க்கே கிடைக்கும். இரு வருட வாரன்டியுடன் வருகிறது.ஆர்பட் ஹேண்ட் ப்ளெண்டர் 200 வாட்ஸ் வேகத்தில் வருகிறது. இது வும் ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கிறது. மூன்று வித வேகத்தில் வருகிறது. பிலிப்ஸ் ஹேண்ட் மிக்சர் (மாவு பிசையும் அட்டாச்மென்ட் உடன்) விலை ரூ.4,500. பவர் 400 வாட்ஸ்.

2 ஆண்டு வாரன்டி. பாத்திரம் உடன் வருவதால் கேக் செய்யும்போது மாவு கலக்க மிக வசதியாக இருக்கும். கடினமாக உழைக்கும் வகையில் வருகிறது. 400 வாட்ஸ் சக்தி உடையது. பேனசோனிக் ப்ளெண்டர் மிக அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. விலை ரூ.3,300 வரை. இரண்டு வருட வாரன்டி, 600 வாட்ஸ் சக்தி, எவர்சில்வர் பிளேடுடன் வருகிறது. அடுக்களையில் மாட்டி வைக்க பிடி வசதி இருக்கிறது. மத்துப் போல கடையும், நறுக்கும் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன.’இவை எதுவும் வேண்டாம்… வெறும் மிக்சியே போதும்’ என்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்…

பட்ஜெட்

என்னதான் சொன்னாலும் முதலில் நம் வீட்டு பட்ஜெட்டை கவனிக்க வேண்டும். ஆயிரம் முதல் ஐயாயிரம் வரை உள்ளது. நான் ஒரு முறை 2 ஜார் மிக்சி 750 ரூபாய்க்கு கூட வாங்கி இருக்கிறேன். அதனால் அதை மனதில் வைத்துகொண்டு அந்த விலைக்கு எது தரமாக, சிறப்பாக கிடைக்கிறதோ அதை வாங்க வேண்டும்.

வேகம்

பலவித வேகத்தில் செயல்படும் விதமாக விசைகளோடு வந்துள்ளது. மிக அதிக வேகத்தை விட, அதிக சக்தியே முக்கியமானது.

ஓவர் லோடு பாதுகாப்பு

அதிக அளவில் வேலை கொடுக்கும் போது இதில் உள்ள ஒரு விசையால் மிக்சியின் மின்னணு சர்க்யூட்டை செயலிழக்க வைத்து மோட்டாரை காப்பாற்றும். பெரும்பான்மையான மிக்சிகளில் இது இருக்கும்.

ஜாடிகள் (Jars) எண்ணிக்கை

சிறிய ஜாடி, நடுத்தர ஜாடி போன்றவற்றை நம் குடும்பத்துக்கு உபயோகம் ஆகுமாறு தேர்ந்து எடுப்பது நல்லது. ஜாடியில் பிளேடு மேலே இருக்கிறதா, அடியில் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். அடியில் பிளேடு இருக்கும்போது இன்னும் நைசாக அரைக்க முடியும். மேலே இருந்தால் சில நேரம் மிளகு போன்றவை கீழேயே சுற்றிக்கொண்டு இருக்கும். ஆனால், எதுவும் சிக்கிக் கொள்ளாது. ஜாடி எந்தவிதமான லாக் சிஸ்டம் என்று கவனித்துக் கொள்ளவும்.

மிக்சியை பொறுத்தவரை அக்கம்பக்கம் பார்த்து தெரிந்துகொண்டு வாங்குவது நல்லது. இதோ சில நிறுவனங்களின் தயாரிப்புகள்…பேனசோனிக் மிக்சிஇதன் மூடி டிசைன் லாக் ஆனால் மட்டுமே ஓடும். 550 வாட்ஸ் சக்தி உள்ளது. இரண்டு வருட வாரன்டி. ப்ரீத்தி மிக்சி’ப்ரீத்திக்கு நான் கியாரன்டி’ என்று வீடு வீடாக ஒலிக்குமே விளம்பரம்.

ரூ. 4 ஆயிரத்தில் இருந்து 7 ஆயிரம் வரை உள்ள மாடல்கள் விற்பனைக்கு உள்ளன. இதில் X ப்ரோ என்பது அதிக விலையுள்ள மாடல். இது 1,300 சக்தியில் செயல்படுகிறது. எனவே இதன் வேகமும், அரைக்கும் திறனும் நன்றாகவே இருக்கும். மூன்று விசைகள் உள்ளன. அதிவேகம், வேகம், மிதம். மோட்டார் கூலிங் தொழில்நுட்பம் உள்ளது. கடினமான பிளேடுகள் எவர்சில்வர் ஜாடிகளில் இணைக்கப்பட்டு இருக்கி்ன்றன. வோல்டேஜ் பிரச்னை, அதிக கொள்ளளவு பிரச்னை – இரண்டுக்கும் கட் ஆப் வசதி உள்ளது. 2 லிட்டர் ஜாடிகள் இரண்டும், முக்கால் லிட்டர் சட்னி ஜார் ஒன்றும் இணைப்பாக வருகிறது.

