தலைமுடி சிகிச்சை

இதோ எளிய நிவாரணம்! தலையில் ஏற்படும் பருக்களை போக்குவதற்கான எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்!

மழைக்காலம் ஆரம்பிக்க தொடங்கிவிட்டதால், சரும பிரச்சனை முதல் கூந்தல் பிரச்சனை வரை அனைத்தும் ஆரம்பிக்கத் தொடங்கி விடும். சருமத்தில் ஏற்படக்கூடிய பருக்களை கூட எதாவது செய்து சமாளித்து விடலாம். ஆனால், தலையில் ஏற்படக்கூடிய பருக்கள் வலி நிறைந்ததாக இருக்கக்கூடும் என்பதால் அதனை பொறுத்துக் கொள்வது சற்று கடினம் தான். தலையில் இருக்கும் பருக்களை கையாளுவதில் சற்று கவனம் தேவை என்பதால் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும்.

வெப்பநிலை மற்றும் வியர்வை ஆகியவை தலை முடியை எண்ணெய் பசை நிறைந்ததாக, பிசுபிசுப்பாக மாற்றிவிடும். அவை சரும துளைகளில் அடைப்பை ஏற்படுத்தக்கூடும். தலையில் சேரும் தூசுக்கள் மற்றும் மாசுக்கள் அடைப்பட்ட துளைகளை தூண்டச்செய்து எரிச்சல் மற்றும் பருக்களை ஏற்படுத்திவிடும். அத்தகைய பருக்கள் வலி நிறைந்ததாகவும், அரிப்பு ஏற்படுத்தக்கூடியதாகவும் இருப்பதே பெரும் பிரச்சனை ஆகும்.

தலையில் வரும் பருக்களுக்கான காரணங்கள்

தலை சருமத்தில் பருக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. இறந்த சரும செல்கள், எண்ணெய் பசை போன்றவை தவிர வேறு பல காரணங்கள் ஸ்கால்ப் பருக்களை உண்டாக்கக்கூடும். இயற்கை காரணங்கள் தவிர, பருக்கள் ஏற்பட அழகு பராமரிப்பு பொருட்களில் உள்ள கெமிக்கல்களும் காரணமாகும். விலையுயர்ந்த ஹேர் கேர் பொருட்களை பயன்படுத்தினால் எவ்வித கூந்தல் பிரச்சனையும் ஏற்படாது என்பதே பெரும்பாலோரின் நினைப்பு. ஆனால், அது உண்மை கிடையாது. அதற்கு நேர்மாறாக, சரும செல்களை பாதித்து, ஸ்கால்ப்பில் வீக்கத்தை ஏற்படுத்தி மோசமான விளைவுகளை தான் அவை ஏற்படுத்தும்.

ஸ்கால்ப் பருக்களால் அவதிப்படுபவரா நீங்கள்? அப்படியெனில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை முயற்சித்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்…

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் அதிகப்படியான அழற்சி எதிர்ப்பு பண்புகளும், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. ஸ்கால்ப் பருக்களை போக்குவதில் தேங்காய் எண்ணெய் நன்கு செயல்படக்கூடியது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், தலையின் ஸ்கால்ப் பகுதியில் தேங்காய் எண்ணெயை நன்கு தேய்த்து ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிடவும். பின்னர், மிதமான ஷாம்பு கொண்டு தலையை அலசிடவும். இப்படி வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை நீங்களே உணரலாம்.

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ எண்ணெயிலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் நுண்ணுயிர் எதர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. அது ஸ்கால்ப் பருக்களை முற்றிலுமாக நீக்கி சுத்தப்படுத்திடும். இதன் முழு பலனும் கிடைக்க வேண்டுமெனில், முதலில் தலையை ஷாம்பு போட்டு அலசிக் கொள்ளவும். பின்னர், 6 முதல் 7 சொட்டுகள் டீ ட்ரீ ஆயிலை நீங்கள் உபயோகிக்கும் கண்டிஷ்னரில் கலந்து கொண்டு, ஸ்கால்ப் மற்றும் கூந்தல் முழுவதும் நன்கு தடவி, அலசிடவும். வாரத்திற்கு 3 முறையாவது இதனை தொடர்ந்து செய்து வந்தால் ஸ்கால்ப் பரு என்ற பிரச்சனைக்கே இடமிருக்காது.

ஜொஜோபா எண்ணெய்

வைட்டமின் சி, ஆன்டி பாக்டீரியல் பண்புகள் மற்றும் காமெடோஜெனிக் அல்லாதவை தான் இந்த ஜொஜோபா எண்ணெய். இது கூந்தலில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கி, ஸ்கால்ப்களில் உள்ள அடைப்புகளை நீக்கிட உதவும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நீங்கள் உபயோகிக்கும் ஷாம்புவில் சில துளிகள் ஜொஜோபா எண்ணெய் சேர்த்து கலந்து, அதனை பயன்படுத்தி கூந்தலை அலசவும். இப்படி செய்வதால் தலை சிவத்தல் குறைந்து, ஸ்கால்ப் பருக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்திடும்.

கற்றாழை

அனைத்து வகையான பரு பிரச்சனைகளுக்கும் சிறந்தது என்றால் கற்றாழையை கூறலாம். ஸ்கால்ப் பரு பிரச்சனைக்கு கூட கற்றாழை அற்புதங்களை செய்திடும். கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் குணப்படுத்தும் பண்புகள் உங்கள் சருமத்தை வீக்கம் மற்றும் எரிச்சலில் இருந்து விடுபட உதவிடும். கற்றாழை ஜெல்லை எடுத்து, ஸ்கால்ப்பில் தடவி அரை மணி நேரத்திற்கு ஊற விடவும். பின்னர், குளிர்ந்த நீரினால் தலையை அலசிடவும். வாரத்திற்கு 2 முறை இப்படி செய்ய ஸ்கால்ப் பிரச்சனையை அடியோடு விரட்டிடலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button