மருத்துவ குறிப்பு

கருமுட்டையைச் சேமித்து… 8 ஆண்டுகள் கழித்து `குவா குவா’!

முன்னாள் மிஸ் இந்தியாவும் பாலிவுட் நடிகையுமான டயானா ஹைடனுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதில் சிறப்புச் செய்தி, டயானா 8 ஆண்டுகளுக்கு முன் தன் கருமுட்டையை எடுத்து மருத்துவமுறையில் பாதுகாத்து, தற்போது அதைப் பயன்படுத்தி செயற்கைக் கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றிருக்கிறார் என்பதே!

இப்போது 42 வயதாகிறது டயானாவுக்கு. பிறந்து சில நாட்களே ஆன தன் குழந்தை ஆர்யாவைக் கொஞ்சிக்கொண்டிருப்பவர், “அப்போது மாடலிங், திரைப்படம் என்று பிஸியாக இருந்ததால், திருமணம், குழந்தைகள் என்று யோசிக்க நேரமில்லாமல் இருந்தேன். என்னுடைய 32-வது வயதில் கருமுட்டையை ஃப்ரீஸ் செய்து பாதுகாக்கும் மருத்துவ அறிவியல் பற்றி அறிந்தேன். ‘நாம் ஏன் இப்படிச் செய்யக்கூடாது?’ என்று யோசித்து, குழந்தையின்மை சிகிச்சை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றேன்.

2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் இதற்காக எடுத்துக்கொண்ட சிகிச்சைகளில் என்னுடைய 16 கருமுட்டைகள் எடுத்து ஃப்ரீஸ் செய்யப்பட்டன. பிறகு, வயது ஏறினாலும் குழந்தை பற்றிய கவலையின்றி இருந்தேன். என் 40-வது வயதில், `காலின் டிக்’கை சந்தித்தேன். அவருடன் காதல்கொண்டு, இருவரும் திருமணம் செய்துகொண்டோம். ஆனால், நான் கருத்தரிக்கவில்லை. பரிசோதனையில், எனக்கு எண்டோமெட்ரியோஸிஸ் (Endometriosis) என்ற பிரச்னை இருப்பதும், இதனால் இயற்கையான முறையில் கருத்தரிப்பதில் சிக்கல் என்றும் தெரியவந்தது. அதன்பின்தான் பாதுகாத்து வைக்கப்பட்ட என் கருமுட்டைகள் மூலம், செயற்கைமுறையில் எனக்கு கருவூட்டப்பட்டது. என் குழந்தை ஆர்யா ஆரோக்கியமாக இருக்கிறாள்’ என்கிறார், அசாதாரண அம்மாவாக.

கருமுட்டையை ஃப்ரீஸ் செய்யும் மருத்துவத் தொழில்நுட்பம் பற்றிய விளக்கங்களை, ஈரோட்டைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு நிபுணர் நிர்மலா சதாசிவத்திடம் கேட்டோம்.

p20a

பொதுவாக, குழந்தையின்மைக் காக ஐ.வி.எஃப் எனப்படும் செயற்கைமுறையில் கருவூட்டும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறவர் களுக்கு, கருமுட்டையானது பெண்ணின் உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, ஆணின் விந்தணுவுடன் சேர்த்து கரு எனப்படும் எம்ப்ரியோ (Embryo) உருவாக்கப்படும். நான்கு ஐந்து நாட்கள் இன்குபேட்டரில் வைத்து வளர்க்கப்பட்டு பின்னர் ஃப்ரீஸ் செய்யப்படும். இவற்றை ஒரு சில மாதங்கள் கழித்தோ, சில ஆண்டுகள் கழித்தோ கர்ப்பப்பையில் வைத்து குழந்தைப்பேறு வாய்ப்பை உருவாக்குவோம். ஆனால், டயானாவுக்கு எம்ப்ரியோவாக உருவாக்காமல் கரு முட்டையை மட்டும் ஃப்ரீஸ் செய்து எட்டு ஆண்டுகள் கழித்து பயன்படுத்தியுள்ளனர்.

இந்த ஃப்ரீஸ் செய்யும் மருத்துவத் தொழில் நுட்பத்தில், பெண்ணின் முட்டை, சினைப்பை திசுக்கள் (Ovary tissue), ஆணின் விந்தணு, டெஸ்டிஸ் திசுக்கள் (Testis tissue), எம்ப்ரியோ ஆகியவற்றைப் பதப்படுத்தி பாதுகாக்கும் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே இருக் கிறது. நம் உடல் நீரால் ஆனது. நம் ஒவ்வொரு செல்லிலும் நீர் மூலக்கூறுகள் உள்ளன. கிரையோ (cryo) முறையில் இந்த நீர் மூலக்கூறுகளை உறையவைத்து, அவற்றைப் பாதுகாப்பதே இதில் உள்ள உயிரியல் தொழில்நுட்பம். டயானாவின் கருமுட்டை எட்டு ஆண்டுகளுக்கு முன் எடுத்து பாதுகாக்கப்பட்டு, இப்போது குழந்தையாகக் கைகளில் தவழ்வது அதன் வெற்றியைப் பறைசாற்றும் சிறப்பான சான்று! 10 ஆண்டுகள்வரைகூட இந்த ஃப்ரீஸ் தொழில்நுட்பம் பாதுகாக்கவல்லது” என்ற டாக்டர், இந்தத் தொழில் நுட்பத்தை யாரெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொன்னார்.

”பொதுவாக, 30 வயதுவரை பெண்களுக்கு சினைப்பையின் ஆரோக்கியம், முட்டை வெளிப்படுவது என்று தாய்மை அடைவதில் எந்தக் குறையும் ஏற்படாது. வயது அதிகரிக்கும்போது, சில சிக்கல்கள் ஏற்படுவதுடன், முட்டைகளின் தரமும் குறையலாம். எனவே, 30 வயதுவரை திருமணத்தை, குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடுபவர்கள் கருமுட்டைகளை ஃப்ரீஸ் செய்து பாதுகாக்கலாம்.

p20b

மேலும் புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்கிறவர்களும் இந்த முறையில் முட்டையைப் பாதுகாத்து வைக்க லாம். காரணம்… கீமோ, ரேடியேஷன் என்று சிகிச்சை எடுக்கும்போது, அந்த மருந்துகளின் வீரியம் சினைப்பையில் உள்ள முட்டைகளை அழித்துவிடலாம். இதனால் அவர்கள் குழந்தைப்பேறுக்கான வாய்ப்பை முற்றிலும் இழக்க நேரிடும். எனவே, இவர்கள் சிகிச்சையை ஆரம்பிக்கும் முன்னரே முட்டைகள் அல்லது சினைப்பை திசுக்களை எடுத்து ஃப்ரீஸ் செய்து பாதுகாக்கலாம். பின்னர் சிகிச்சை முடிந்ததும் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தைப்பேறு பெறலாம்.

புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொள்ளவிருக்கும் ஆண்களும் இதேபோல தங்களின் விந்தணுக்கள், டெஸ்டிஸ் திசுக்களை ஃப்ரீஸ் செய்து பாதுகாத்து, பின்னர் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று அறியவேண்டிய தகவல்கள் தந்து நிறைவுசெய்தார், டாக்டர் நிர்மலா சதாசிவம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button