மருத்துவ குறிப்பு

எடை தூக்கினால் குடல் இறங்குமா?

எனக்கு இரண்டு குழந்தைகள் சிசேரியன் மூலம் பிறந்தவை. இரண்டாவது குழந்தைக்குப் பிறகு குடலிறக்கம் (Hernia) ஏற்பட்டது. என் குடும்பத்தில் நிறைய பேருக்கு இந்தப் பிரச்னை உள்ளது. இது பரம்பரையாக ஏற்படக்கூடியதா? எடை அதிகம் தூக்கினால் குடலிறக்கம் ஏற்படுமா?

ஐயம் தீர்க்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக்…

”வயிற்றில் உள்ள குடல் சவ்வுப்படலம் சிறு துவாரங்கள் வழியாக வெளிவருவதையே குடலிறக்கம் என்கிறோம். தொப்புள் சார்ந்த மற்றும் அடிவயிற்றுப்பகுதி என இரண்டு வகையான குடலிறக்கம் உள்ளது. நமது வயிற்றுப் பகுதியில் தொப்புள், அடி வயிற்றிலிருந்து தொடைக்கு செல்லும் நரம்பு மற்றும் ரத்தக் குழாய்க்கான இங்குனல் (Inguinal) என்ற துவாரங்கள் இருக்கின்றன. வயிற்றின் உட்பகுதியில் இருந்து மேல்வரை இணைக்கும் இந்த துவாரங்களின் வாய் பகுதியில் எலாஸ்டிக் போல இருக்கும் இது விரிவடைவதால் குடல் மற்றும் குடல் சவ்வு வெளிவந்துவிடும்.

பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது வயிற்றுத்தசைகள் மீது அதிக எடை அழுத்துவதாலும், சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது போடப்படும் தையல் விட்டுவிடுவதாலும் குடலிறக்கம் ஏற்படுகிறது. இது பரம்பரை காரணமாக ஏற்படாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படக்கூடியது. பொதுவாக 30 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு வயிற்று சதைப்பகுதி பலவீனம் அடைவதாலும் தொடர்ச்சியான மலச்சிக்கல், தும்மல் மற்றும் இருமல் போன்றவற்றாலும் குடலிறக்கம் உண்டாகும்.

குடலிறக்கம் ஏற்படும் வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். இயல்பாகவே ஆண்களுக்கு இடுப்புத் தசைகள் பலவீனமானவை. இடுப்புக்கு கீழ், சிறுநீர் வெளியேறும் பகுதியை அடுத்து, விரைக்காய்கள் இருக்கும். அவை வயிற்றின் உட்பகுதியில் தொடங்கி, வெளியே நீண்டு தொங்குகின்றன. அந்த பகுதி வலுவிழக்க நேரிடும்போது அவர்களுக்கு அந்த பாதையில் குடல் இறங்கலாம். இதுதவிர, தொப்புள் பகுதியும் வலுவிழக்கும் வாய்ப்புகள் இருப்பதால் அவற்றின் வழியாகவும் குடலிறக்கம் ஏற்படலாம்.

மேலும், ஆண்கள் முதுமையடையும் காலத்தில், புரோஸ்டேட் சுரப்பிகள் வீங்கிப் பெரிதாகும். சிறுநீர் கழிப்பதில் அது சிரமத்தை ஏற்படுத்தும். நாளடைவில் அந்த சிரமமே அவர்களுக்கு குடலிறக்கம் ஏற்பட காரணமாகிறது. பெண்களும் ஆண்களும் அதிக எடை தூக்குவதை தவிர்ப்பது நல்லது. பளுதூக்குபவர்கள் மற்றும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் எடை தூக்கும்போது அடிவயிற்றில் பெல்ட் அணிந்து கொண்டு எடையைத் தூக்க வேண்டும். சிசேரியன் செய்த பெண்கள் 6 மாத காலத்துக்குக் குழந்தைகளை தூக்கக்கூடாது. வயிறு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் அதிக எடை உள்ள பொருட்களை கையாளக்கூடாது…”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button