அழகு குறிப்புகள்

தன்னம்பிக்கை தருது மேக்கப்,tamil beauty tips

14-3-facial

திடீரென தன்னம்பிக்கை குறைவாக உணர்கிறீர்களா? உங்களையே உங்களுக்குப் பிடிக்கவில்லையா? சட்டென பார்லர் சென்று ‘ஐ ப்ரோ திரெடிங்’ செய்து பாருங்கள். ஒரு நல்ல ஃபேஷியல் அல்லது ஒரு ஆயில் மசாஜ் அல்லது பெடிக்யூர்… இவற்றில் எதையாவது முயற்சி செய்து பாருங்கள். காணாமல் போன உற்சாகம் உங்களுக்குள் வந்து ஒட்டிக்கொள்வதை உணர்வீர்கள். அழகுக்கும் தன்னம்பிக்கைக்கும் அப்படியோர் நெருங்கிய தொடர்புண்டு. அது மேக்கப்புக்கும் பொருந்தும். மேக்கப் என்பதொன்றும் பிரபலங்களுக்கும் நடிகைகளுக்குமான விஷயம் அல்ல. தன்னம்பிக்கையுடன் இருக்க நினைக்கிற எல்லோருக்கும் அது அவசியம்! ”அழகுக்கு அழகு சேர்க்க மட்டுமின்றி, அழகாக இல்லை என தன்னம்பிக்கை இல்லாமல் தவிப்பவர்களுக்கும் மேக்கப் அவசியம்” என்கிறார் ‘நேச்சுரல்ஸ்’ வீணா.

குறைகளை மறைக்கிற கேமஃப்ளாஜ்

 