அடுத்து இவர்களின் பிரபலமான தயாரிப்பு ப்ளூ லீஃப் பிளாட்டினம். இதில் ஒரு ஜாடி, பொருட்கள் வைத்துக்கொள்ள கிடைக்கிறது. 750 வாட்ஸ் சக்தியில் 1.7 லிட்டர், 1.25 லிட்டர், 0.4 லிட்டர் மூன்று எவர்சில்வர் ஜார்களும், 1.5 லிட்டர் ஜூஸ் ஜாடியும் உண்டு.
அமெரிக்கா போன்ற நாடுகளில் 110 வோல்டேஜ் என்பதால், ப்ரீத்தி அமெரிக்க மாடலும் விற்பனையில் உள்ளது.

பட்டர்ஃப்ளை மிக்சி

காந்திமதி அப்ளையன்ஸ் என்று ஆரம்பித்து பட்டர்ஃப்ளை பிராண்டில் 40 ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிறுவனம். பல மாடல்களில் அறிமுகப்படுத்துகிறார்கள். இந்த மாடலை பொறுத்தவரை 1.75, 1.25, அரை லிட்டர் வடிவுகளில் வருகிறது. 750 வாட்ஸ் சக்தியில் செயல்படுகிறது. அரைக்கும்போது பார்க்கும் வசதியுடன் பிளாஸ்டிக் மூடி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பிளேடுகள் மிகுந்த கூர்மையுடன் உள்ளன. மூன்று வருட வாரன்டியுடன் வருகிறது.

சுமீத் மிக்சி

இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு, பல பிரச்னைகளுக்கு நடுவிலும் இந்த பிராண்ட் இன்றும் மக்கள் மனதில் இடம் பெற்று இருக்கிறது. இந்த குறிப்பிட்ட மாடல் 750 வாட்ஸ் சக்தியுடன் 1.5, 0.75, 0.3 லிட்டர்களில் 3 ஜாடிகள் உள்ளன. ஒரு வருட வாரன்டி கிடைக்கிறது.

ப்ரெஸ்டீஜ் மிக்சி

சமையல் உபகரணங்கள் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் பிராண்ட் இது. இந்த மாடல் 2,900 ரூபாய் விலையிலிருந்து கிடைக்கிறது. 750 வாட்ஸ் சக்தியில், 3 ஜாடிகளுடன் வருகிறது. எல்.இ.டி. லைட் வசதி உள்ளது.

கொஞ்சம் கவனியுங்கள்…

ப்ரெஸ்டீஜ், பஜாஜ் தயாரிப்புகளும் நன்றாக விற்பனை ஆகின்றன. இவற்றின் பல மாடல்களில் மூடிகளை கவனமாக பிடித்துக்கொண்டு உபயோகிக்க வேண்டும். பேனசோனிக்கை பொறுத்தவரை மூடி அமைப்பால் வெளியே சிந்தாமல் அரைக்கிறது. அதைத் தவிர அதன் புஷ் அமைப்பும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எந்த மிக்சி வாங்கினாலும் வாட்ஸ் சக்தி, மூடி, புஷ் அமைப்பு போன்ற விஷயங்களை கவனித்து வாங்குவது அவசியமாகிறது.

அதற்கு பிறகுதான் ஜாடிகள் வடிவமைப்பு, வேக அளவு எல்லாம். பிளேடு அமைப்பில் ஜாடியின் உள்ளே கொஞ்சம் உயரத்தில் இருந்தால் சரியாக அரைக்காது. அதே வேளையில் இடைவெளி இல்லாமல் இருந்தால் நுண்ணிய பொருட்கள் சிக்கிக்கொண்டு சூடாகும் வாய்ப்பு உண்டு. இதில் பிளேடு அமைப்பு சரியான உயரத்தில் இருந்தால் குறைந்த அளவு சட்னிகூட நன்றாக அரைபடும்.ஹெவல்ஸ் முதல் மாகி வரை பல்வேறு மிக்சிகள், அதைத் தவிர லோக்கல் பிராண்டுகளும் உள்ளன.

இரண்டாயிரம் கொடுத்தால் இருபது பொருட்கள் இலவசம் போன்ற விளம்பரங்களில் மிக்சியும் வந்துவிட்டது. ஆனால், எல்லாமே சிறப்பாக செயல்படுவது இல்லை. அதனால், வீட்டுக்கு எப்படி தேவையோ அப்படி தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.ஒரு விடுகதை…
‘கடகடா குடு குடு நடுவிலே பள்ளம்…’இதன் விடையேஅடுத்த பகுதியின் அடிப்படை!
ld4107

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button