மருத்துவ குறிப்பு

குழந்தையின் வயிற்று வலியில் கவனம் செலுத்துங்கள்

குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்து விட்டாலோ அவர்களை விடவும் பெற்றோர்கள் துடி துடித்து விடுவார்கள். குழந்தைகளால் தங்களுடைய பிரச்சினை என்னவென்று சரியாக சொல்ல முடியாது. இதனால் என்னவாக இருக்குமோ ஏதுவாக இருக்குமோ என ஒரு கணம் பயந்தே விடுவது தான் அதற்கான காரணமாக அமைந்து விடுகின்றது.

இவர்களில் சிலர் பாடசாலைக்கு கட் அடிப்பதற்காகவும் ஏனைய சில விடயங்களுக்காவும் வயிற்று வலி என பொய் சொல்வதும் உண்டு. சிலருக்கு உண்மையாகவே வலி ஏற்படுவதும் உண்டு. எது எப்படியானாலும் குழந்தைகள் வயிற்று வலி என்று சொன்னால் பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

காரணம் உங்கள் கவனயீனத்தால் அது அவர்களுக்கு சில பாரதூரமான விளைவுகளை கூட ஏற்படுத்தி விடலாம். எனவே சிறு பிள்ளைகள் வயிற்று வலி என சொல்லும் போது பெற்றோர்கள் பின்வரும் மூன்று விடயங்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

வயிற்று வலி ஏற்பட்ட குழந்தை உணவு உட்கொண்டுள்ளதா? உட்கொண்டிருந்தால் அது எங்கு சாப்பிட்டிருக்கின்றது? என்ன மாதிரியான உணவை அக்குழந்தை உட்கொண்டிருக்கின்றது என்பதை முதலில் கவனித்துப் பார்க்க வேண்டும்.

விடியற்காலையில் எழும்பும்போதே வயிற்று வலி என்று சொல்வார்களேயானால், முதலில் அவர்கள் சிறுநீர் மற்றும் மலம் கழித்துள்ளார்களா என்பதை கேட்டறிந்து கொள்வதுடன் சோதித்துப் பார்ப்பது மிகவும் நல்லது.

சில நேரங்களில் வயிற்றுப்பகுதி வழமைக்கு மாறாக வீக்கமடைந்து இருக்கின்றதா என்பதை பார்ப்பதுடன், வாந்தி வரக்கூடிய அறிகுறிகள் இருக்கின்றதா என்பதையும் கேட்டறிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் குழந்தைக்கு சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் எவ்வித தடைகளும் இன்றி வயிற்று வலி என சொல்வார்களேயானால் பெரும்பாலும் அவ்வலியால் பாரதூரமான விளைவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.

அப்படி அல்லாமல் இரண்டு நாட்களாக மலம் கழிப்பதில் பிரச்சினை, சிறுநீர் சரியாக வெளியேறாமை போன்ற சிக்கல்கள் இருந்து, வயிற்று வலி என்று சொல்வார்களேயானால் அது தொடர்பில் பெற்றோர்கள் அதிகம் அவதானத்துடன் கவனம் செலுத்த வேண்டும்.

அவ்வாறான குழந்தைகளுக்கு கைமருந்துகள் மூலமோ அல்லது ஏனைய மருத்துவங்களின் மூலமோ சிகிச்சையளிப்பதை தவிர்த்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதே சிறந்த வழிமுறையாகும்.

சிறிய வயிற்று வலிதானே என அலட்சியமாக இருந்து விட்டு அவர்களுக்கு வயிற்று வலி அதிகரித்து அவர்கள் துடிதுடித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வீர்களேயானால், வைத்தியராலும் அவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க முடியாது. பல்வேறு சிரமங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சில நேரங்களில் குழந்தைகளுக்கு அவசரமான சிகிச்சை முறைகளை செய்ய வேண்டியிருந்தாலும் கூட அதனை குறித்த தருணத்தில் செய்து கொள்ள முடியமல் போவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. காரணம் துடிதுடித்துக் கொண்டிருக்கும் அவர்களால் எதுவும் சொல்ல முடியாது, அத்துடன் வைத்தியர்களால் அவர்களை சரியாக பரிசோதித்துக் கொள்ளவே முடியாமல் இருக்கின்ற சந்தர்ப்பங்களில் எப்படி சிகிச்சை கட்டத்திற்கு செல்ல முடியும்.

எனவே நீங்கள் குழந்தைகள் வயிற்று வலி என்று சொல்லும் தருணத்தில் நாம் ஏற்கனவே சொல்லியிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி அவர்களுக்கு உருவாகியிருக்கும் வயிற்று வலியின் தன்மையை முதலில் அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் அலட்சியமாக இருக்கின்ற ஒவ்வொரு நொடியும் அவர்கள் சில வேளைகளில் பாரதூரமான பிரச்சினைகளை கூட சந்திப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள்.
crying blog 751

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button