மருத்துவ குறிப்பு

குடும்ப வாழ்க்கையில் வருத்தம் நீங்க: வசந்தம் வீச….

‘உன்னை திருமணம் செய்துகொண்டதால் என் வாழ்க்கையே பாழாகிவிட்டது’ என்ற எண்ணம் உங்களுக்கு வந்ததுண்டா?

உங்கள் ஜோடி அழகானவர் இல்லை, பொருத்தமானவர் இல்லை, நாகரிகமாக பழகத் தெரியாதவர் என நினைக்கிறீர்களா?

ஜோடியாக வெளியே செல்ல தயங்குகிறீர்களா, அமைதியாக குடும்பம் நடத்த முடியாமல் அவதிப்படுகிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் ‘ஆம்’ என்றால், இது உங்களுக்கான சங்கதிதான்…

பொருத்தம் நிறைய பொருந்த திருமணம் செய்த ஜோடிகள் கூட, பொருந்தா வாழ்க்கை அமைந்ததாக நீதிமன்ற படியேறுவதை பார்க்கிறோம்.

பொருந்தா ஜோடி அமைந்துவிட்டதாக பொருமிக் கொண்டு வாழும் கணவன், மனைவிகளையும் காணலாம்.

எல்லாவற்றுக்கும் காரணம் பொருத்தம் சரியில்லை என்பதல்ல, அன்பும், அரவணைப்பும் இல்லையென்பதே உண்மை.

வாழ்வில் இன்பம் எப்போதும் இருப்பதில்லை. துன்பங்கள் மட்டும் தொடர்கதையும் இல்லை. அன்பு செலுத்த ஒரு துணையிருந்தால் துன்பம் பெரிதில்லை. அரவணைக்க ஒருவர் இருந்தால், வாழ்க்கையில் பரிதவிப்பு ஏதுமில்லை.

எல்லோருக்கும் சரி நிகராக வாழ்க்கைத் துணை அமைவதில்லை.

என்ஜினீயர் மாப்பிள்ளைக்கு, என்ஜினீயரிங் படித்த பெண்ணைப் பார்க்கலாம். மருத்துவம் படித்தவருக்கு, அதே துறையை சேர்ந்தவரையே ஜோடி சேர்க்கலாம். அப்படி சேர்ப்பதால் மட்டும் வாழ்க்கை சரியாக அமைந்துவிடாது. படிப்பு பொருத்தமோ, சம்பளப் பொருத்தமோ, உயரப் பொருத்தமோ, நிறப் பொருத்தமோ வாழ்க்கையை வசந்தமாக்குவதில்லை. மனப் பொருத்தமும், இருவரிடையே ஏற்படும் இணக்கத்தால் இழைந்தோடும் அன்புமே அவர்கள் வாழ்வில் வளம் சேர்க்கும்.

கல்விப் பொருத்தத்தால் சேர்ந்தவர்களுக்குள், சம்பள ஏற்ற இறக்கம் பிரச்சினையை உருவாக்கலாம். அழகே துணையாக அமைந்தவர்களுக்கு அழகே நிம்மதியை கெடுக்கும் சூழலும் ஏற்படலாம். ஆக, பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் அழகோ, பணமோ, பொருத்தமோ அல்ல. அன்பின்மை, அரவணைப்பு இல்லாமை, விட்டுக் கொடுக்க முடியாமை இவையே காரணம்.

அழகில்லை என்பவர்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள ஆயிரம் வழிகள் இருக்கிறது. வீதி தோறும் அழகு நிலையங்கள் இருக்கின்றன.

மனைவி பொருத்தமாக இல்லை, வெளியே அழைத்துச் சென்றால் நாகரிகமாக நடந்து கொள்ளத் தெரியாதவள் என நினைப்பவர்களுக்கு எங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, மற்றவர் மத்தியில் எப்படி பேச வேண்டும்?, கலந்துரையாட வேண்டும்? என்பதையெல்லாம் கற்றுத் தரும் பயிற்சி மையங்கள் இருக்கிறது.

ஆனால் இதையெல்லாம் சொல்லித்தர, தன் வாழ்க்கைத் துணையை தங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ள உங்களுக்கு கொஞ்சம் மனப்பக்குவம்தான் வேண்டும்.

