ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…திங்கட்கிழமை ஆபிஸ் வந்தாலே தூக்கம் சொக்குதா? அதை போக்க சில சிம்பிளாக வழிகள்!

உங்களுக்கு இரவில் போதுமான உறக்கம் கிடைக்காமல் போகிறதா? குறிப்பாக விடுமுறை நாட்களை விட, திங்கட்கிழமைகளில் அலுவலகத்திற்கு கிளம்பும் போது தான் தூக்கம் நன்றாக வருகிறதா? அப்படியெனில் நீங்கள் தூங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் போதும், உடல் களைப்புடன் இருக்கும் போதும், அதனை தவிர்த்து எவ்வாறு விழித்திருப்பது என்று உங்களுக்கு கற்று தரும் குறிப்புகளை நீங்கள் நிச்சயம் அறிந்து கொள்ள விரும்புவீர்கள்.

நமது உடல் உறக்கத்திற்காக ஏங்கும் போது, நாம் வலுகட்டாயமாக விழித்திருப்பது என்பது நமது உடலுக்கு தீமை விளைவிக்கும். எனினும் சில நேரங்களில் நாம் கட்டாயமாக முடித்தே தீர வேண்டிய சில பணிகள் இருக்கும் போது. நாம் கண் விழித்தே ஆக வேண்டும். நீங்கள் சோர்வாகவும், தூங்க வேண்டும் என்று உணரும் தருணங்களிலும் விழித்திருப்பது எப்படி என்று கூறும் குறிப்புகள் குறித்து காண்போம். அவை உங்களுக்கு நிச்சயம் உதவும் என்ற நம்புகிறோம்.

இயற்கையான சூரிய ஒளி

மிகவும் விரைவாக நம் மனோநிலையை தூண்டும் காரணி சூரிய ஒளியாகும். இது உடலில் வைட்டமின் டி உற்பத்தியை ஊக்குவித்து, பருவகால மனநிலை மாற்றதிலிருந்து உங்களை காக்கிறது. இயற்கையான சூரிய ஒளியானது நீங்கள் தூங்க வேண்டும் என்று சோர்வாக உணரும் போது விழித்திருக்க உதவுகிறது. எனவே காலையில் திரைசீலையை திறந்து வைத்து சூரிய ஒளியை வரவேற்போம்.

நிறைய தண்ணீர் குடியுங்கள்

உங்கள் உடலுக்கு நீரிழப்பு ஏற்படுகிறது எனில் நீங்கள் மிகவும் சோர்வாக உணர்வீர்கள். ஒவ்வொரு நாளும் நமது உடலுக்கு தேவையான நீரை அருந்துவதென்பது மிகவும் அவசியமாகும். அதிலும் நாம் விழித்திருந்தே ஆக வேண்டும் என்ற நிலையில், சோர்வாக உணரும் போது சற்று அதிகமான அளவு நீரை அருந்துவது சிறந்ததாகும். வெயில் அதிகமாக உள்ள கோடை நாளில் குளிர்ச்சியான நீரை அருந்துவது உங்களை புத்துணர்வாக வைப்பதோடு, நீங்கள் களைப்பாக உணரும் போது உங்களை விழிப்புடன் வைத்திருக்கவும் உதவுகிறது.

சிறந்த உணவுகளை உண்ணுங்கள்

நீங்கள் தூங்க வேண்டும் என்று உணரும் போது உங்கள் உணவுத்திட்டத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். காலை உணவை தவிர்க்காதீர்கள். மேலும் உங்கள் மதிய உணவில் கொழுப்புகள் நிறைந்த உணவுகள் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள். அந்த நாள் முழுவதும் புரதம் நிறைந்த சிறு உணவு வகைகளை எடுத்து கொள்ளுங்கள். காபி மற்றும் ஆற்றல் தரும் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்

