சரும பராமரிப்பு

இருக்கவே இருக்கு இயற்கை சன் ஸ்கிரீன்!

”வருடத்தின் 99 சதவிகித நாட்கள் வெயில் கொளுத்தும் நம் நாட்டில்தான் வைட்டமின் டி குறைபாடும் உள்ளது. வெளியில் வெயிலில் செல்ல வேண்டும் என்றால் பயம். சூரியனை நம் சருமத்தின் முதல் எதிரியாக நினைக்கிறோம். சூரியக் கதிர்வீச்சுக்குப் பயந்து ஒருநாளைக்கு மூன்று- நான்கு முறைகூட சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்கிறோம்.

‘என்னதான் சன்ஸ்கிரீன் புறஊதாக் கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்தாலும், ரசாயனங்கள் மூலம் செய்யப்படுவதால் கிட்டத்தட்ட அதுவும் ஆபத்துதான்’ என்கிறார் தாம்பரம் தேசிய சித்த மருத்துவ மையத்தின் டீன், டாக்டர் முருகேசன்.

‘ஆண் பெண் இருபாலருமே தங்கள் அழகைப் பாதுகாப்பதில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் அந்த முயற்சிகளில் சரியான வழிமுறைகளை நாம் தேர்ந்தெடுக்கிறோமா என்றால், ‘இல்லை’ என்பதுதான் பதில். விளம்பரங்களில் வரும் அழகான மாடல்களைப் பார்த்து மயங்கி, மார்க்கெட்டில் என்ன புது கிரீம் வந்தாலும் அது நம் சருமத்துக்கு ஏற்றதா என்றுகூடப் பார்க்காமல் வாங்கி உபயோகிக்கின்றனர் பெரும்பாலான மக்கள்.
p65
சூரியக் கதிரின் தாக்கத்தால் நம் சருமம் கருமை படர்ந்துவிடும். இதைதான் ‘டேனிங்’ என்கிறோம்’ என்றவர் தொடர்ந்து சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சொன்னார்.

”சன் ஸ்கிரீனில் உள்ள சில ரசாயனங்கள் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. இதைத் தொடர்ந்து உபயோகிப்பதால் தோலில் எரிச்சல், அலர்ஜி ஏற்படும். மேலும், இந்த ரசாயனங்கள் நம் சருமத்தில் உள்ள துளைகள் வழியாக உள் ஊடுருவிச் சென்று ஹார்மோன் சிதைவை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. அதிக ஆபத்தை உண்டாக்கும் ஆக்ஸிபென்சோன் (Oxybenzone) என்ற ரசாயனம் சன்ஸ்கிரீன்களில் 80 சதவிகிதம் வரை பயன்படுத்தப்படுகிறது.

p65c
வெப்பக் கதிர்களிலிருந்து நம் சருமத்தைப் பாதுகாத்துகொள்ள நினைக்கிறோம். ஆனால் சூரிய ஒளியும் நம் சருமத்துக்கு அவசியம் தேவை. அதிலிருந்து பெறக்கூடிய வைட்டமின் டி, பல சருமப் பிரச்னைகளை வரவிடாமல் தடுக்கிறது. ஆனால், அதிலிருந்து அதிகப்படியாக வெளியாகும் புற ஊதாக் கதிர்கள்தான் ஆபத்தானது. அதில் இருந்து பாதுகாக்க சன் ஸ்கிரீன்தான் பயன்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை. சருமத்தைப் பாதுகாக்க இயற்கை வழிமுறைகள் ஏராளமாக உள்ளன’ என்றவர் அவற்றைப் பற்றி விவரித்தார்.

சோற்றுக்கற்றாழை, ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கஸ்தூரி மஞ்சள் இவையெல்லாம் சூரியக் கதிர்களிலிருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கக்கூடியவை.

ஆலிவ் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் ஒரு மிகச் சிறந்த ‘மாய்ச்சுரைஸர்’. இதில் ஆன்டிஆக்சிடன்ட், சருமத்துக்கு தேவையான வைட்டமின் இ நிறைந்துள்ளது. வெயில் கருமையிலிருந்து காப்பதுடன் முகச் சுருக்கம் வராமல் தடுக்கும். வெளியில் செல்வதற்கு முன்பு, இந்த எண்ணெய்களைத் தடவிக்கொள்ளலாம்.

சோற்றுக்கற்றாழையை நன்றாக மசித்து, இளநீர் சேர்த்து வெயில் படும் இடங்களில் பூசிக்கொண்டு செல்லலாம். சருமம் டேன் ஆகாது.

நம் உடம்பில் வியர்வை தங்காதபடி, அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிப்பது நல்லது. அதிக நிறமுடைய காய்கறிகள், பழங்கள் மூலம் வீட்டிலேயே ‘பேக்’ போடுவதன் மூலம் உஷ்ணம் தாக்காமல் சருமம் குளிர்ச்சியாகும்.

பருத்தி ஆடை, நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த உணவுமுறைகள் பின்பற்றினாலே, வெயில், குளிர், மழை என எந்தக் காலத்திலும், நம் சருமம் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button