குற்றம் குறைகளை அரவணைத்து அன்பு செலுத்தும் கனிவான மனம்தான் வேண்டும். அதை அவ்வளவு எளிதில் மற்றவர்களால் கற்றுத் தர முடியாது. அதற்கு வாழ்க்கையே வழி சொல்லும்.

ஆணுக்கு, மனைவி கொஞ்சம் அழகில்லாதவளாக அமைந்துவிட்டாலோ, பெண்ணுக்கு கணவன் உருவத்தில் கொஞ்சம்

கோணலானவனாக இருந்தாலோ, ஊதியம் குறைவாக வாங்கினாலோ அதைவிட பெரிய வாழ்க்கைப் போராட்டமே இல்லை. படிக்காத ஒரு கிராமத்துப் பெண், படித்த ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்.

இப்படி பொருத்தமில்லாத ஜோடிகளாக வாழ்பவர்களால் தங்களுக்குள் வலுக்கட்டாயமாக அன்பை வரவழைத்துக் கொள்ள முடியாது.

அவர்கள் மன உளைச்சலுடனேயே வாழ்கிறார்கள். இன்னதென்று புரியாத ஒரு கோபம், வெறுப்பு எப்போதும் அவர்களை வாட்டிக் கொண்டிருக்கிறது. இவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை வெறுப்பதோடு, தங்களை ஜோடி சேர்த்த பெற்றோர்கள், உறவுகளையெல்லாம் வெறுக்கவும், பகைக்கவும் செய்கிறார்கள்.

இந்த பொருத்தம், அழகு என்ற மயக்கத்திலிருந்து வெளிவர சிலருக்கு சிறிது காலம் பிடிக்கும்.

பலருக்கு இழப்புகளே பாடமாகி உணர்த்தும்.

அழகு என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொருத்தது. காதலிக்கும் போது அவர்களுக்குள் எந்த ஏற்றத் தாழ்வும் தெரிவதில்லை.

காரணம் அன்பு. அதே அன்பு திருமண வாழ்விலும் மலர வேண்டும் என்பதுதானே நியாயம். எனவே வாழ்க்கைத் துணையிடம் அன்பு செலுத்த தெரிந்தவர்களுக்கு அழகு ஒரு தடையாக அமைவதில்லை.

ஜோடிப் பொருத்தம் இல்லைஎன்பது மற்றவர்கள் கண்களுக்கு குறையாகத் தெரியலாம்.

ஆனால் உண்மையான அன்போடு இருக்கும் உங்களைப் பார்க்கும்போது மற்றவர் கண்ணுக்கும் அந்தக் குறை தெரியாமல் போய்விடும். நீங்கள் அன்னியோன்யமான ஜோடி என்று அவர்களே புகழத் தொடங்கிவிடுவார்கள்.

‘உன்னை திருமணம் செய்துகொண்டு என் வாழ்க்கையே பாழாகிவிட்டது’ என்று சொல்லும் நேரம், நாம் அடுத்தவர் வாழ்க்கையை பாழாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிஜம்.

பொருத்தமில்லாத ஜோடியை சேர்த்து வைத்து அவர்கள் கொந்தளிப்பதை பார்த்து மகிழ வேண்டும் என்ற கொடூர எண்ணம் எந்த பெற்றோருக்கும் கிடையாது.

எனவே பெற்றோரையோ, உறவினரையோ குறைபட்டுக் கொள்வதிலும் நியாயமில்லை. யாரையோ பழிவாங்குவதாக நினைத்து சொந்த வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி கொள்வது முட்டாள்தனம். ஏனெனில் மாற்றம் உங்கள் மனதுக்குள் நிகழ வேண்டும். அன்பு உங்கள் அரவணைப்பில் வழிந்தோட வேண்டும்.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அன்பிற்கு முதலிடம் கொடுத்து மற்ற விஷயங்களை பின்னுக்கு தள்ள வேண்டும்.

அப்போதுதான் வாழ்க்கை முன்னுக்கு வரும். அன்பாய் பார்த்துக் கொண்டவரை இழந்து, நிர்க்கதியாய் நிற்கும் நிலையில்தான் பலர் அன்பின் அருமையை உணர்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலை உங்கள் வாழ்விலும் வர வேண்டாம். அன்பை உங்களுக்குள் மலரச் செய்யுங்கள். வாழ்வை மறுமலர்ச்சி அடைய செய்திடுங்கள்!
1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button