தொடர்ந்து அமர்ந்த நிலையிலேயே இருப்பது நீங்கள் விழிப்புடன் இருக்க உதவாது. நீங்கள் எண்ணற்ற பணிகளை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற சூழ்நிலையில், தூங்க வேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால் வேலைகள் இருந்த போதிலும் சிறிது தூரம் நடந்து சென்று வந்து உங்கள் பணிகளை தொடருங்கள். நீங்கள் களைப்பாகவும், தூங்க வேண்டும் என்று உணரும் போதும் உங்கள் சோர்வை விரட்ட இது சிறப்பான பயனளிக்ககூடிய வழியாகும். நீங்கள் மேற்கொண்டிருக்கும் பணி சூழல் உங்களை சற்று தூரமாக சென்று நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கவில்லையெனில், எழுந்து சென்று சிறிது நீர் அருந்தி விட்டு உடன் பணிபுரியும் நண்பரின் மேசை வரைக்கும் நடந்து சென்று வரலாம்.

ஆழ்ந்த சுவாசத்தை மேற்கொள்ளுங்கள்

சிறந்த மூச்சு பயிற்சியும் நீங்கள் விழிப்புட இருக்க உதவும். உங்கள் வயிற்றை உதரவிதானம் நோக்கி இழுத்து கொண்டு உங்கள் நாசி வழியாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். இதனை விரைவாக செய்ய முயற்சி செய்வதன் மூலம், நீங்கள் அதிக விழிப்புடன் இருக்க முடியும். இந்த பயிற்சியை மதிய உணவு இடைவேளையில் கூட நீங்கள் செய்யலாம்.

உற்சாகமான இசையை கேளுங்கள்

உற்சாகமான இசையை கேட்டு கொண்டே உங்கள் கால்கள் தாளமிடும் போது, நீங்கள் எந்த நேரத்திலும் விழிப்புடன் இருக்க முடியும். உங்களை தூங்க செய்யக்கூடிய கிளாசிக்கல் போன்ற அமைதியான இசையை கேட்பதை தவிர்த்து விடுங்கள்.

30 நிமிடங்களுக்கு ஒருமுறையாவது சுறுசுறுப்புடன் செயல்படுங்கள்

நாள் முழுவதும் கம்ப்யூட்டர் அல்லது டிவி முன்னிலையிலேயே பொழுதை கழிப்பது உங்களை சோர்வுடனும், தூங்க வேண்டும் என்ற உணர்வை தருவதாகவே அமையும். விழித்திருக்க வேண்டும் என்று விரும்பும் போது உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும். நாள் முழுவதும் விழிப்புடன் உணரும் பொருட்டு, ஒவ்வொரு 3௦ நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து நடந்து, உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருங்கள்.

புத்துணர்வான காற்று

நீங்கள் தூங்க வேண்டும் என்று உணரும் போது புதிய காற்றை சுவாசிப்பது நிச்சயம் உங்களை விழிப்புடன் வைத்திருக்க உதவும். நீங்கள் பணியிலிருக்கும் போது ஜன்னல்களை திறந்து வைப்பதன் மூலமும், மதிய உணவு இடைவேளையில் வெளியே சென்று வருவதன் மூலமும் புத்துணர்வான காற்று தரும் பலனை அனுபவிக்கலாம். நீங்கள் காரில் இருந்தீர்களானால், கார் ஜன்னலை திறந்து வைத்து எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு புத்துணர்வான காற்றை அனுபவியுங்கள்.

குட்டி தூக்கம் போடலாம்

என்ன தான் தூக்கத்தை கட்டுப்படுத்த பல வழிகளில் இறங்கினாலும், சில சமயங்களில் எவ்வித பலனும் கிடைக்காது. எனவே முடிந்தால் 10 நிமிடம் குட்டி தூக்கம் போட்டுவிட்டு, பின் வேலையை தொடங்குங்கள். இதன் மூலம் மீண்டும் தூக்கம் வருவதைத் தடுக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button