மருத்துவ குறிப்பு

சர்க்கரையை வெல்லலாம் ஸ்வீட் எஸ்கேப் – 4

ஸ்வீட் எஸ்கேப் – 4
சர்க்கரையை வெல்லலாம்

.11

கிட்டத்தட்ட 6.5 கோடி இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. தமிழ்நாட்டின் மக்கள்தொகை அளவுக்கு இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள். ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் பாதிக்கும் மிகப் பெரிய சுனாமியாக சர்க்கரை நோய் இருக்கிறது. ஒரு காலத்தில் பணக்காரர்கள் வியாதி என்று இதைச் சொன்னார்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதிக கலோரி உள்ள உணவு, குறைவான உடல் உழைப்பு காரணமாக நடுத்தர மக்கள் மத்தியில் அதிக அளவில் சர்க்கரை நோயாளிகளைக் காண முடிகிறது. ‘வெகுவிரைவில் சர்க்கரை நோயாளிகளின் தலைநகராக இந்தியா மாறிவிடும்’ என்று ‘அமெரிக்கன் டயாபடீஸ் அசோசியேஷன்’ மற்றும் ‘இன்டர்நேஷனல் டயாபடீஸ் ஃபெடரேஷன்’ கவலை தெரிவித்திருக்கின்றன.

சர்க்கரை நோய் வருவதற்கான சராசரி வயது 42.5 ஆக இருந்தது. ஆனால், இப்போது இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. இந்த நிலை மாற வேண்டும். இன்றைய காலகட்டத்திலும் சில எளிய வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொண்டாலே சர்க்கரை நோயைத் தவிர்க்க முடியும்.

12

சர்க்கரை நோயை எப்படிக் கண்டறிவது? கோல்டு ஸ்டாண்டர்டு பரிசோதனை என்ன?

சர்க்கரை அளவு கண்டறியும் எளிய ஸ்டிரிப் பரிசோதனை (Random blood sugar) செய்து, அதில் வரும் மதிப்பை வைத்து, நமக்கு சர்க்கரை நோய் இல்லை என்று மகிழ்ச்சி அடைபவர்கள் பலர். இந்தப் பரிசோதனை மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்றுதான் தெரிந்துகொள்ள முடியும். ப்ரீ டயாபடீஸ் எனப்படும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு உள்ளதா என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள முடியாது.  ஏன் ப்ரீ டயாபடீஸ் பற்றி மீண்டும் மீண்டும் சொல்கிறேன் என யோசிக்கலாம். இந்தியாவில் 6.5 கோடி பேர் சர்க்கரை நோயாளிகள் என்றால், மேலும் ஒரு 6.5 கோடி பேருக்கு ப்ரீ டயாபடீஸ் உள்ளது.

இதை கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக்கொண்டால், நம்மால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியும். இதை எளிய, குறைந்த செலவில் செய்யப்படும் ரத்தப் பரிசோதனையான குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் (Glucose Tolerance Test (GTT)) மூலம் கண்டறியலாம்.

இந்தப் பரிசோதனை செய்ய இரவு உணவு உண்ட பிறகு, 8 முதல் 10 மணி நேரத்துக்கு எதையும் சாப்பிடக் கூடாது. காபி, டீ கூட எடுத்துக்கொள்ளக் கூடாது. காலையில், வெறும் வயிற்றில் முதலில் ஒரு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். முதல் மாதிரி எடுத்ததும், 75 கிராம் அளவுக்கு குளுக்கோஸை, 100 மி.லி நீரில் கலந்து அருந்த வேண்டும். இரண்டு மணி நேரம் முடிந்த பிறகு மீண்டும் ஒரு முறை ரத்தப் பரி சோதனை செய்ய வேண்டும்.

இந்த இரண்டு பரிசோதனை முடிவுகளே, ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா, ப்ரீடயாபடீஸ் நிலையில் இருக்கிறாரா, சர்க்கரை நோயாளியா என்று சொல்லிவிடும். பரிசோதனை முடிவுகளை உங்கள் மருத்துவர் உங்களுக்கு விளக்குவார். இருப்பினும், இந்த மதிப்பீடுகள் குறித்த விழிப்புஉணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியம்.

