தலை சீவுவது எப்படி?

ஹேர் ஸ்டைலிஸ்ட் ஜாவெத் ஹபீப்

பல் துலக்குவது, குளிப்பது என அடிப்படையான அன்றாட வேலைகளில் எதை மறந்தாலும், தலை வார யாரும் மறப்பதில்லை. தினம் ஒரு முறை தலை வாருவதில் இருந்து, நிமிடத்துக்கொரு முறை வாருவது வரை ஒவ்வொருவருக்கு அதில் ஒவ்வொரு விருப்பம். தலை வாருவதை தலையாயக் கடமையாகச் செய்கிற நீங்கள், அதை சரியாகச் செய்கிறீர்களா என்று யோசித்திருக்கிறீர்களா?

`தலை சீவறதுல சரியென்ன… தப்பென்ன?’ என்கிறவர்களுக்கு அதற்கான விதிமுறைகள் சிலவற்றை விளக்குகிறார் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் ஜாவெத் ஹபீப்.

* உங்கள் கூந்தலுக்கு ஷாம்பு குளியல் எடுத்து, கண்டிஷனிங் செய்த பிறகு ஈரம் போக டவலால் துடையுங்கள். மென்மையான டவலால் கூந்தலை மிருதுவாக சுற்றித் துடைக்க வேண்டும். அழுத்தித் தேய்த்து அரக்கப் பரக்கத் துடைத்தால் கூந்தல் உடைந்து உதிரும். தலைக்குக் குளித்ததும், கூந்தல் சீக்கிரமே உடைந்து போகும் நிலையில் மிக பலவீனமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* அகலமான பற்கள் கொண்ட சீப்பினால் கீழிருந்து மெதுவாக வாரி விட வேண்டும்.
* கூடியவரையில் கூந்தலை உலர்த்த ஹேர் டிரையர் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். விரல்களால் கூந்தலைக் கோதிவிட்டு, சிக்குகள் இன்றி, பிரித்து விட்டு, உலர்த்தவும்.
* கூந்தலை பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியாக பிரஷ் செய்யவும்.

எந்த சீப்பு நல்ல சீப்பு?

சீப்பில் என்ன இருக்கிறது என நினைக்க வேண்டாம். கூந்தலை வாரும் பிரஷ் அல்லது சீப்பில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு தன்மை உண்டு. அடிப்படையில் 4 வகை பிரஷ்கள் உள்ளன.

* Vented Hair Brushes
இது அகலமான பற்களுடனும் உருண்டையான நுனிப் பகுதிகளுடனும் இருக்கும். இது தலை வாரும் போது கூந்தலைப் பாதுகாக்கும். அகலமான பற்களுக்கு இடையில் காற்று புகுவதால், கூந்தலை உலர்த்த இந்த வகை பிரஷ் பயன்படும்.
* Cushioned Hair Brushes
நீளமான கூந்தலை வாரப் பயன்படுவது இது. இதில் உள்ள குஷன் போன்ற தலைப்பகுதி நீளமான கூந்தலை வாரும் போது அழுத்தம் கொடுக்காமல் இலகுவாக்கும்.
* Round Hair Brushes
இது பலவித அளவுகளில் வருகிறது. இது பெரும்பாலும் கூந்தல் வளைவுகளையும் சுருள்களையும் ஸ்டைலிங் செய்யப் பயன்படுகிறது.
* Classic Hair Brushes
அரைவட்டமாக உள்ள இவை, சாதாரணமாக கூந்தலை வாருவதற்குப் பயன்படுவது. இதில் உள்ள பற்கள் 5, 7, 9 என்ற வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். பிரஷ்ஷை போலவே அதில் உள்ள பற்களிலும் பல வகை உண்டு.
* Boar Bristles
இது மிருதுவாக இருப்பதால், கூந்தலின் கியூட்டிகிள் பகுதி சரியாக மூடப்பட உதவும்.
* Nylon Bristles
மிகப் பரவலாக எல்லோராலும் பயன்படுத்தக்கூடிய இது, மென்மையாக, கடினமாக என எல்லா மாதிரியும் கிடைக்கக்கூடியது.
* Porcupine Bristles
பலவகையான பற்களை ஒருங்கே கொண்டது. கூந்தலை வாரும்போது சரியான கட்டுப்பாடு இருக்கும்.
* Metal Bristles
இது விக் மற்றும் செயற்கை கூந்தல் அட்டாச்மென்ட்டுகளை வாரிவிடுவதற்கு மட்டுமே பயன் படுத்தப்படுவது.

சரியான பற்கள் கொண்ட சரியான பிரஷ்ஷை பயன்படுத்துவது என்பது கூந்தல் பராமரிப்பில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. கூந்தலை பிரஷ் செய்து விடுவதன் மூலம் அதன் வெளிப்புற லேயரான கியூட்டிகிள் பகுதி மென்மையாகிறது. பொதுவாக அந்த கியூட்டிகிள் பகுதியானது தலைக்குக் குளிக்கும் போது திறந்து கொள்ளும். சரியான பிரஷ் கொண்டு வாரும் போது அந்த கியூட்டிகிள் மூடப்படுவதால், கூந்தலின் உள் லேயர்கள் பாதுகாப்பாக இருக்கும். சிலர் அடிக்கடி தலைமுடியை பிரஷ் செய்து கொண்டே இருப்பார்கள். அப்படிச் செய்வதால் கியூட்டிகிள் பாதிக்கப்பட்டு, கூந்தல் வறண்டும், முரட்டுத்தன்மையுடனும் மாறும்.

தலை வாரும் போது கவனிக்க வேண்டியவை…

* எப்போதும் கூந்தலை சுத்தமாக வைத்திருங்கள். மென்மையான பற்கள் கொண்ட பிரஷ்ஷினால் வாருங்கள். இது போன்ற பிரஷ் பொடுகுப் பிரச்னை உள்ள கூந்தலுக்கும் நல்லது. எப்போதுமே கடினமான பிளாஸ்டிக் அல்லது மெட்டல் கொண்ட பிரஷ்ஷை உபயோகிக்காதீர்கள்.
* அழுக்கான சீப்பு மற்றும் பிரஷ்ஷை உபயோகிக்கக்கூடாது.
* தினமும் 2 முறைகள் கூந்தலை வாரி விடுங்கள். அது மண்டைப் பகுதியின் ரத்த ஓட்டத்தைத் தூண்டிவிடும். தவிர அது மண்டைப் பகுதியில் உள்ள இறந்த செல்களையும் அகற்றும். கூந்தலை அதிக அழுத்தத்துடனும் அடிக்கடியும் வார வேண்டாம்.
* கூந்தலை ஒருபோதும் இறுக்கமாகக் கட்டிக் கொள்ளாதீர்கள். அது கூந்தலின் வேர்க்கால்களை பலமிழக்கச் செய்து, உதிர்வுக்குக் காரணமாகி விடும்.

6 முதல் 8 வாரங்களுக்கு ஒருமுறை கூந்தலை ட்ரிம் செய்து விடுங்கள். வாரம் ஒருமுறை உங்கள் சீப்பு மற்றும் பிரஷ்ஷை சோப் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி உபயோகியுங்கள். பிரஷ்ஷில் ஒரு பல் உடைந்தால்கூட அதை உடனே மாற்றுங்கள். Back combing எனப்படுகிற தலைகீழ் தலைவாருதலைத் தவிருங்கள். அது கூந்தலின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

Leave a Reply