சரும பராமரிப்பு

அதிரடி அழகுக் குறிப்புக்கள்!

தேவையான நேரத்தில் தேவையான பொருட்கள் தீர்ந்துவிடுவது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினைதான்! ஆனால், கைவசம் இருக்கும் சில பொருட்களை வைத்து அந்தத் தேவைகளை நிறைவேற்றிவிட முடியும். இதன்படி, அழகு சாதனங்கள் திடீரென்று காலை வாரிவிட்டால் அதிரடியாகப் பயன்படுத்தக்கூடிய குறிப்புக்கள் சில இதோ:

சிலருக்கு கண்களைச் சுற்றிலும் அதைப்பு போன்றதொரு சிறு வீக்கம் காணப்படும். பார்ப்பதற்கே கவலையாக இருக்கும் இந்த வீக்கத்தை ஐந்து நிமிடத்தில் போக்கிவிடலாம்.

ஒரு சிறு கரண்டியை (டீஸ்பூன்) குளிர்சானப் பெட்டியினுள் வைத்துவிடுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து அதை எடுத்து அந்த வீக்கத்தின் மேல் வைத்துவிடுங்கள். வீக்கம் உடனடியாகக் குறையத் தொடங்கும். கரண்டிக்குப் பதிலாக உருளைக் கிழங்கு அல்லது வெள்ளரிக்காய் துண்டுகளையும் பயன்படுத்தலாம்.

விடுமுறையைக் கடற்கரையோரமாகக் கழிக்கிறீர்களா? அங்கே கிடைக்கும் கடற்கரை மண்ணையும் தண்ணீரையும் கலந்து ஸ்க்ரப் போலப் பிசைந்து அதை உடலில் தடவிக்கொள்ளுங்கள். இருபது நிமிடங்கள் கழித்துக் கழுவி விட, உடலில் சருமம் பளபளக்கும்.

வெளியில் எங்காவது வெயிலில் செல்வதற்கு முன், 1:1 என்ற விகிதத்தில் தண்ணீரையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து அதை, உங்கள் தலைமுடியின் மெல்லிய பகுதியில் தடவிக்கொள்ளுங்கள். பிறகு பாருங்கள், வெயிலில் உங்கள் தலைமுடி எப்படிப் பளபளக்கிறதென்று!

பற்கள் மங்கிப் போயிருக்கின்றனவா? இதனால் புன்னகைக்கத் தயங்குகிறீர்களா? உடனே ஒரு ஸ்ட்ரோபெரியை எடுங்கள். அதை உங்கள் பற்களில் அழுந்தத் தேய்க்க பற்கள் பளிச்சிடும். அல்லது இரண்டு ஸ்ட்ரோபெரி பழங்களை மிக்ஸியில் இட்டு பசையாக அடித்தபின், உங்கள் பற்தூரிகை மூலம் ஸ்ட்ரோபெரி பசையைத் தொட்டு பற்களைத் துலக்குங்கள். பளபளப்பும் வாசமும் பார்ப்பவர்களைத் தூக்கும்! ஆனால் துலக்கியபின் நன்றாக வாயைக் கொப்புளித்து விடுங்கள். மேலும், தினமும் இதைப் பயன்படுத்தக் கூடாது.

எங்காவது வெளியே முக்கியமான இடத்துக்குச் செல்லவேண்டியிருக்கும்போதுதான் முகத்தில் பருக்கள் முளைக்கத் தொடங்கும். கவலை வேண்டாம்! எடுங்கள் பற்பசையை! அதை இரவு தூங்கச் செல்லும் முன் பருக்களின் மீது கொஞ்சம் தடவி விட்டுத் தூங்குங்கள். இதனால் உங்களுக்கு பற்பசை வாசமும் தொந்தரவு செய்யாது. காலையில் முகத்தைக் கழுவிவிட்டுப் பார்த்தால், பரு காணாமல் போச்! நீங்கள் பயன்படுத்தும் பற்பசை வெள்ளை நிறம் மட்டுமே கொண்டதாய் இருக்க வேண்டும். இதையும் தொடர்ச்சியாகச் செய்யக்கூடாது.