மேக்கப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ”சில பெண்கள் ரொம்ப அழகா இருப்பாங்க. ஆனா, அவங்க முகத்துல திருஷ்டி மாதிரி ஒரு பெரிய தழும்போ, வடுவோ இருக்கும். அதனாலயே அழகுபடுத்திக்கிறதைத் தவிர்ப்பாங்க. இன்னும் சிலர், சினிமா, மீடியா மாதிரியான துறைகள்ல இருக்கிறதாலயே தன்னை அழகா காட்டிக்க வேண்டிய கட்டாயத்துல இருப்பாங்க. அவங்களும் முகத்துல உள்ள சின்னச் சின்ன குறைகளை மறைக்கத் தெரியாம தவிப்பாங்க. எத்தனையோ நடிகைகளும் பிரபலங்களும் ஸ்கிரீன்லயும் போட்டோஸ்லயும் பார்க்கிறப்ப தேவதை மாதிரி இருக்கிறதையும், நேர்ல பார்க்கிறப்ப ரொம்ப சுமாரா இருக்கிறதையும் பார்க்கறோம். அந்த சுமாரான தோற்றத்தை நீங்க கொண்டாடற அளவுக்கு சூப்பரா மாத்தறதுதான் மேக்கப்! மேக்கப்னதும், ஃபவுண்டேஷன் தடவி, பவுடர் போட்டு, ஐ லைனர், ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் போடற விஷயமில்லை. குறைகளை மறைக்கிற இந்த ஸ்பெஷல் மேக்கப்புக்கு ‘கேமஃப்ளாஜ் மேக்கப்’னே பேர். சாதாரண மேக்கப்ல முதல்ல முகத்துக்கு ஃபவுண்டேஷன் தடவுவோம். நம்ம ஸ்கின் கலரை விட ஒரு ஷேடு அதிகமாகவோ, குறைவாகவோ தேர்ந்தெடுத்து, நாம விரும்பற கலருக்கு கொண்டு வரலாம். ஆனா, கேமஃப்ளாஜ் மேக்கப்ல ஸ்கின் கலர்லயே ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுக்கணும். அப்பதான் சருமத்துல ஏற்கனவே உள்ள குறைகளை மறைக்கும் போது மேக்கப் ஒரே சீரா தெரியும். கேமஃப்ளாஜ் மேக்கப்பை ரெண்டு விதமா பண்ணலாம். முகம் முழுக்கவே வடுக்களும் கரும்புள்ளிகளுமா இருக்கு, அதை முழுக்க மறைக்கணும்னா, ஃபவுண்டேஷனுக்கு பதிலா, கன்சீலர் உபயோகிக்கலாம். இது வழக்கமான மேக்கப்புக்கு பயன்படுத்தற கன்சீலர் மாதிரியில்லாம, கொஞ்சம் ‘திக்’கா இருக்க வேண்டியது அவசியம். இதையே முகம் முழுக்க தடவிட்டு, அதுக்கு மேல பவுடர் போடலாம். அல்லது…’சருமத்துல சில இடங்கள்லதான் குறைகள் இருக்கு… அதை மட்டும் மறைச்சா போதும்’னு நினைக்கிறவங்க, குறைகள் உள்ள இடங்கள்ல மட்டும் கன்சீலரை தடவிட்டு, மத்த பகுதிகளுக்கு ஃபவுண்டேஷன் உபயோகிக்கலாம். ஃபவுண்டேஷன்ல லிக்யுட், கிரீம்னு ரெண்டு வகை இருக்கு. கேமஃப்ளாஜ் மேக்கப் பண்றதுக்கான ஃபவுண்டேஷன் தண்ணீர் மாதிரியும் இருக்கக் கூடாது, கிரீம் மாதிரியும் இருக்கக் கூடாது. தண்ணீர் – எண்ணெய் – வெண்ணெய் – இந்த மூணுக்கும் இடைப்பட்ட பதத்துல உள்ளதா தேர்ந்தெடுக்கணும். கேமஃப்ளாஜ் மேக்கப்ல ஃபவுண்டேஷன் அல்லது கன்சீலர் தடவறதும், அதுக்கு மேல பவுடர் தடவறதும்தான் முக்கியமான கட்டங்கள். ரொம்பப் பொறுமையா தட்டித் தட்டித் தடவி, குறைகள் மறையற அளவுக்குக் கொண்டு வரணும். மத்த மேக்கப்புக்கு உபயோகிக்கிற காம்பேக்ட் பவுடரையோ, டிரான்ஸ்லுசென்ட் பவுடரையோ இதுக்கு உபயோகிக்க முடியாது. டெர்மா பவுடர்தான் பொருத்தமானது. இந்த ரெண்டு கட்டங்களும் முடிஞ்சதுன்னா, கண்களுக்கும் உதட்டுக்குமான மேக்கப்பை வழக்கம் போல செய்ய வேண்டியதுதான்” என்கிறார் வீணா.

டிப்ஸ்… டிப்ஸ்…

மற்ற மேக்கப்புகள் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும். கேமஃப்ளாஜ் மேக்கப் பல மணி நேரத்துக்கு அப்படியே இருக்கும். சருமத்தில் குறைகள் உள்ளவர்கள், தினமுமே கூட இந்த மேக்கப்பை செய்து கொள்ளலாம். பக்க விளைவுகளோ, பாதிப்புகளோ இருக்காது. பொதுவாக கன்சீலர் சின்ன டப்பாவில்தான் கிடைக்கும். அதை எப்படி தினசரி மேக்கப்புக்கு உபயோகிப்பது என்கிற குழப்பம் பலருக்கும் இருக்கும். கேமஃப்ளாஜ் மேக்கப் செய்வதற்கென்றே, பெரிய டப்பாக்களில் கன்சீலர் கிடைக்கிறது. அதை வாங்கி உபயோகிக்கலாம். கேமஃப்ளாஜ் மேக்கப்பில் வடுக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள், பிறப்பிலிருந்தே தென்படுகிற சின்னச் சின்ன வடுக்கள், பெரிதாகிப் போன சருமத் துவாரங்கள் போன்றவற்றை மட்டுமின்றி, வெண் குஷ்டத்தைக் கூட மறைக்க முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button