ஆரோக்கியம் குறிப்புகள்

உடல் எடை கூட… உணவோடு வெண்ணெய்!

வெண்ணெய் என்றதுமே, வெண்ணெயைத் திருடித் தின்னும் கண்ணனின் ஞாபகம்தான் கண்முன் தோன்றும். கறந்த பாலை காய்ச்சி, உறையவைத்து எடுத்து, அதில் கடைந்த வெண்ணெயை குழந்தைகளின் கை நிறைய அப்பிய காலம் மலையேறிவிட்டது. இன்றோ, எப்போதும் சாக்லேட் பார்களையும், சிப்ஸ் வகைகளையும் கையில் வைத்து சுழலும் சுட்டீஸ்களைத்தான் அதிகம் பார்க்க முடிகிறது. வளர்ந்துவிட்ட ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்தில் பல பாரம்பரிய உணவு முறைகளைத் தொலைத்து விட்டோம்.
வெண்ணெயில் உள்ள சத்துக்கள் குறித்தும் அதன் நன்மை, தீமைகள் குறித்தும் டயட்டீஷியன் மற்றும் பால் ஆலோசகர் மயூரியிடம் கேட்டோம். ‘வெண்ணெயில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?’ ‘கொழுப்புச் சத்து மட்டும்தான் அதிகம் உள்ளது. தவிர, ‘வைட்டமின் ஏ’ உள்ளது. இது கண்ணுக்கு மிகவும் நல்லது. புரதம், கார்போஹைட்ரேட், மாவுச் சத்து போன்ற வேறு எந்தச் சத்துகளும் இதில் இல்லை.’ ‘குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா? எப்போது கொடுக்கலாம்?’ ‘வளரும் குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம். குறிப்பிட்ட வயதில் சரியான எடை இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு வெண்ணெயை உணவுடன் சேர்த்துக் கொடுத்தால், உடல் புஷ்டியாகும். அதாவது, நான்கு வயதில் ஒரு குழந்தை 18 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் சில குழந்தைகளுக்கு வயது கூடக்கூட எடை குறையும். இதுபோன்ற நேரத்தில் அந்தக் குழந்தைகளுக்கு வெண்ணெயைக் கொடுக்கலாம். பொதுவாகக் காலை நேரங்களில் சாப்பிடலாம். மாலை, இரவு வேளைகளில் சிறிதளவு கொடுக்கலாம்.’ ‘யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்?’ ‘விளையாட்டு வீரர்கள், உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் வெண்ணெயை உணவுடன் அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம். காசநோய் உள்ளவர்களுக்கும் நல்லது. இது அதிக நேரத்துக்கு உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். உடல் எடை குறைவான டீன் ஏஜ் இளைஞர்களும் ஓரளவுக்கு வெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது.’ ‘யாரெல்லாம் தவிர்க்கலாம்?’ ’40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயநோய், உடல் பருமன் இல்லாமல் இருந்தால் ஓரளவு எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்கள், வெண்ணெய் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.  வெண்ணெயில் உள்ள கலோரிகள் எளிதில் கரையாது. மேலும் சர்க்கரை நோயாளிகள், இதயம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வெண்ணெயை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடலில் கொழுப்பின் அளவும், சக்தியை அதிகரிக்கச் செய்யும். உடல் எடை அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு வெண்ணெய் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள கொழுப்புச் சத்து மேலும் எடையைக் கூட்டிவிடும்.’ ‘வெண்ணெய் நல்லதா? அல்லது வெண்ணெயை உருக்கி வரும் நெய் நல்லதா?’ ‘வெண்ணெயைக் காட்டிலும் நெய் மிகவும் நல்லது. சின்னக் குழந்தைகளுக்கு வெண்ணெயை வாரத்துக்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வரையிலும், தினமும் ஐந்து முதல் பத்து கிராம் வரை சேர்த்துக்கொடுக்கலாம்.  வளரும் குழந்தைகள் தினமும் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்க்கலாம். சூடான சிற்றுண்டிகளில் நெய் பயன்படுத்தினால், வாசனை ஊரைத் தூக்கும், சாப்பிடவும் தூண்டும். உடல் வெப்பத்தைக் குறைக்கும்.’

p62a

‘எந்த வகை உணவுப் பொருட்களில் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது?’ ‘பெரும்பாலும் வெண்ணெயை பிரெட் மீது தடவியே பயன்படுத்துவோம். இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி நமக்கே சில வேளைகளில் சலிப்பைத் தரும். எனவே, சர்க்கரை பொங்கல், சப்பாத்தி, உப்புமா போன்றவற்றுடன் சிறிதளவு சேர்ப்பது சுவையைக் கூட்டும். சூடான சாம்பாரில் சேர்த்து சாப்பிடலாம். தோசை சுடும்போது வெண்ணெய் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.’ ‘வெண்ணெய் அதிகம் சேர்த்தால் என்ன பாதிப்பு ஏற்படும்?’ ‘பசி எடுக்கும் தன்மையைக் குறைத்துவிடும். அதிகமாக வெண்ணெய் பயன்படுத்துவதால் இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை தொடர்வது மட்டுமின்றி, உடல் பருமன் கூடி, குண்டான உடல் தோற்றத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.ஆகவே, கவனம் தேவை!’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button