‘ட்ரை ஷெம்பூ’ பற்றி அறிந்திருப்பீர்கள். இதைப் பயன்படுத்துவதற்கு தண்ணீர் தேவையில்லை, தலை துவட்டவும் தேவையில்லை. ஸ்ப்ரே செய்தபின் தலை வாரத் தொடங்கலாம். ஒருவேளை ட்ரை ஷெம்பூ முடிந்து விட்டது என்றால், அதற்குப் பதிலாக பேபி பௌடரைப் பயன்படுத்தலாம். ஒப்பனை செய்துகொள்ளப் பயன்படும் பெரிய தூரிகையைக் கொண்டு தலையின் சருமப் பகுதியில் படும்படி பௌடரைத் தடவிக்கொள்ளுங்கள். பின்னர் தலையை வாரிவிட, மேலதிக பௌடர் அகன்றுவிடும். குளித்து முடித்துப் புத்துணர்ச்சியுடன் இருப்பது போலத் தோற்றம் தரும் உங்கள் தலைமுடி. அதன்பின், ‘நான் குளிக்கவேயில்லை’ என்று நீங்களாகக் கூறினாலும் யாரும் நம்பமாட்டார்கள்.

கறை படிந்ததுபோன்ற உதடுகள் தான் தற்போதைய புதிய வரவு! இதை ஆங்கிலத்தில் ‘லிப் ஸ்டெய்ன்’ என்பார்கள். இந்த லிப் ஸ்டெயின்கள் தீர்ந்துவிட்டால் கவலையே படாதீர்கள். உங்கள் குளிரூட்டியினுள் இருக்கும் பீட்ரூட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதைச் சிறிதாக வெட்டி, அதை உங்கள் உதடுகளில் மெல்லத் தேய்த்துக்கொள்ளுங்கள். உண்மையான லிப் ஸ்டெய்ன்களே தோற்றுப் போய்விடும். மேலும், இது புதியதொரு தோற்றத்தை உங்களது உதடுகளுக்குத் தரும்.

நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஷெம்பூ தீர்ந்துவிட்டதா? இரண்டு அல்லது மூன்று முட்டைகளை ஒரு பௌலில் ஊற்றி நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். இதை எடுத்து உங்கள் தலைமுடியில் ஷெம்பூ போலவே தடவுங்கள். சில வேளைகளில் நுரை கூட வரும். பின்னர் நன்றாகக் கழுவிவிட்டு, கண்டிஷனரைத் தடவுங்கள். கண்டிஷனரும் இல்லையா? ஒரு லீட்டர் தண்ணீரில் மூன்று மேசைக்கரண்டி வினாக்கிரியைக் கலந்துகொள்ளுங்கள். அதனுடன் ஏதேனும் நறுமணம் தரும் எண்ணெய்யை மூன்று துளி சேர்த்துக்கொள்ளுங்கள். கண்டிஷனரும் தயார்! இது உங்கள் கூந்தலுக்கு பளபளப்பை மட்டுமன்றி, நறுமணத்தையும் தரும்.

நகம் உடையும் பிரச்சினை இருப்பவர்கள் கவனத்துக்கு! ஒரு எலுமிச்சையை இரண்டாக நறுக்கி, அதில் உங்கள் முழு நகமும் புதையும்படி அழுத்துங்கள். பத்து நிமிடங்கள் கழித்து நகங்களை வெளியே எடுத்து நன்கு கழுவி விடுங்கள். இது உங்கள் நகங்களுக்கு பலம் சேர்க்கும்.

வெளியே போய் வந்துவிட்டீர்கள். ஆனால் வீட்டில் மேக்கப் ரிமூவர் இல்லை. என்ன செய்யலாம்? இருக்கவே இருக்கிறது ஒலிவ் எண்ணெய். இதில், சில துளிகளை எடுத்து இரண்டு கைகளிலும் தடவியபின், முகத்தில் மென்மையாகத் தேயுங்கள். ஒப்பனை கலைவதோடு, முகச் சருமத்துக்குத் தேவையான விட்டமின்களும் கிடைக்கும்.

அதிரடிக் குறிப்புகள் அதிருதில்ல?!Beauty 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button