மருத்துவ குறிப்பு

இனி வெட்கமும் வேண்டாம்… வேதனையும் வேண்டாம்!

சர்வே

‘சம்ஸ்’ – இது காலேஜ் பெண்கள் உபயோகிக்கும் பீரியட்ஸ் குறித்த சங்கேத வார்த்தை. இதுபோல 5 ஆயிரத்துக்கும் அதிக சங்கேத வார்த்தைகளை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள பெண்கள் உபயோகித்து வருகின்றனர். ‘இன்று வரையிலும், மாதவிடாய் சுழற்சி நாட்களை பெரும் சாபக்கேடாக நினைக்கும் பெண்கள் வெளியே சொல்வதற்குக்கூட தர்மசங்கடமாக உணரக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்’ என்று மிகப்பெரிய சர்வேயின் முடிவு ஒன்று கூறுகிறது.

‘மாதவிலக்கின் அறிகுறிகளை, ஆண்களுடன் வேலை செய்யும் இடங்களில் உள்ள பெண்கள் பலர் முன்னிலையிலும் வெளிப்படுத்த தயங்குகின்றனர். வேலைக்குச் செல்வதையே தவிர்க்கின்றனர். உறவினர் முன்பு மறைக்க முற்படுகின்றனர். பள்ளி செல்வதையே நிறுத்தும் மாணவிகளும் உண்டு’ என்று உலக அளவில் 190 நாடுகளில் 90 ஆயிரம் பெண்களிடம், பெர்லினை சார்ந்த ‘க்ளு’ என்ற பெண்களுக்கான சுகாதார நிறுவனம் ஒன்று நடத்திய சர்வேயில் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்கவாழ் ‘ப்யூர்ட்டோ ரிக்கன்’ இனத்தவர்களின் நிலை வேறு. இவர்கள் தங்களுடன் பணிபுரியும் ஆண் பணியாளர்களிடத்திலும், தன் வகுப்பு மாணவர்களிடத்திலும், குடும்பத்தினரிடமும் தங்களுடைய பீரியட்ஸை பற்றி எந்தவித தயக்கமில்லாமல் பேசுகின்றனர். அரேபிய பெண்களிடையே இதைப் பற்றிய பரிமாறல்கள் மிகக் குறைவே. ஜப்பானிய பெண்களில் 13 சதவிகிதத்தினரே தாங்கள் சவுகரியமாக உணர்வதாகக் கூறுகின்றனர்.

“இன்றளவும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்கள் தாங்கள் வேலை செய்யும் இடத்திலும், கல்லூரி மற்றும் பள்ளிகளிலும் – ஏன் தங்கள் குடும்பத்தினரிடையே கூட இது பற்றிப் பேசுவதை சிரமமாகவே உணர்கிறார்கள். பெண்களின் சுகாதார முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான கல்வி முறையையும் தொடர்ந்து விரிவுபடுத்தும்போது உலக அளவில் அதற்கான முன்னேற்றத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார் க்ளு அமைப்பின் மேலாளர்.

உலகில் 17 சதவிகிதப் பெண்கள், ‘நாங்கள் மாதவிடாய் சுழற்சியில் இருப்பதை மற்றவர்கள் கவனித்துவிடுவார்களோ என்ற அச்சத்தால் பள்ளி நாட்களையும், விழாக்களில் கலந்து கொள்வதையும் இழக்கிறோம்’ என்கின்றனர். ஆஸ்திரேலியா மற்றும் சிலி நாட்டுப் பெண்கள் இதே காரணத்தால் தங்கள் வாழ்நாளில் பல முக்கியமான விழாக்களை தவறவிட்டதாக தெரிவிக்கின்றனர். இந்த சர்வேயில், சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் இத்தாலிய பெண்களில் 5 முதல் 8 சதவிகிதப் பெண்களே இந்தச் சங்கடங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

உலக மகளிர் சுகாதார கூட்டமைப்பின் தலைவரான ஃப்ரேனாய்ஸ் ஜிரார்ட், ‘பெண்கள் தங்கள் இனவிருத்தி சுகாதாரம் மற்றும் பாலியல் பற்றிய கருத்துகளை சுதந்திரமாக பேசவும், உரிமைகளை அறிந்து கொள்ளவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்க நாம் மேலும் முயல வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார்.ld4244

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button