உங்களுக்கு அதிகமா வியர்வை வெளியேற காரணம் என்னவென்று தெரியுமா????

வியர்வை வெளிப்படுவது என்பது ஒவ்வொருவருக்கும் நடக்கும் ஒரு சாதரண நிகழ்வு தான். இந்த வியர்வை ஒவ்வொருவருக்கும் அவர்களின் தோலிலுள்ள வியர்வைச் சுரப்பிகள் இயல்பாக சுரந்து, வியர்வை திரவத்தை கசியவைத்து வெளியேற்றுகின்றன.

ஒருசிலரின் தோல் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் அமைவதற்கும் இதுவே காரணம். கோடை காலங்களில் அல்லது உடலின் வெப்பம் அதிகரிக்கும் நிலையில் வியர்வைச் சுரப்பிகளால் சுரக்கப்படும் வியர்வை காரணமாகவே உடல் இதமாகப் பாதுகாக்கப்படுகிறது. தோலிலிருந்து வியர்வை ஆவியாகி மறையும் போது உடலில் குளிர்ச்சியை உணர முடிகிறது. இது ஒரு இயல்பான தினசரி செயல்பாடு தான்…

ஆனால் ஒரு சிலருக்கு உடலில் அதிகப்படியான வியர்வை வெளியேறும். இதற்கான காரணங்கள் என்ன? இவ்வாறு அதிகமான வியர்வை வெளியேறுவது ஆபத்தான ஒன்றா? இதற்கு ஏதேனும் சிகிச்சை எடுக்க வேண்டியது இருக்குமா என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

என்ன காரணம்?

சிலருக்கு மற்றவர்களை விட அதிகப்படியான வியர்வை வெளியேற உடல் வெப்பநிலை அதிகரிப்பும் ஓர் காரணம். எனினும், உடலின் சில பாகங்களில் குறிப்பாக அக்குள், அடிப்பாதங்கள், உள்ளங்கை மற்றும் நெற்றியில் வியர்வை சுரப்பிகள் அதிகம் உள்ள காரணத்தால் இங்கு அதிகமாக வியர்வை சுரக்கிறது.

மத்திய நரம்புத் தொகுதியின் அதீதச் செயல்பாடு காரணமாக கை, கால் போன்ற பகுதிகளில் அதிகளவு வியர்வையை சுரக்கிறது. பெண்களை விட ஆண்களுக்கே அதிக வியர்வை சுரப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வேறு சில காரணங்கள்

அதே சமயத்தில் ஒவ்வாமை உள்ளிட்ட சில தூண்டல்களால் கூட உடலில் அதிவியர்வை ஏற்படலாம். வெப்பம், வலி, பயம், பதற்றம், உடல் உழைப்பு, குமட்டல், வாந்தி போன்ற காரணங்களால் வியர்வை அதிகரிக்கலாம்.

உழைப்பே இல்லாதவர்களைவிட உழைப்பவருக்கும், நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவருக்கும் இரண்டு மடங்கு வியர்வை வெளியேறுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு நாளும் 5 லீட்டர் அளவுக்கு வியர்வை வெளியேறுகிறது.

ஆய்வு

இந்நிலையில் பலருக்கு எதிர்பாராத தருணங்களிலும் அல்லது எப்போதும் அதிகளவு வியர்த்தல் காரணமாக உடலிலும் மனத்திலும் விவரிக்க இயலாத அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. உலக மக்கள் தொகையில் மூன்று சதவீதமானவர்களுக்கு அதிவியர்வை (Hyperhidrosis) பிரச்னை உள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றன.

என்ன செய்யலாம்?

இயல்பான வியர்வையோ, அதிக வியர்வையோ அது வெளியேறும் சமயத்தில் மணம் எதுவும் இருப்பதில்லை. ரத்தத்திலுள்ள வெளியேற்றப்பட வேண்டிய பொட்டாசியமும், உப்பும், நுண்கிருமிகளுடன் கூட்டணி ஏற்படுத்திய பின்னரே துர்நாற்றம் உண்டாகிறது.

வியர்வையை குளிப்பதன் மூலம், கை கால்களை கழுவுவதன் மூலம் முறையாக அகற்றவேண்டும். இதற்காகவே இருக்கும் சில பிரத்யேக சிகிச்சைகள் மூலம் இதற்கு தீர்வு காணலாம்.

சிகிச்சை

ஒரு சிலருக்கு மட்டும் என்னதான் இத்தகைய நிவாரணங்களை மேற்கொண்டாலும் கை, முழங்கை, முழங்கால், நெற்றி உள்ளிட்ட பல பகுதிகளில் வியர்வை வந்துகொண்டேயிருக்கும். அதிலும் அக்குள் பகுதிகளில் கட்டுப்படுத்த இயலாத துர்நாற்றத்துடன் கூடிய வியர்வை வந்துக்கொண்டேயிருந்தால் இவர்களுக்கு சிறிய அளவிலான சிகிச்சையின் மூலமாகவே அதனை குணப்படுத்தலாம்.

இரவில் ஏன் வியர்வை?

பகலில் வெயிலின் காரணமாக வியர்வை உண்டாகும். ஆனால் ஒரு சிலருக்கு இரவு நேரத்தில் அதிகமான வியர்வை வெளிப்படும். இதற்கு காற்றோட்டம் இல்லாத சூழல், சமையல் அறை வெப்பம், இறுக்கமான ஆடைகள் போன்றவை கூட காரணமாக இருக்கலாம். ஆனால் எந்தவித காரணமும் இன்றி வியர்வை வருகிறது என்றால் உடனே மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.

மெனோபாஸ்

பெண்களின் சிலருக்கு மெனோபாஸ் காரணமாக உடல் அதிகமாக சூடாவதை போல தெரிந்தால், அவர்களுக்கு இரவு நேரங்களில் அதிகமாக வியர்வை வெளிப்படும்.

தொற்றுகள்

ஹெச். ஐ.வி தொற்றுகள், டிபி தொற்றுகள் இது போன்ற தொற்றுகளின் பாதிப்புகள் அதிகமாக இருந்தால் கூட இரவு நேரங்களில் அதிகமாக வியர்க்கும். இதனால் இதய வால்வுகள் மற்றும் எலும்புகளில் வீக்கம் உண்டாகும்.

மருந்துகள்

காய்ச்சல் மற்றும் அதிகமான மன அழுத்தத்தை குறைப்பதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் காரணமாகவும் கூட இரவில் அதிகமாக வியர்க்கும் நிலை உண்டாகிறது.

நரம்பு மண்டல பிரச்சனை

பக்கவாதம், நரம்பு மண்டலம் தொடர்பான நோய்கள் இருப்பவர்களுக்கு கூட இரவில் அதிகமான வியர்வை வெளிப்படும். எனவே இது போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply