மருத்துவ குறிப்பு

மூட்டுவலிக்கு தீர்வு. ஆர்த்தோகைன் தெரப்பி!

பல காலங்களாக, விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு ஏற்படும் மூட்டு வலியைப் பொருட்படுத்தாமல் விளையாடி வந்தனர். வலியை எதிர்கொள்ள வலி நிவாரணிகள், வீக்கத்தைத் தடுக்கும் மாத்திரைகள், ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுப்பது, மிகத்தீவிர பாதிப்பு என்றால் அறுவைசிகிச்சை செய்வது என்று இருந்தனர். இந்தநிலையைப் போக்க, மூட்டுப் பகுதிகளில் ஏற்படக்கூடிய பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே சரி செய்யும் ‘ஆர்த்தோகைன் தெரப்பி’ (Orthokine Therapy) எனும் சிகிச்சை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் அறிமுகமானது. விளையாட்டு வீரர்கள் மட்டுமே பயன்படுத்திய, அதிக பிரபலமாகாத அந்த சிகிச்சை முறை, கொஞ்சம் கொஞ்சமாக பொது மக்கள் பெறும் சிகிச்சையாக மாறிக்கொண்டுவருகிறது. தற்போதுதான் அது நம் ஊருக்கும் வந்திருக்கிறது.

எலும்பு குறிப்பிட்ட வயது வரை நன்கு வளர்ச்சியடையும். அதன்பிறகு, வளர்ச்சி குறைந்து, தேய்மானம் ஏற்படத் தொடங்குகிறது. இது தவிர, விளையாட்டுகள், காயங்கள், முறையான ஸ்ட்ரெச்சிங் பயிற்சி செய்யாமல் உடற்பயிற்சி செய்வது போன்ற காரணங்களால் மூட்டில் `கார்ட்டிலேஜ்’ எனும் குருத்தெலும்பு பாதிக்கப்படுகிறது. இந்த குருத்தெலும்புதான் மூட்டுக்களுக்கு இடையே மென்மையான மெத்தைபோல செயல்பட்டு, இரண்டு எலும்புகளும் தேயாமல் பாதுகாக்கிறது. இவர்களுக்கு, மாத்திரை மருந்து அளிக்கப்படும். பாதிப்பு தீவிரமானால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே தீர்வு.

புதிய ஆர்த்தோகைன் தெரப்பியில், நோயாளியின் ரத்தத்திலிருந்து ஆன்டி இன்ஃப்ளேமேட்டரி ப்ரொடக்டிவ் புரதம் (Anti-inflammatory protective protein (IL-1Ra)) பிரித்து எடுக்கப்படும். அதாவது, ஊசி மூலமாகவே ரத்தம் உறிஞ்சி எடுக்கப்பட்டு, இன்குபேட்டர் (Incubator) கருவியில் 6 – 9 மணி நேரம் வரை, 37 டிகிரி செல்சியஸில் (நம்முடைய உடலின் வெப்பநிலை) வைக்கப்படுகிறது. இன்குபேட்டரில், ரத்த அணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றன; நல்ல புரதங்களும் உற்பத்தியாகின்றன. அதன்பிறகு, அதில் இருந்து ஆன்டி இன்ஃப்ளேமேட்டரி ப்ரொடக்டிவ் புரதம் மட்டும் தனித்து பிரிக்கப்பட்டு, எடுக்கப்படும். இந்த புரதத்தை மீண்டும் தசைநார்கள் மற்றும் குருத்தெலும்பு, மெல்லியத்திசுக்கள் உள்ள பகுதியில் ஊசி மூலமாகவே செலுத்தப்படும். அது அந்தப் பகுதியில் திசுக்கள், தசைகளில் உள்ள வீக்கங்களை போக்கி, சரி செய்யும். இந்தச் சிகிச்சை மூலம் மூன்றிலிருந்து ஆறு வாரங்களில் வீக்கம், வலி போன்றவை குறையும். இதில் குணமாகும் காலம், நோயின் தன்மை, செலுத்தப்பட்ட புரதத்தின் அளவைப் பொறுத்து மாறும்.

யாருக்குப் பலன் அளிக்கும்?

கால், இடுப்பு மூட்டு வலி (Joint Pain), குருத்தெலும்பு பாதிப்பு (Cartilage Damage), எலும்பு இறுக்கம் (Stiffness) மற்றும் வீக்கம், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் போன்ற எலும்பு நோய் பாதிப்புகளுக்கு இந்த ‘ஆர்த்தோகைன் தெரப்பி’ மூலம் சிகிச்சை அளிக்க முடியும். குறிப்பாக, ஆரம்ப நிலையில் உள்ள எலும்பு பாதிப்புகளுக்கும் எலும்பில் ஏற்பட்ட வலியைக் குறைப்பதற்கும் இந்தச் சிகிச்சை முறை சிறந்தது. எலும்பு மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தச் சிகிச்சை முறை ஏற்றதல்ல. இந்த சிகிச்சை முறை பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு சிறந்தது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் எஃப்.டி.ஏ அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

சிகிச்சையின் சாதகங்கள்!

நம்முடைய உடலில் இருந்து எடுக்கப்பட்ட சீரம், ஆன்டி இன்ஃப்ளேமேட்டரி புரதத்தை மீண்டும் செலுத்துவதால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது.

எலும்புவலியைக் குறைக்கவும், எலும்பின் செயல்பாட்டை மேம்படுத்தவும் முடியும்.

சிகிச்சையின்போது, அதிக வலியை ஏற்படுத்தாது.

சிகிச்சைக்காக நோயாளியிடமிருந்து பெறப்பட்ட சீரம் மற்றும் ஆன்டி இன்ஃப்ளேமேட்டரி புரதத்தை ஏழு மாதங்கள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

ஸ்டெம் செல் Vs. ஆர்த்தோகைன் தெரப்பி

ஸ்டெம் செல், ஆர்த்தோகைன் தெரப்பி ஆகிய இரண்டு சிகிச்சை முறைகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் மூலமே இவற்றில் நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை.

ஸ்டெம் செல்கள், உடலின் அடிப்படை ஆதார செல்கள். ரத்தம், எலும்பு மஜ்ஜை, தொப்புள்கொடி ரத்தம் போன்றவற்றில் இருந்து ஸ்டெம் செல்களைப் பிரிக்கிறார்கள். பின்னர், நம் தேவைக்கேற்ப எலும்பு, கார்ட்டிலேஜ், இதயம், கல்லீரல் என உடலின் எந்த செல்லாகவும் ஸ்டெம் செல்களை மாற்றிக்கொள்ள முடியும்.

ஆனால், ஆர்த்தோகைன் தெரப்பி, எலும்பு சம்பந்தமான பாதிப்புகளுக்கு மட்டும் அளிக்கப்படும் சிகிச்சை முறையாகும். இது, செல்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதல்ல. பாதிக்கப்பட்ட நோயாளியின் ரத்தத்திலிருந்து பெறப்பட்ட ஆன்டி இன்ஃப்ளேமேட்டரி புரதத்தை வளர்ச்சியடைய வைத்து அதன் மூலம் சிகிச்சை அளிப்பது.
images8WATY8BCh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button