மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பகப் புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைக்க 7 சூப்பர் வழிகள்!!!

இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளாகவே மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. 28 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. நகர்ப் புறங்களில் 22 பெண்களுக்கு ஒருவர் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், கிராமப் புறங்களில் 60 பெண்களுக்கு ஒருவரைத்தான் இது தாக்குகிறது என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய்களில் மிகவும் பொதுவானது இந்த மார்பகப் புற்றுநோய் தான் என்றும், புற்றுநோய்த் தாக்குதல்களால் இறப்பவர்களில் மார்பகப் புற்றுநோயால் இறப்பவர்கள் தான் அதிகம் என்றும் டாடா மெமோரியல் மருத்துவமனையின் வெப்சைட்டில் கூறப்பட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோய் உள்ளதா இல்லையா என்று அனைத்துப் பெண்களும் பரிசோதித்துக் கொள்வது நல்லது. இருந்தாலும், இந்த நோயை அண்டவிடாமல் தடுப்பதற்கு 7 சிறந்த வழிகள் உள்ளன. அவை குறித்து இங்கே நாம் பார்க்கலாம்.

சுறுசுறுப்பா இருக்கணும்

பெண்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் இருந்தாலே மார்பகப் புற்றுநோய் அவர்களை நெருங்காது என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். புற்றுநோய்க்குக் காரணமான கொழுப்புகளைக் கரைப்பது அவசியம். இதற்கு உடற்பயிற்சி செய்வதுதான் நல்லது. இதற்காகக் கஷ்டப்பட்டு ஜிம்முக்கெல்லாம் போக வேண்டியதில்லை. தினமும் ஒரு அரை மணி நேரம் வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாலே போதும். 20% மார்பகப் புற்றுநோய் அபாயத்திலிருந்து தப்பிக்கலாம்.

தாய்ப்பால் கொடுக்கணும்

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப் போய்விடும் என்று பெண்கள் நினைத்து, அதை நிறுத்தக் கூடாது. அப்படி நிறுத்தினால், அவர்களை மார்பகப் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். ஒரு பெண் தன் வாழ்நாளில் எவ்வளவுக்கு எவ்வளவு தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கிறாளோ, அந்த அளவு இந்தக் கொடிய நோயிலிருந்து தப்பிக்கலாம் என்று உலக புற்றுநோய் ஆய்வு நிதியம் கண்டறிந்துள்ளது.

மது அருந்துவதைக் குறைக்கணும்

பெண்கள் மது அருந்தும் கலாச்சாரம் தற்போது அதிகரித்து வருகிறது. அடிக்கடி இவ்வாறு மது அருந்தும் பெண்களை மார்பகப் புற்றுநோய் தாக்கும் அபாயம் மிகவும் அதிகம். எனவே ஆல்கஹால் இல்லாத மது வகைகளைக் குடித்து, சிறிது சிறிதாக குடிப்பழக்கத்திலிருந்து மீண்டால் இதிலிருந்து தப்பிப் பிழைக்கலாம்.

நைட் ஷிஃப்ட் வேலைகளைத் தவிர்க்கவும்

ஒரு வாரத்திற்கு 3 நாள் என்ற விகிதத்தில் 6 ஆண்டுகளுக்கு நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நைட் ஷிஃப்ட்டுகளின் போது, ஆரோக்கியமில்லாத உணவுகளை சாப்பிடுவதும் சுறுசுறுப்பில்லாமல் இருப்பதுமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான ஆய்வுகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

கொலஸ்ட்ராலைக் குறைக்கணும்

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஸ்டாட்டின் வகை மருந்துகளை 10 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இன்வேஸிவ் டக்டல் கார்சினோமா என்ற மார்பகப் புற்றுநோயின் தாக்கம் 2 மடங்கு அதிகம் என்று ஒரு ஆய்வு கண்டுபிடித்தது. ஆனால் இதே மருந்தைக் குறைந்த காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தினால் மார்பகப் புற்றுநோய்க்கான காரணிகளை அழிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. டாக்டருடைய ஆலோசனையின் பேரில் ஸ்டாட்டின் மருந்தை எடுத்துக் கொள்வது நலம்.

‘குப்பை’ ரசாயனங்களைத் தவிர்க்கணும்

பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள உணவு மற்றும் குளிர்பானங்களைத் தவிர்த்தால் மார்பகப் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம். அதுப்போல், கண்ட கண்ட பிளாஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கப்படும் மைக்ரோவேவ் உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இவற்றில் கலந்திருக்கும் ரசாயனங்களின் மூலம் மார்பகப் புற்றுநோய் தூண்டப்படும் வாய்ப்புக்கள் அதிகம். அதிக வெப்பநிலையில் சமைக்கப்படும் இறைச்சிகளாலும் மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது, உஷார்!

வெயிலில் நடக்கணும்

வைட்டமின் டி மிகுந்துள்ள அதிகாலை சூரிய ஒளியில் நடப்பதால் மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. மார்புப் பகுதிகளில் உள்ள சில செல்கள், வைட்டமின் டி-யை மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்பட வைக்கின்றன. அதற்காக, அளவுக்கு அதிகமாக வெயிலில் நடந்து, தோல் புற்றுநோயை வாங்கிக் கொண்டு விடாதீர்கள்!

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button