13

பரிசோதனை முடிவில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறிந்தால் அவர்கள் இந்தப் பரிசோதனையை மீண்டும் செய்ய வேண்டியது இல்லை. ஆனால், ப்ரீ டயாபடீஸ் இருப்பது கண்டறியப் பட்டால், அவர்கள் வாழ்க்கைமுறை மாற்றங் களை மேற்கொள்ள வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் மருத்துவர் விவரிப்பார். அதைச் சரியாகப் பின்பற்றினாலே, சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும். இதை மிகச்சரியாகப் பின்பற்றிய ஏராளமானோர் சர்க்கரை நோய் வருவதில் இருந்து தப்பி உள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த பரிசோதனையைச்செய்து, சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து தப்ப எடுத்த முயற்சிகள் வெற்றியடைந்து உள்ளதா எனக் கண்டறிய வேண்டும். இந்தத் தொடரின் முக்கிய நோக்கமே, ‘வரும் முன் காப்போம்’ என்கிற நம்முடைய முதுமொழிக்கு ஏற்ப சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான்.

14

ஹெச்.பி.ஏ.1.சி

ஒருவருக்கு சர்க்கரை நோய் கண்டறிப்பட்டால், அவர்கள் மருத்துவர் பரிந்துரையின்படி தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறதா எனக் கண்டறியப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால், சர்க்கரை அளவு கட்டுக்குள்தான் இருக்கிறதா என்று கண்டறிவது சற்று சிக்கலானதாக இருந்தது. அதாவது, பரிசோதனைக்கு முன்பு இரண்டு, மூன்று நாட்களுக்குக் கட்டுப்பாடாக இருந்து, பரிசோதனை செய்யும்போது அது நார்மல் என்று காட்டும். அதன் பிறகு, அவர்கள் தங்கள் விருப்பம்போல செயல்பட ஆரம்பிப்பார்கள். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க வந்ததுதான் ஹெச்.பி.ஏ.1.சி பரிசோதனை. இது, கடந்த மூன்று மாதங்களில் (சராசரியாக 90 நாட்கள்) சர்க்கரை அளவு எப்படி இருந்தது என்று காட்டும். நம்முடைய ரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள் என்று பல உள்ளன. இதில், சிவப்பு அணுக்களில் கிளைசலேட்டட் ஹீமோகுளோபின் (Glycaslated Haemoglobin) வகை சர்க்கரையைச் சுமந்து செல்லும். இதன் ஆயுள் 90 நாட்கள். பரிசோதனையின்போது, ரத்தத்தை எடுத்து இந்த கிளைசலேட்டட் ஹீமோகுளோபினை பரிசோதனை செய்யும்போது, கடந்த மூன்று மாதங்களின் ரத்த சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ளலாம். குதிரைக்குக் கடிவாளம்போல, சர்க்கரை நோயாளிகளுக்கு இந்தப் பரிசோதனை மிகவும் அவசியம். இந்தப் பரிசோதனையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் செய்ய வேண்டும். பரிசோதனையில் மதிப்பு 7-க்கு கீழ் இருந்தால் கட்டுக்குள் இருக்கிறது என்று அர்த்தம். இதை அப்படியே பராமரிப்பது அவசியம்.

15

இந்த இதழில் இருந்து சர்க்கரை நோயை எப்படிக் கண்டறிவது என்பது தெரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இதைத் தெரிந்துகொண்ட நாம் குறைந்தது 10 பேருக்காவது இது பற்றி தெரிவித்து, சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து காப்பாற்ற முயற்சிப்போம். இதன்மூலம், நாட்டில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையைக் குறைத்து, தேசத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்போம்.
– தொடரும்

டயாபடீஸ் டவுட்

“என்னுடைய பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. எனக்கும் சர்க்கரை நோய் வருமா?”

“சர்க்கரை நோய் மரபணு வழியாக நமக்குக் கடத்தப்படுகிறது என்பது உண்மைதான் என்றாலும், சர்க்கரை நோய் வருவதற்கான முக்கியக் காரணியாக சுற்றுச்சூழல் இருக்கிறது. ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது, தொப்பையைத் தவிர்ப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வது, தினசரி உடற்பயிற்சிகள் செய்வது என வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டு, ஆண்டுக்கு ஒரு முறை குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் செய்துவந்தாலே சர்க்கரை நோய் வருவதைத் தவிர்க்கலாம்.”
ஸ்வீட்டர்

“வாரத்துக்கு ஐந்து நாட்களுக்கு தலா 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டாலே போதும், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button