தலைமுடி சிகிச்சை

முடி உதிர்தல் பற்றிய கவலைகளை போக்கும் அற்புத எண்ணெய்கள்!

உங்கள் கூந்தல் அதிகமோ குறைவோ, அடர்த்தியாய், பொலிவாய் இருந்தால்தான் அழகாய் இருக்கும். நீண்ட கூந்தல் இருந்தாலும், வறண்டு, கடினமாய் இருந்தால், எவ்வளவு நீளமாய் இருந்தாலும்,அழகான தோற்றத்தை தராது.

கூந்தல் வளர்ச்சிக்கு எண்ணெய் தேய்ப்பது முக்கியம். எண்ணெய் தலையின் வேர்கால்களின் மூலம் உள்ளே ஊடுருவி, முடி வளரவும், ஊட்டம் அளிக்கவும் செய்கிறது.

தலை முழுவதும் இல்லையென்றாலும், ஸ்கால்ப்பில் எண்ணெய் தடவ வேண்டும். வாரம் ஒரு முறை கட்டாயம் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, கூந்தலின் வேர்கால்கள் தூண்டப்படுகின்றன. அங்கே ரத்த ஓட்டம் அதிகரித்து, புதிய முடிகள் வளரும் .வெறும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் என்ணெய் என்றில்லாமல், பல மூலிகைகள் கலந்து தலைக்கு உபயோகப்படுத்தும்போது, முடி வளர்ச்சியை தூண்டும். பொலிவாகவும் காணப்படும் . அவ்வாறு எப்படி மூலிகை எண்ணெய்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம் என பார்க்கலாம்.

நெல்லிக்காய் எண்ணெய் : நெல்லிகாய் விட்டமின் சி நிறைந்தது. கருமையான முடி வளரச் செய்கிறது. இள நரையை தடுக்கிறது. சிறு வயதிலிருந்தே நெல்லிக்காய் கலந்த எண்ணெய் கூந்தலில் தேய்த்தால், வயதானாலும், முடி கருப்பாகவே இருக்கும். எளிதில் நரைக்காது.

தேவையானவை : நெல்லிக்காய் பொடி -100கிராம் தேங்காய் எண்ணெய் -250 மில்லி லிட்டர்

செய்முறை :- நெல்லிக்கய் பொடி டிகாஷன் : முதலில் நெல்லிக்காய் டிகாஷன் தயார் செய்ய வேண்டும். அதற்கு நெல்லிகாய் பொடியை பாதி அளவாக அதாவது 50 கிராம் எடுத்து 4 லிட்டர் நீரில் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள்.

1 லிட்டர் நீராக சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும். பின்னர் அதனைஒரு மெல்லிய துணியினால் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். நெல்லிக்காய் டிகாஷன் தயார்.

இப்போது, மீதமிருக்கிற நெல்லிக்காய் பொடியில் நீர் கலந்து, பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் நெல்லிக்காய் டிகாஷனை ஊற்றி,அடுப்பில் வைக்கவும். அதனுள், நெல்லிக்காய் பேஸ்ட்டையும் சேர்த்து கலக்குங்கள். இப்போது தேங்காய் எண்ணெயையும் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

சலசலப்பு, அடங்கி நீர் முற்றிலும் வற்றிய பின் எண்ணெய் பதத்திற்கு வரும். அதன் பின் அடுப்பை அணைத்து, ஆற விடுங்கள்.இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி உபயோகியுங்கள்.

வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து குளித்தால், கூந்தல் கருமையாகவும் நீண்டும் வளரும்.

துளசி எண்ணெய் : துளசி கிருமிகளை அழிக்கிறது. தலையில் தொற்றுக்களால் ஏற்படும் அரிப்பு, பொடுகு, மற்றும் வேறு விதமான பிரச்சனைகளை தடுக்கிறது. கூந்தலுக்கு பொலிவினையும் தரும்.

தேவையானவை : துளசி, தேங்காய் எண்ணெய், நீர், வெந்தயம்

செய்முறை : ஒரு கப் அளவு துளசியை நன்றாக கழுவி, அரைத்துக் கொள்ளுங்கள். அதனை 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் கலந்து, அடுப்பில் மிதமான தீயில் வையுங்கள்.

துளசி பேஸ்ட் அடியில் தங்கிவிடாதபடி, நன்றாக கலக்கியபடி இருக்க வேண்டும். பின்னர் சிறிது வெந்தயத்தை உள்ளே போடவும். நீர் வற்றியவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

இதனை ஆறியவுடன் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். வடிகட்ட தேவையில்லை. வாரம் இருமுறை இந்த எண்ணெய் உபயோகப்படுத்தலாம். எப்போது உபயோகிக்கிறீர்களோ, அப்போது லேசாக எண்ணையை சூடு பண்ணி, தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.

செம்பருத்தி எண்ணெய் : இது கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் அருமையான பலனைத் தரும். கூந்தல் பொலிவாகவும், மிருதுவாகவும் இருக்கும். பொடுகினை அண்ட விடாது. ஆரோக்கியமான கூந்தலுக்கு இந்த எண்ணெய் மிகவும் உகந்தது.

செம்பருத்தி பூக்கள் – 4-5 செம்பருத்தி இலைகள் – ஒரு கைப்பிடி அளவு தேங்காய் எண்ணெய்- 250 மி.லி.

செம்பருத்தி இதழ்களை தனியாக பிரித்து, இலையுடன் மைய அரைக்கவும். பின்னர், அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் இந்த செம்பருத்தி பேஸ்ட்டை சேருங்கள்.

நீர் சலசலப்பு அடங்கியவுடன், சிறிது வெந்தயத்தை சேர்த்து, ஐந்து நிமிடம் மிதமான தீயில் வையுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து, ஆறியவுடன் பாட்டிலில் சேகரித்துக் கொள்ளுங்கள்.

இந்த எண்ணெயை வாரம் இரு முறை நன்றாக ஸ்கால்ப்பில் தேய்த்து குளித்தால் முடிஉதிரும் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

2 30 1464601140

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button